“இலகுவாக-கனமே இல்லாமல்
அத்வைத தத்துவம்.” சொன்னவர்-என்.வெங்கட்டராமன். தொகுத்தவர்-டி.எஸ்.கோதண்டராம சர்மா. தட்டச்சு-வரகூரான் நாராயணன்
ஒரு நெட்டி வேலைக்காரர், பெரிய பூச்செண்டு
மாதிரி அலங்காரமாகத் தயாரித்து பெரியவாளிடம்
சமர்ப்பித்தார். அருகில் நின்று கொண்டிரூந்த என்னைப்
பார்த்து.பூச்செண்டிலிருந்த பச்சை இலைகளைக் காட்டி, ‘இது என்ன?’ என்று பெரியவாள் கேட்டார்கள். ‘காகிதம்..?
உள் சுற்றில் அழகாக அடுக்கப்பட்டிருந்த மல்லிகையைக்
காட்டி, ‘இது என்ன?’ என்றார்கள்.
‘காகிதம்’
அதற்கு அடுத்த சுற்றாக இருந்த ரோஜா வரிசையைக் காட்டி
‘இது என்ன?’ என்றார்கள்.
‘காகிதம்’
நடுவில் மஞ்சளாக எலுமிச்சம்பழம் பளீரென்று விளங்கியது.
‘இது என்ன?’
‘எலுமிச்சம்பழம்…’ என்றேன்.
பெரியவாள் சற்று முதியவரான ஒருவரைப் பார்த்து,
எலுமிச்சையைக் காட்டி, ‘இது என்ன?’ என்று கேட்டார்கள்.
அவர், ‘நெட்டி!’ என்றார். உண்மையில் நெட்டியைத்தான்
அவ்வளவு தத்ரூபமாகச் செய்திருந்தார்,அந்த நெட்டிக் கலைஞர்.
உடனே,பெரியவாள், ‘அதாவது…ஸர்வம் ஏகமேவ-என்கிறே?’
என்று சொல்லிவிட்டு, ‘அதை இந்தப் பையனுக்கு
விளக்கிச் சொல்லு’ என்று கட்டளையிட்டார்.
ஸர்வம் (எல்லாம்)-பச்சை இலை,வெள்ளை மல்லிகை.
சிவப்பு ரோஜா,மஞ்சள் எலுமிச்சை எல்லாமே,’ஏகம் ஏவ-
ஒன்றே தான்; ஒரே பொருளால் ஆனவைதான், நெட்டிக் காகிதம்.
தலையைப் பாரமாக அழுத்தும் அத்வைத தத்துவம்.
ஒரு சிறு பையனுக்கும் புரியும்படி இலகுவாக-கனமே இல்லாமல்
நெட்டியாக – ஆக்கவல்லவர், மகா ஸ்வாமிகள்




