spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஆன்மிகம்மகா பெரியவர் மகிமைகருணைக் காஞ்சி கனகதாரை – பாகம் 5

கருணைக் காஞ்சி கனகதாரை – பாகம் 5

“அப்ப என் ஒத்தனைத்தான் பைத்தியக்காரன்னு சொல்லியிருப்பா, திட்றவாளானா திட்டியும் இருப்பா?” என்ற ஸ்ரீசரணர் நியாய தேவதையாகத் தொடர்ந்தார். “எனக்கு வேணுந்தானே? நல்ல பேரோட பெரிசா ஒரு பத்ரிகை நடத்றவா, கதை-கட்டுரை எழுதறவா-ன்னா, அவா நா இழுத்த இழுப்புக்கெல்லாம் வருவா-ங்றதுக்காக, நான் பாட்டுக்கு பொறுபில்லாம க்ஷணச் சித்தம், க்ஷணப் பித்தம்னு இன்னிக்கு ஒண்ணு, நாளைக்கு ஒண்ணு சொல்லி அவர் கார்யத்தை கெடுத்து, பேரையும் கெடுக்கப் பாத்தேன்னா பைத்யப் பட்டம், திட்டு எல்லாம் வாங்கத்தானே வேணும்?” ஒன்றுமே சொல்லத் தோன்றாமல் அயர்ந்து அமர்ந்திருந்தேன். அந்த பகவான் தாமாகவே குற்றவாளிக் கூண்டில் ஏறித் தம்மீதே குற்றப்பத்ரிகையும் தாக்கல் செய்து கொள்ள என்றுமே தயங்கியது இல்லை. இப்படி, நாம் அவர் குறித்து சொல்லத் தயங்கும் பல விஷயங்கள் அவரே ஒழிவின்றித் தெளிவாகக் கூறி எத்தனையோ முறை கேட்டிருக்கிறேன். இப்போது ஓர் இனிய திருப்பம் ஏற்பட்டது, குற்றப் பத்திரிகையாக மட்டும் முடிந்து விடாமல், அவரே வக்கீலாகி அந்தக் ‘குற்ற’த்துக்கு நியாயம் சொல்லவும் செய்தார்.! “மொதல்ல பெர்மிஷன் குடுத்தப்போ, ‘பல பேருந்தான் எழுதுறா, என்னமோ அவாளுக்கு ஒரு ஆசை; பக்தி! வேண்டாம்-னா வருத்தப்படுவா-ன்னு நானும் தலையாட்டிடறது. பெர்மிஷன்னு கேக்காமயேகூட எழுதறவாளும் இருக்கா. ஸரி-தப்பு நிச்சயம் பண்ணிக்காமயே செல பேர் என்னென்னமோவும் எழுதறா. அப்படியிருக்கச்சே, பொறுப்போட எழுதுறவன் பொறுப்பா நடத்ற பத்ரிகை-ல எழுதணும்னு கேக்றச்சே ஏன் வேண்டாம்-னணும்’னுதான் ஸரி-ன்னேன். “இன்னும் சொல்லனும்னா, நீ எப்டி எழுதறே, பாக்கணும்னு எனக்கே ஒரு குதூஹலம் (ஒரு விதமான ஆர்வ எதிர்பார்ப்பு; curiosity என்பது) கூட இருக்கத்தான் செஞ்சது. “அப்புறம் அது ஞாபகத்துலேந்தே போய்டுத்து அட்வெர்டைஸ்மெண்ட் வந்து பாத்துவிட்டு மறுபடி ஞாபகம் வரத்தான் வந்தது. அப்பவும் ‘லைட்’டா விட்டுட்டேன். மொத வாரம் நீ மொகவுரையா எழுதியிக்கறதைப் பாத்துவிட்டுத்தான் அப்டியே அபிப்ராயம் மாறிடுத்து.” உடல்லெலாம் செவியாக கேட்க ஆரம்பித்தேன். “என் சரித்ரம் வரணும்னு எனக்கு லவலேசங்கூட இல்லே. அப்டி ‘சரித்ரம்’னு எழுதும்படி நான் ஒண்ணும் பண்ணினதா எனக்குத் தெரியலே. ஆனாலும் அப்டி ஒண்ணும் வரணும்னு இருந்தா – இது இது நடக்கணும்-னு இருந்து அப்படியே நடக்றதே, அந்த மாதிரி, இதுவும் இருந்தா – நீ எழுதறது, பூராவா (பூர்ணமாக) இருக்கணும் – “சரிதம்னு எழுதறே, அதுக்கு ‘முற்றும்’ போடுவீயோன்னோ? போட்டுத்தானே ஆகணும்? அப்டின்னா என் சரித்ரத்துக்கு நீ ‘முற்றும்’ போட்டுடுவியாக்கும்!” – பெரிதாகச் சிரித்தார். என்னை அசத்திவிட்டது அந்தக் கேள்வியோ, பதிலோ, எதுவோ ஒன்று! குறுகுறு என்று குறும்பு விநோதம் நயனத்திலும் அதரத்திலும் நடனமிடத்தான் கேட்டாரென்றாலும் குறும்பு விநோதமா அது? அவரது சரித்ரம் என்ற வாழ்க்கை வரலாறு முற்றி முடிவதை அல்லவா சொல்கிறார்.? அதையும் அடக்கியே நான் அவரது முழு வாழ்வு பற்றியும் பூர்த்தியாக- ‘பூராவா’ எழுதவேண்டும் என்றல்லவா சொல்கிறார்? ஆக ‘கல்கி’ ஒரு பிழையும் செய்யவில்லை. பெரியவாளின் ஜீவிதப் பூர்த்திக்குப் பிற்பாடே சரிதம் பிரசுரமாக வேண்டும் என்பது தான் தற்போது தொடரை நிறுத்தச் சொன்னதற்கு காரணம் என்று ஸ்பஷ்டமாயிற்று. நமக்கு அது வருவதில் லவலேசமும் ஈடுபாடில்லை என்று அவர் கூறியதில் எனக்கு எள்ளளவும் ஆச்சர்யமோ, அவநம்பிக்கையோ இல்லை. போதும் போதும் எனுமளவுக்குத் தெரிந்த ‘ட்ரூயிசம்’தான் அது. ஆனால் அத்யாச்சர்யமான விஷயம், ‘இது இது நடக்கணும்னு இருந்து அப்படியே நடப்பதில்’ அவரது பெருவாழ்வைப் பூர்த்திப்படலம் முடிய எழுத வேண்டும் என்றுதான்! ‘நடக்கணும்—னு இருந்—து’ என்ற வார்த்தைகளில் அவர் கொடுத்த நயமான அழுத்தம் எந்த உட்பொருளை எனக்கு உணர்வித்ததோ அதை இங்கே கெட்டி எழுத்தும் தெரிவிக்கமுடியாது! இன்ன நடக்க வேண்டுமென்று பராசக்தியின் சங்கற்பத்தில் இருப்பதைத்தான் அவர் குறிப்பிட்டார் என்பதே என் உறுதியுணர்வு. ‘அந்த மேலிடத்துச் சங்கற்பமாயின் இன்றைக்குத் தொடர் நின்றாலென்ன? என்றைக்கோ அது வரத்தான் செய்யும்’ என்ற எண்ணம் என்னை முற்றிலும் சமனப்படுத்திவிட்டது.! -தொடரும்… ஸ்ரீ ரா.கணபதி அண்ணா அவர்களின் தொகுப்பில் இருந்து பிரசுரிக்கபட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe