மதுரை சித்திரை திருவிழாவின் முன்னோடியாக சப்பர முகூர்த்த விழா மதுரையை அடுத்த அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் கோவில் வளாகத்தில் நடைபெற்றது. மதுரை அழகர்கோவில் கள்ளழகர் கோவில் சித்திரை திருவிழா சப்பர முகூர்த்த விழா விமரிசையாக நடைபெற்றது.
சித்திரை திருவிழா மதுரையில் நடைபெறும் சித்திரை பெருந்திருவிழா உலக பிரசித்தி பெற்றது ஆகும். மதுரை மீனாட்சி அம்மன் கோவில் திருக்கல்யாணம் முடிந்ததும், அதை தொடர்ந்து கள்ளழகர் தங்க குதிரை வாகனத்தில் வைகை ஆற்றில் இறங்கும் வைபமும் ஆண்டு தோறும் நடைபெறுவது வழக்கமாக உள்ளது. அப்போது லட்சக்கணக்கான பக்தர்கள் இந்த விழாவில் கலந்து கொள்வார்கள்.
மேலும் 108 வைணவ ஸ்தலங்களில் ஒன்றானது, மதுரையை அடுத்த அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் கோவிலாகும். இக்கோவிலில் நடைபெறும் திருவிழாக்களில் சித்திரை திருவிழா முக்கியமானதாகும். இந்த திருவிழாவின் முன்னோட்ட நிகழ்ச்சியாக சப்பர முகூர்த்த விழா நேற்று கள்ளழகர் கோவிலின் உப கோவிலான மதுரை தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாசலபதி பெருமாள் கோவிலின் உள்பிரகார சன்னதி முன்பாக நடந்தது. சப்பர முகூர்த்த விழா மேளதாளம் முழங்க சப்பர முகூர்த்த விழா நடந்தது.
இதில் ஆயிரம் பொன் சப்பரத்திற்கு வேண்டிய மூங்கில் சேகரிக்கும் பணி சம்பிரதாய படி நடந்தது. பின்னர் ஸ்ரீதேவி, பூதேவி, சமேத பெருமாளுக்கு சிறப்பு பூஜைகளும், மஹா தீபாராதனைகளும் நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். வருகிற மே மாதம் 5-ந் தேதி கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்குகிறார். அதற்கு முன்னோட்ட நிகழ்வுதான் இது. இந்த விழாவில் கள்ளழகர் கோவில் துணை ஆணையர் ராமசாமி, தக்கார் பிரதிநிதி நல்லதம்பி, மீனாட்சி சுந்தரேசுவரர் கோவில், கூடலழகர்கோவில், நிர்வாக அலுவலர்கள், கண்காணிப்பாளர்கள் சேகர், பிரதிபா, அருள் செல்வம், கோவில் பட்டர்கள், பணியாளர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.