
பிரசித்தி பெற்ற சொரிமுத்து ஐயனார் கோயிலில் ஆடி அமாவாசை விழா இன்று கால்நாட்டுடன் தொடங்கியது.திரளான பக்தர்கள் பங்கேற்று விரதத்தை துவக்கினர்.
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே சொரிமுத்து ஐயனார் கோயிலில் கால் நாட்டு நிகழ்ச்சியுடன் 10 நாள் ஆடி அமாவாசை திருவிழா இன்று கோலாகலமாக தொடங்கியது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் காப்புக்கட்டி விரதம் தொடங்கினர்.
களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட காரையாறு வனப்பகுதியில் அமைந்துள்ள சொரிமுத்தையனார் கோயிலில் ஆண்டுதோறும் ஆடி அமாவாசை நிகழ்ச்சி சிறப்பாக கொண்டாடப்படுகிறது. ஆடி அமாவாசை திருவிழாவிற்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து வழிபட்டுச் செல்வர்.

இந்த ஆண்டு ஆக. 16இல் ஆடி அமாவாசை வருவதையடுத்து இன்று கால் நாட்டுடன் ஆடி அமாவாசை திருவிழா தொடங்கியது. கால்நாட்டு நிகழ்ச்சி அய்யனார் கோயில் பரம்பரை அறங்காவலர் சங்கர் ஆத்மஜன் தலைமையில் கால்நாட்டு நடைபெற்றது. முன்னதாக கால் நாட்டு நிகழ்ச்சியை முன்னிட்டு சொரிமுத்து அய்யனார், சங்கிலி பூதத்தார், தளவாய் மாடசாமி, தூசி மாடசாமி, பட்டவராயர், இசக்கியம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் ஆராதனை நடைபெற்றது.
கால்நாட்டைத் தொடர்ந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் காப்புக் கட்டி 10 நாள் விரதத்தைத் தொடங்கினர். மேலும் விரதம் இருக்கும் பக்தர்கள் கோயில் பகுதிகயில் குடில்கள் அமைத்து தங்கி விரதம் இருந்து ஆடி அமாவாசை அன்று தங்கள் விரதத்தை நிறைவேற்றி நேர்த்திக்கடன் செலுத்துவர்.
கால் நாட்டு நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் கோயில் நிர்வாகம் மற்றும் பக்தர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.