(இந்த வார கல்கி) ஆடல் கலை என்றதும் ஒரு விநோத விளையாட்டுதான்! நிஜமாக வாழ்க்கையிலே எழும்பாத பாவங்களை உண்டாக்கிக் கொண்டு, வாழ்க்கைக்கு அவசியம் என்று சொல்ல முடியாத ஜதி பேதங்களைப் போட்டுக் கொண்டு, இல்லாத பாத்திரங்களை இருக்கிறதாக வைத்துக் கொண்டு அபிநயம் செய்கிறதால் அது விளையாட்டுதானே? “நிஜம்’ என்று நாம் நினைக்கும் வாழ்க்கையே பொய்ம்மாயையாகிவிடும் அநுபூதி வரை அபிநயக் கலை அதன் உச்ச ஸ்தானத்தில் கொண்டுவிட்டு விடுவதாகச் சொல்கிறார்கள். அப்படியானாலும், அதுவும் விளையாட்டில் ஆரம்பித்து விளையாட்டு விநோதமாகவே போவதுதானே? உச்சியான பூர்த்தி ஸ்தானத்தில் விளையாட்டே வினையாவதாகச் சொல்லலாம்! (ஸ்ரீசரணர் சிறிது பொழுது தமக்குள்ளே சிரித்துக் கொண்டிருந்து, பின்னர் தொடர்வார்) ஸரியாய்ச் சொன்னால், விளையாட்டால் வினையே போவதாகச் சொல்லலாம்! அப்படிப்பட்ட நாட்டிய விளையாட்டாகவே இந்தப் பொய்ம் மாய ஜகத்தின் ஸ்ருஷ்டியிலிருந்து ஆரம்பித்து அதிலிருந்து விடுவித்து சிதம்பரமான ஞானாகாசமாகிற பரம ஸத்யத்தில் சிவமாகிற தன்னுடன் தானாகவே ஐக்கியப்படுத்திக் கொள்வதான அவுக்ரஹம் வரையில் “ஐந்தொழில்’கள் என்கிறவற்றைப் பண்ணி விடுபவன்தான் சிதம்பரத்து ஆட்டக்காரன். ஸ்ருஷ்டி – ஸ்திதி – ஸம்ஹாரம் (என்பவை) எல்லாருக்கும் தெரிந்த மூன்று தொழில்கள். இந்த மூன்றுமே பரம ஸத்யத்தை மறைத்துவிடும் மாயை என்ற திரைக்குள் நடப்பவைதான்! அந்த மாயத் திரையைப் போட்டு மறைக்கும் “திரோதானம்’ என்பது நாலாவது தொழில், திரையை நீக்கி, ஞானாகாசத்தில் மோக்ஷமளிக்கிற “அநுக்ரஹம்’ ஐந்தாவது தொழில். சாந்தன் எனப்படுகிற பரமேச்வரன் ஆட்டமாக ஆடிப் பண்ணும் இதையே மாயா விநோதன் எனப்படுகிறவன் சாந்தமான தூக்கமாகப் பண்ணிக்காட்டுவதில் அந்த இருவரும், யுனிடி இன் டைவர்சிடி நிரூபித்துக் காட்டுகிறார்கள்.
- ஜகத்குரு காஞ்சி காமகோடி ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகள்