பிரசித்தி பெற்ற திருவோணம் பண்டிகை கேரளாவில் நாளை முதல் துவங்குகிறது. நாளை தலைஓணம் பண்டிகையும் நாளை மறுநாள் செப்டம்பர் எட்டாம் தேதி திருவோணம் பண்டிகையும் கொண்டாடப்படுகிறது. செப்டம்பர் 9 ல் மூன்றாம் ஓணமும் செப்டம்பர் 10 கடைசி ஓணம் விழாவும் கொண்டாடப்படுகிறது.
இந்த ஓணம் பண்டிகைக்கு ஒரு வரலாற்று சிறப்புமிக்க புராண கதையும் உண்டு.
பிரகலாதனின் பேரன் மகாபலி சக்கரவர்த்தி. திரேதா யுகத்தில் இன்றைய கேரளத்தை ஆட்சி புரிந்தவர். திருமாலின் 5வது அவதாரமான வாமன மூர்த்தியால் ஆட்கொள்ளப்பட்ட மகாபலி, ஆண்டுதோறும் தன் மக்களைக் காண வருவதாக ஐதீகம். அந்த நாள் ஆவணி மாதம் திருவோணம். வாமனர் அவதரித்ததும் இதே நாளில்தான். வாமன மூர்த்தி குடிகொண்டுள்ள திருத்தலம் திருக்காட்கரை. வாமனரின் திருவடிகள் முதன்முதலில் இந்த பூமியில் பதிந்த இடம் இது என்பதால் திரு+கால்+கரை = திருக்காட்கரை எனப்பெயர் பெற்றது.
கேரளாவில் கொச்சி அருகே உள்ள இத்தலத்தில் மூலவருக்கு திருக்காட்கரை அப்பன் என்பது திருநாமம் சூட்டப்பட்டது. ஓணம் பண்டிகைக்கான அறிவிப்பு இக்கோவிலில் இருந்துதான் ஆண்டுதோறும் வெளியாகும். அதன்பிறகு நாடு முழுவதும் ஆவணி மாதம் அஸ்தம் நட்சத்திரத்தில் தொடங்கி திருவோணம் வரை 10 நாட்கள் திருவோணம் பண்டிகை கொண்டாடப்படுகிறது.
இக்கோவிலின் முக்கியமான 10 நாள் திருவிழாவும் இதுவே ஆகும். வரும் 8ம் தேதி திருவோணம் பண்டிகை. திருக்காட்கரை அப்பன் தரிசனம் முக்கியமானதாக மலையாளிகள் கருதுகின்றனர்.இக் கோயில் தினசரி பூஜை வழிபாடுகள் காலை மாலை இரவு நடந்தாலும் ஆவணி ஹஸ்தம் முதல் திருவோணம் வரை சிறப்பு பூஜைகள் நடத்தி பத்துநாள் திருவிழா நடைபெறும்.