ஸ்ரீ சிருங்கேரி ஆசார்யர்களின் வித்யையும் விநயமும் (பகுதி-16)
– மீ.விஸ்வநாதன்
நித்ய பூஜை

மிகவும் ஆசாரசீலரான ஒரு பிராம்மணர் தன் பூஜையை ஸ்ரீமத் ஆசார்யரவர்களிடம் (ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகர பாரதீ மகாஸ்வாமிகள்) கொடுத்து அவர்களுடைய அனுக்கிரஹத்துடன் திரும்ப வாங்கிக் கொள்ள வேண்டும் என்று நினைத்து பூசைப் பெட்டியைக் கொண்டு வந்து சமர்ப்பித்தார்.
அப்பெட்டியைத் திறந்து அதிலுள்ள மூர்த்திகளை எடுத்து ஸ்ரீமத் ஆசார்யர் கவனித்து வருகையில் ஒரு ஸாலக்கிராமத்தைக் கையில் எடுத்துப் பார்த்தவுடன், “ஸ்வாமி ஏழு வருஷமாக பட்டினி போலிருக்கிறதே” என்று சொன்னார்கள். அந்த சிஷ்யர் திடுக்கிட்டு, “எனக்குத் தெரிந்து அப்படி ஓர் அபசாரமும் செய்யவில்லையே!” என்றார்.
அதற்கு ஸ்ரீமத் ஆசார்யாள்,” நீங்கள் பூஜை சரியாய்ப் பண்ண வில்லை என்று தெரிகிறது. இந்த மூர்த்திக்கு நித்யம் பால் அபிஷேகமும், பால் பாயசம் நிவேதனமும் செய்ய வேண்டும். ஏழு வருஷ காலமாக நடக்கவில்லை என்று தெரிகிறது” என்று சொன்னார்கள். அதன்பேரில் சிஷ்யர், “இப்பொழுது ஞாபகம் வருகிறது. என் தகப்பனார் இருக்கும் பொழுது அப்படியேதான் அபிஷேகமும், நிவேதனமும் செய்து வந்தார்.
அவர் இருக்கும் போதே நான் தனியாக பூஜை ஆரம்பித்துக் கொண்டு விட்டபடியால் அவர் காலம் சென்ற பிறகு அவருடைய பூஜையையும் என் பூஜையுடன் சேரர்த்துக் கொண்டு எல்லா மூர்த்திகளையும் வித்தியாசமன்னியில் ஒரே விதமாக அபிஷேகம் நிவேதனம் செய்து ஆராதனம் செய்து வருகிறேன்” என்றார்.
அதற்கு ஸ்ரீமத் ஆசார்யாள், ” அப்படியானால் உங்கள் பிதா இறந்து இப்பொழுது ஏழு வருஷங்கள் ஆயினவா?” என்று கேட்டார்கள். சிஷ்யர்,”ஆம்” என்று ஒப்புக் கொண்டார்.

அதன்பேரில் ஸ்ரீமத் ஆசார்யாள், “எல்லா மூர்த்திகளையும் ஒன்றாக வைத்து ஒரே மாதிரியாக ஆராதனம் செய்வது உசிதம் இல்லை. இனியாவது இந்த மூர்த்திக்கு நான் சொன்னபடி தனியாக பூஜை செய்யுங்கள்” என்று ஆக்ஞாபித்தார்கள்.
மூர்த்தி பூஜையில் நம்பிக்கை இல்லாதவர்களுக்கு இந்த சம்பவம் பொய் அல்லது நம்மத்தக்கதில்லை என்று தோன்றும். ஜகத் பூராவும் வியாபகராயிருக்கிற ஈஸ்வரன் சில பதார்த்தங்களில் விசேஷமாக ஸாந்நித்யம் அடைந்திருக்கிற விஷயம் ஞானிகளின் திருஷ்டிக்கு நன்கு புலப்படும் என்று நம்புகிற ஆஸ்திகர்களுக்கு இந்த சம்பவம் ஒரு விசேஷமான உபதேசமாகவே ஏற்படும்.
(ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகர பாரதீ மகாஸ்வாமிகளின் பெருமைகளைப் பற்றி ஸ்ரீ ஞானானந்த பாரதீ ஸ்வாமிகள் எழுதிய “ஸ்ரீ குருகிருபா விலாஸம்” என்ற நூலில் இருந்து பகிரப்பட்டது.)
“உங்கள் வாரிசு பூஜை செய்வார்”
நம்முடைய சனாதன தர்மத்தைக் கடைபிடிக்கும் ஆன்மிக நெறியாளர்கள் தங்களது குலதெய்வ வழிபாடு, இஷ்டதெய்வ வழிபாடு, குருபக்தி போன்ற வழிமுறைகளை மிகுந்த ஈடுபாட்டுடன் செய்து வருவார்கள். சிலர் குருவிடமோ, தங்களது வீட்டிற்குரிய வேத பண்டிதர்களிடமோ மந்திரோபதேசம் பெற்றுக் கொண்டு பஞ்சாயதன பூஜை, மேரு பூஜை போன்ற பூஜைகளையும் மிகுந்த சிரத்தையுடன் செய்து வருவார்கள். அப்படி பூஜை செய்து வரும் பெரியோர்கள் எங்களது கிராமமான கல்லிடைக்குறிச்சியில் அதிகம் வசித்து வந்தார்கள்.
ப்ரும்மஸ்ரீ ஹரிஹர சுப்ரமணிய சாஸ்திரிகள் என்ற ஸ்ரீமான் ஹரிஹர ஞானம் அவர்கள் ஒரு ஸ்ரீவித்யா உபாசகர். அவரிடம் உபதேசம் பெற்றுக் கொண்ட சீடர்கள் பலர்.
ஒவ்வொரு வருடமும் நவராத்ரி காலத்தில் அவரது இல்லத்தில் ஸ்ரீ சண்டி பாராயணமும், ஹோமமும் சிறப்பாக நடைபெறும். வீட்டின் நடு ரேழியில் பூஜை அறைக்கு நேராக ஒரு பெரிய ஹோம குண்டமே இருக்கும். பூஜை முடிந்து அன்னதானமும் நடைபெறும்.
அவரது பூஜையில் ஸ்ரீ மஹாமேரு, ஸ்ரீ ராஜராஜேஸ்வரி, ஸ்ரீ காமேஸ்வரரின் இடது மடியில் அம்பாள் ஸ்ரீ காமேஸ்வரி அமர்ந்து கொண்டிருக்கும் அழகிய விக்ரஹம், மற்றும் பஞ்சாயதன பூஜா சுவாமிகளும் உண்டு.
ஒருநாள் தனது காலத்திற்குப் பின்பு இந்த பூஜைகளை யார் செய்வார்கள்? என்ற எண்ணம் தோன்றவே, தான் தினமும் வழிபட்டுவரும் அந்த பூஜா விக்ரஹங்ககளை எடுத்துக் கொண்டு தங்களது குருநாதர் சிருங்கரி ஜகத்குரு ஸ்ரீ அபிநவ வித்யா தீர்த்த மகாஸ்வாமிகளை தரிசனம் செய்யச் சென்றிருக்கிறார் ஸ்ரீமான் ஹரிஹர ஞானம் அவர்கள். குருநாதரை நமஸ்கரித்து, தனக்குப் பிறகு பூஜைகளைச் செய்ய யார் இருக்கிறார்கள்? அதனால் இந்த விக்ரகங்களைத் தங்கள் மூலம் ஸ்ரீமடத்தில் ஒப்படைக்க விரும்புகிறேன் என்று பணிந்து கேட்டுக் கொண்டிருக்கிறார்.
இதைக் கேட்ட ஸ்ரீ ஆசார்யாள்,” உங்களுக்கு வாரிசு இருக்கிறார்கள் அல்லவா?” என்று கேட்க, ” இருக்கிறார்கள்…ஆனால் அவர்களுக்கு இந்த சிரத்தை இருக்குமா என்று தெரியவில்லை?” என்றார். ” உடனே ஸ்ரீ மஹாமேருவைக் கையில் எடுத்து வைத்துக் கொண்டு எவ்வளவு அழகாக இருக்கிறாள் அம்பாள் என்று சொல்லி, நீங்கள் தினமும் நவாவர்ண பூஜை செய்து அம்பாளை ஆராதித்து வருகிறீர்…அதற்கான பலன் நிச்சயம் உண்டு. ஒரு காலத்தில் உங்களது வாரிசு இந்த பூஜைகளைச் செய்வார். அவர்கள் வேறு எந்த மந்திரமும் சொல்ல வேண்டாம். ஸ்ரீ மஹாமேருவுக்கு ருத்ரம் சொல்லி பாலபிஷேகம் செய்து ஒரு பூவை மிகுந்த சிரத்தையுடன் போட்டாலே போறும். அவர்கள் ஸ்ரேயஸ்யாக இருப்பார்கள். அதனால் இந்த பூஜா விக்ரகங்களை நீங்களே வைத்துக் கொண்டு பூஜை செய்யுங்கள். காலம் வரும்பொழுது எல்லாம் சரியாகும்” என்று ஆசீர்வாதம் செய்தார்களாம்.

இந்தச் செய்தியை அவர்களது குடும்ப நண்பரான கல்லிடைக்குறிச்சி ஸ்ரீமான் குருசுவாமி சாஸ்திரிகளே, ஸ்ரீமான் ஹரிஹர ஞானம் அவர்களுடைய மூத்த குமாரன் ஸ்ரீ H. குருஸ்வாமியிடம்,” உன்னோடு அப்பாவிடம் ஸ்ரீ ஆசார்யாள் சொன்னபொழுது பக்கத்தில் நானும் இருந்து கேட்டேன். மகான்கள் வாக்கு சத்யம்” என்று சொன்னாராம்.
“தந்தையார் ஸ்ரீமான் ஹரிஹர ஞானம் அவர்கள் காலமான பிறகு ஸ்ரீ மஹாமேரு, ஸ்ரீ கணபதி விக்ரஹங்களுக்கு தானோ, தனது சகோதரன் ஸ்ரீ H. கிருஷ்ணன் அவர்களின் குடும்பத்தினரோ தவறாமல் தினமும் பூஜை செய்து வழிபட்டு வருவதாகவும், மற்ற பூஜா விக்ரஹங்களை ஸ்ரீமான் ஹரிஹர ஞானம் அவர்களது சகோதரியின் குமாரரான ஸ்ரீமான் சோமநாதன் அவர்கள் (தற்சமயம் மும்பையில் வசித்து வருகிறார்.) மிகுந்த சிரத்தையுடன் பூஜை செய்து வருவதாகவும், அனைவருக்கும் தந்தையாரே மந்திரோபதேசம் செய்து வைத்திருக்கிறார்கள் ” என்று ஸ்ரீ குருஸ்வாமி அவர்கள் கூறினார்.
“இப்பொழுதெல்லாம் நவராத்திரி உத்சவம் மும்பையில் உள்ள ஸ்ரீமான் சோமநாதன் அவர்களின் இல்லத்தில் வைத்து சிறப்பாக நடந்து வருகிறது. அந்தக் காலங்களில் ஸ்ரீ மஹாமேருவை அங்கே பூஜை செய்யக் கொண்டு செல்வோம். சிருங்கேரி ஜகத்குரு ஸ்ரீ பாரதீ தீர்த்த மகாஸ்வாமிகளின் ஆசிகளைப் பெற்றுத்தான் நவராத்திரி உற்சவத்தை ஸ்ரீமான் சோமநாதன் அவர்கள் மும்பையிலும், ஸ்ரீமான் இராமகிருஷ்ணன் அவர்கள் சென்னை, மடிப்பாக்கத்திலும் செய்து வருகின்றார்கள்” என்று பக்திப் பெருக்கில் ஸ்ரீ குருஸ்வாமி அவர்கள் என்னுடன் பகிர்ந்து கொண்டார்கள்.
ஸ்ரீமான் ஹரிஹர ஞானம் அவர்களது குடும்பத்தினர்கள் அனைவருமே ஆன்மிக சிந்தனையும், குருபக்தியும் உள்ளவர்கள். அவர்களது இல்லத்தில் குழந்தைகளுக்குக் கூட ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம் பாடமாகி இருக்கிறது ஸ்ரீ குருநாதரின் அருள்தான்.
(வித்யையும் விநயமும் தொடரும்)