
ஆன்மீகம், சமூக சேவை இரண்டையும் ஆராய்ந்து பார்க்கும்போது சமூகசேவை என்பது ஆன்மிகத்தில் ஒரு பாகமாக உள்ளது என்பதை அறிய முடிகிறது. சமூக சேவையும் ஆன்மீகமும் வேறுவேறல்ல.
ஆன்மீகம் என்றவுடன் கடவுள் வழிபாடு மட்டுமே அன்று. குடும்பத்திடமும் பிறரிடமும் இயற்கையிடமும் சமுதாயத்திடமும் நிறைவேற்ற வேண்டிய பொறுப்புகள் கூட இறைவழிபாட்டில் ஒரு பாகமே!
ஏனென்றால் இறைவன் எங்கோ பூஜை அறையிலோ மலை உச்சியிலோ வேறு லோகத்திலோ இல்லை! விஸ்வமே இறைவனின் வடிவம். அதனால் விஸ்வத்தில் இருப்பு கொண்டுள்ள நாம் எவற்றால் உயிரோடு இருக்கிறோமா எவற்றின் உதவியோடு வாழ்ந்து வருகிறோமோ அவற்றின் மீது நம் கடமைகளை நிறைவேற்ற வேண்டிய அவசியம் உள்ளது. அதுவும் இறைவனுக்குச் செய்யும் சேவையே!
சிறு வயதிலிருந்தே குழந்தைகளுக்கு ஆன்மீகத்தைப் பற்றி சரியாக கற்றுக் கொடுத்து வந்தால் அவர்கள் சுயநலவாதிகளாக மாறாமல் மக்களுக்கு உபகாரம் செய்யும் சுபாவம் கொண்டவர்களாக ஆவார்கள்.
ஆன்மீக வித்யையை மதம் பெயரோடு மூலைக்குத் தள்ளி விடக் கூடாது. பாரதீய மகரிஷிகள் அளித்த ஆன்மீக வித்யை பிரபஞ்சத்தில் அனைத்து மனித குலத்துக்கும் போதிக்கப்பட வேண்டும். அதிலும் குறிப்பாக பாரத தேசத்தில் கல்விக்கூடங்களில் பாடப் புத்தகமாக வைக்கப்பட வேண்டும்.
சமுதாய சேவையும் ஆன்மீக தர்மத்தில் இன்றியமையாதது என்பதைக் காட்டும் சில ருஷி வாக்கியங்களை இப்போது பார்போம்.
“யார் பிறருக்கு உபயோகப்படும் விதமாக நீர் நிலைகளை உருவாக்குகிறார்களோ அவர்கள் கடவுளின் கிருபைக்கு பாத்திரமாகிறார்கள். அப்படிப்பட்டவர்கள் புண்ணியம் செய்தவர்களாகிறார்கள்”. அதாவது நாம் ஏற்பாடு செய்த நீர்நிலை மக்களுக்குப் பயன்பட வேண்டும். அனைவருக்கும் பலனளிக்கும் விதமாக நீரை அளித்த புண்ணியம் நம்மைக் காத்தருளும் என்று இதனை பகவத் சேவையாக கூறியுள்ளார்கள்.
அதேபோல் மரம் நடுவது மிகச்சிறந்த சேவை. ஒரு விருட்சத்தின் அடிப்பகுதியில் தேவ, ருஷி, பித்ரு தர்ப்பணங்கள் செய்தால் அந்த மரம் அந்த நீரின் மூலம் நன்கு வளரும். அதோடுகூட அச்செயல் பித்ரு தேவதைகளுக்கு நற்கதியை அருளும் என்று கூறியுள்ளார்கள். அதனால் பித்ரு தேவதைகள் உய்வடைய வேண்டும் என்ற உத்தேசத்தோடு விருட்சங்களுக்கு நீர் ஊற்றுவதை மிகச் சிறந்த செயலாக வர்ணித்துள்ளார்கள். அந்த மரம் பலருக்கும் நிழலும் பழமும் அளித்து பயனளிக்கிறது. “மரம் நடுங்கள்! இயற்கையை காப்பாற்றுங்கள்!” என்று தற்காலத்தில் கோஷங்களைக் கேட்டு வருகிறோம். இவை பற்றி நம் புராணங்களில் ருஷிகள் எத்தனை அழகாக வர்ணித்துள்ளார்களோ, பாருங்கள்! நம் நலனுக்கும் நம் பூர்வீகர்களின் நலனுக்கும் கூட மரங்களை நடுவது புண்ணியம் அளிக்கும் என்று கூறியுள்ளார்கள்.
இனி ஞான தானம், அன்னதானம் இவ்விரண்டையும் பற்றிக் கூறியுள்ளவற்றை சிறிது பார்க்கலாம்.
அனைத்து தானங்களிலும் சிறந்தது அன்னதானம். இன்னொரு கோணத்தில் அதைவிட உயர்ந்த தானத்தைப் பற்றி கூட சாஸ்திரத்தில் கூறியுள்ளார்கள். அன்னதானத்தை விட உயர்ந்தது ஞானதானம் என்றார்கள். முதலில் உடல் என்பது இருந்தால்தானே பின்பு ஞானத்தை அறிவதற்கு வாய்ப்பு கிடைக்கும். அதனால் அன்னதானத்திற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.
ஞானதானம் மனிதனுக்கு விவேகத்தை அளிக்கிறது. விவேகத்தோடு கூடியவன் தானே உணவை சம்பாதித்துக்கொள்ள முடியும். ஆதலால் ஞானத்தை உயர்த்தி கூறியுள்ளார்கள். அதுமட்டுமல்ல. சரியான ஞானமுள்ளவன் கஷ்ட நஷ்டங்களைப் பொறுத்துக் கொண்டு சிறிது சிறிதாக உயர்ந்து பரமாத்மாவை அடைய முடியுமாதலால் ஞானத்திற்கும் முக்கியத்துவம் அளித்துள்ளார்கள். அதனால் கல்விக்கூடங்களை அமைப்பதும், அறிவூட்டும் நூல்களை மாணவர்களுக்கு அளிப்பதும், கல்வியை போதிப்பதும் முக்கியமானவையே! இது லௌகீக ஞானதானம் எனப்படுகிறது. இறை ஞானத்தையும் ஆன்மீக அறிவையும் அளிப்பது பரமார்த்திக ஞானதானம் என்று அழைக்கப்படுகிறது. எனவே பரமார்த்திக அறிவு, உலகியல் அறிவு இவ்விரண்டு வித்யைகளும் ஞான வித்யைகளே! அதனை மக்களுக்கு அளிப்பதும் அவற்றை கற்றுத்தரும் அமைப்புகளை ஏற்படுத்துவதும் ஞான தானத்தில் இன்றியமையாத செயல்கள்.

அன்னதானத்திற்கு சமமான தானம் இன்னொன்று இல்லை என்று கூறியுள்ளார்களே, இதற்கு என்ன காரணம்? உணவு சாப்பிட்ட உடனே திருப்தியை அளிக்கிறது. ‘போதும்’ என்று கூட சொல்ல வைக்கிறது. “இனி போதும்!” என்று திருப்தி ஏற்படுத்தும் தானம் அன்னதானமாதலால் அது உயர்ந்தது என்பர். இது சாதாரணமான விளக்கம்.
ஆனால் இதில் இன்னும் பல ரகசியங்கள் உள்ளன. உண்மையில் மனித உடலே அன்னத்தால் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. உணவினால் தயாராகுவது மானுட தேகம். அதுமட்டுமல்ல ஜீவன் பிறப்பதற்கான காரணம் கூட அன்னமே! ஜீவன் அனேக லோகங்களில் சஞ்சரித்து மீண்டும் பூமிக்கு வரவேண்டியிருக்கும்போது, அந்த ஜீவன் சூட்சும வடிவில் தானியங்களை வந்தடைகிறான். அந்த தானியத்தை உண்ட ஆணிடம் முதலில் ஜீவன் வந்து சேருகிறான். அந்த ஆணின் மூலமும் தாயின் கர்ப்பத்தை அடைந்து, பின்னர் உடலைப் பெறுகிறான்.
“அன்னாத் பவந்தி பூதானி” என்ற கூற்று பகவத் கீதையில் காணப்படுகிறது. அதே வாக்கியத்தை வியாசரும் கூறுகிறார். உணவின் மூலமாகவே மனிதன் உடலைப் பெறுகிறான். உணவு கிடைக்காவிட்டால் மரணமடைந்து விடுகிறான். உணவு உடலுக்கு பலத்தையும், அந்தக்கரணத்திற்கு புத்தி பலத்தையும் அளிக்கிறது. அதனால் பிறருக்கு உணவு படைப்பதன் மூலம் அவர்களுடைய உடல் புத்தி இரண்டும் காப்பாற்றப்படுகிறது. அதனால் அன்னதானம் மிகச் சிறந்தது என்று தெரிவிக்கிறார்கள்.
அதோடு கூட “உணவின் மூலம்தான் மனம் ஏற்படுகிறது. உணவு மூலமாகவே பிராணன் ஏற்படுகிறது. அன்னம் மூலமாகவே வாக்கு ஏற்படுகிறது” என்று கூறியுள்ளார்கள். எனவே சரீரத்தில் த்ரிகரணங்களுக்கும் அன்னமே காரணமாகிறது. இந்த மூன்று கருவிகளும் மனிதனிடம் நன்றாக இருந்தால்தான் அவனால் எதையும் சாதிக்க முடியும்.
“முதலில் தான் என்பவன் இருந்தால்தானே உலகில் எதையாவது சாதிக்க இயலும்?” என்கிறார் அன்னமையா ஒரு கீர்த்தனையில்.
“மனிதன் அனைத்தையும் சாதிப்பதற்கு ஆதாரம் உடல். அந்த உடல் நிலைபெறுவதற்கு ஆதாரம் உணவு. உணவு ஜீவனை உயிர்ப்பிக்கிறது. ஜீவனை காப்பாற்றுகிறது. அப்படிப்பட்ட அன்னதானம் செய்வது உயர்ந்த செயல்” என்றும் “அனைத்தும் உணவின் மீதே பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. வலிமை கொடுக்கும் அன்னத்திலேயே உயிர் நிலைபெற்றிருக்கிறது” என்றும் விளக்கிக் கூறுகிறார் வியாசர்.
“அன்னம் பரப்பிரம்ம ஸ்வரூபம்!” என்ற சொல் கூட புராணங்களில் காணப்படுகிறது. அன்னதானம் என்பது பசியோடிருப்பவன் எப்படிப்பட்டவனாக இருந்தாலும் அவனுக்கு உணவளிக்கும் செயல். மேலும் ஒருவனுக்கு நாம் பணமோ பொருளோ கொடுத்தால் அவன் அதை நல்ல விதமாகவோ தீய வழியிலோ பயன்படுத்தக் கூடிய வாய்ப்புள்ளது. ஆனால் உணவை யாரும் தீய வழியில் உபயோகிக்க முடியாது.
உணவை உண்ணும் போது அதனை அவன் வாயில் இட்டு கொண்டாலும் அவன் வயிற்றில் அதனை ஏற்பது ஜடராக்கினி வடிவத்தில் உள்ள பரமாத்மாவே!
“அஹம் வைச்வானரோ பூத்வா ப்ராணினாம் தேஹமாச்ரித:” என்கிறான் கிருஷ்ண பரமாத்மா. அதாவது ஒவ்வொருவரின் வயிற்றிலும் உள்ள ஜடராக்கினி பகவத் சொரூபம். நாம் சாப்பிடும் உணவை முதலில் அக்னி ஏற்கிறது. அதனால், அன்னதானம் செய்கிறோம் என்றால் அங்கு நடக்கும் கிரியை என்ன? உண்பவரின் உடலில் ஜடராக்கினி வடிவில் இருக்கும் நாராயணனிடம் அன்னம் என்ற ஆஹுதியை அளிக்கிறோம் என்று பொருள். இந்த எண்ணத்தோடு அன்னதானம் செய்ய வேண்டும்.
இன்னொரு மனிதனுக்கு உணவு அளிக்கிறேன் என்ற கர்வத்தோடு கொடுக்கக்கூடாது. நாராயணனுக்கு அர்ப்பணம் செய்கிறேன் என்ற உணர்வோடும் அவன் வயிற்றில் ஜடராக்கினி வடிவில் இருக்கும் நாராயணன் என்னும் அக்னிஹோத்திரத்தில் அன்னம் என்ற அஹுதியை அளிக்கிறேன் என்ற எண்ணத்தோடும் அளிக்க வேண்டும்.
“அதிதி தேவோ பவ”, “அப்யாகத ஸ்வயம் விஷ்ணு!” என்று கூறுவதற்கும் காரணங்கள் இவையே!
அவ்விதமாக உணவளிக்கும் போது என்ன விளைகிறது என்றால் அது மகா புண்ணியமாக நம்மைப் பாதுகாக்கிறது. நாம் எந்த லோகத்திற்குச் சென்றாலும் அந்த லோகத்திற்கு ஏற்ற உணவாக அங்கும் நம்மை வாழ வைப்பது அன்னதானம்தான். அதனால் அன்னம் அளித்தவனுக்கு அன்னம் கிடைக்கிறது என்பதால் அன்னதானம் மிக உயர்ந்தது என்று கூறப்படுகிறது.
இது போன்ற சமுதாயத்திற்குப் பயன்படும் கருத்துக்களை கூறும் ருஷி வாக்கியங்களுக்கு வந்தனம்!
தெலுங்கில் – பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா
தமிழில் – ராஜி ரகுநாதன்



