ipl 2022 - 2026

IPL 2022 – சென்னை vs பெங்களூரு

விளையாட்டு இந்தியா
ipl 2022 - 2026

ஐபிஎல் 2022 – சென்னை vs பெங்களூரு
– K.V. பாலசுப்பிரமணியன்

நேற்று, ஏப்ரல் பன்னிரண்டாம் நாள் சென்னை, பெங்களூரு அணிகளுக்கிடையே மும்பையின் டி.ஒய். பட்டீல் கிரிக்கெட் மைதானத்தில், ஐ.பி.எல்லின் 22ஆவது போட்டி நடந்தது. முதலில் ஆடிய சென்னை அணி 20 ஓவர் முடிவில் நாலு விக்கட் இழப்பிறகு 216 ரன் எடுத்தது.

பின்னர் ஆடிய பெங்களூரு அணி 20 ஓவரில் ஒன்பது விக்கட் இழப்பிற்கு 193 ரன் எடுத்து, சென்னை அணியிடம் தோற்றுப்போனது. சென்னை அணியின் ராபின் உத்தப்பாவும் ஷிவம் துபேயும் சூறாவளியாக பெங்களூரு அணியின் பவுலர்கள் வீசிய பந்துகளை மைதானத்தில் பறக்கவிட்டனர்.

டாஸ் வென்ற பெங்களூரு அணி வழக்கம்போல ஃபீல்ட் செய்யத் தீர்மானித்தது. சென்னையின் ருதுராஜ் கெய்க்வாட் இந்த ஆட்டத்திலும் சோபிக்கவில்லை. மொயின் அலியும் விரைவில் ஆட்டமிழந்தார். அதன் பின்னர், வழக்கமாக நான்காவதாகக் களமிறங்கும் அம்பாடி ராயுடுவுக்குப் பதிலாக ஷிவம் துபே விளையாட வந்தார்.

பத்து ஓவர் முடிவில் 2 விக்கட் இழப்பிற்கு 60 ரன் என்ற நிலையில் இருந்த சென்னை அணி அடுத்த பத்து ஓவரில் 156 ரன் எடுத்தது. உத்தப்பா 50 பந்துகளில், 9 சிக்சர், 4 ஃபோர்களுடன் 88 ரன் எடுத்தார். ஷிவம் துபே 46 பந்துகளில், 8 சிக்சர், 5 ஃபோர்களுடன் 95 ரன் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இருவரும் சதம் அடிக்க வாய்ப்பிருந்தும் அடிக்க முடியவில்லை.

அடுத்து விளையாட வந்த பெங்களூரு அணி, தொடக்கம் முதலே நம்மால் வெற்றி பெற முடியாது என்ற எண்ணத்திலேயே ஆடினர் எனத் தோன்றுகிறது. பவர் ப்ளே ஓவர்கள் முடிவதற்குள் ட்யூ பிளசிஸ் (8 ரன்), அனுஜ் ராவத் (12 ரன்), விராட் கோலி (1 ரன்) ஆட்டமிழந்தனர்.

அதற்குப் பின்னர் ஆடிய மேகஸ்வெல் (11 பந்துகளில் 26 ரன்), ஷபாஸ் அகமது (27 பந்துகளில் 41 ரன்), முதல் முறையாக ஆடும் சுயேஷ் பிரபுதேசாய் (18 பந்துகளில் 34 ரன்), தினேஷ் கார்த்திக் (14 பந்துகளில் 34 ரன்) ஆகியோர் நன்றாக ஆடி ஒரு சிறிய நம்பிக்கையைக் கொடுத்தாலும், அணி 20 ஓவரில் 193 ரன் மட்டுமே அடிக்க முடிந்தது.

ஆட்டத்தில் மொத்தம் 22 சிக்சர்கள் அடிக்கப்பட்டன. உத்தப்பாவும் துபேயும் மொத்தம் 17 சிக்சர்கள் அடித்தன. சென்னை அணியின் மஹீஷ் தீக்ஷணா நான்கு விக்கட்டுகளையும், ரவீந்தர் ஜெதேஜா மூன்று விக்கட்டுகளையும் எடுத்தனர்.
சென்னை அணி இந்த வெற்றியின் மூலம் இரண்டு புள்ளிகள் பெற்று தனது வெற்றிக் கணக்கைத் தொடங்கியிருக்கிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.