
இந்தியா-தென் ஆப்பிரிக்கா முதல் டி20 போட்டி – திருவனந்தபுரம் – 28.09.2022
முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்
தென் ஆப்பிரிக்க அணி (20 ஓவர் முடிவில் எட்டு விக்கட் இழப்பிற்கு 108 ரன், கேசவ் மஹராஜ் 41, மர்க்ரம் 25, பார்னெல் 24, அர்ஷதீப் சிங் 3/32, தீபக் சாஹர் 2/24, ஹர்ஷல் படேல் 2/26) இந்திய அணியிடம் (16.4 ஓவரில் 110 ரன், கே.எல். ராகுல் 51*, சூர்யகுமார் யாதவ் 50*) எட்டு விக்கட் வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்தது.
டாஸ் வென்ற இந்திய அணி தென் ஆப்பிரிக்க அணியை மட்டையாடச் சொன்னது. தென் ஆப்பிரிக்க அணியின் தலைவரும் தொடக்க ஆட்டக்காரரும் ஆன பவுமா (ரன் எதுவும் எடுக்கவில்லை) முதல் ஓவர் கடைசிப் பந்தில் ஆட்டமிழந்தார்.
அடுத்த ஓவரில், அர்ஷதீப் பந்துவீச்சில் டி காக் (1 ரன்), ரோஸ்கோ (ரன் எடுக்கவில்லை), மில்லர் (ரன் எடுக்கவில்லை) ஆகிய மூவரும் ஆட்டமிழந்தனர். மூன்றாவது ஓவரில் ஸ்டப்ஸ் ஆட்டமிழந்தார். பவர் ப்ளே முடிவில் ஆப்பிரிக்க அணி ஐந்து விக்கட் இழப்பிற்கு 30 ரன்கள் எடுத்திருந்தது. அதன் பின்னர் மர்க்ரம் (25 ரன்), பார்னெல் (24 ரன்), கேசவ் மஹராஜ் (41 ரன்) ஆகியோரின் ஆட்டத்தால் தென் ஆப்பிரிக்க அணி 20 ஓவர் முடிவில் எட்டு விக்கட் இழப்பிற்கு 106 ரன் எடுத்திருந்தது. இந்திய அணியின் பந்து வீச்சாளர்கள் சிறப்பாக பந்துவீசினர்.
குறிப்பாக இரண்டாவது ஓவரில் அர்ஷதீப் எடுத்த 3 விக்கட்டுகள் ஆட்டத்தின் போக்கை மாற்றின. அஸ்வின் சிறப்பாக பந்துவீசினார். எளிமையான இலக்கு; எளிதில் இந்திய அணி வெற்றி அடைந்து விடும் என அனைவரும் நினைத்திருந்த வேளையில் ரோஹித் ஷர்மா (ரன் எடுக்கவில்லை), விராட் கோலி (3 ரன்) இருவரும் சொற்ப ரன்னுக்கு ஆட்டமிழந்தனர்.
பவர்ப்ளே ஓவர்களில் இந்திய 17 ரன்கள் எடுத்து தடுமாறியது. டி20 போட்டிகளில், பவர்ப்ளே ஓவர்களில் இந்தியா எடுத்த மிகக் குறைவான ரன் எண்ணிக்கை இது.
ராகுலும் தட்டுத் தடுமாறிக்கொண்டிருந்தார். சூர்யகுமார் யாதவ் விளையாட வந்தவுடன் தன்னுடைய 2ஆவது மற்றும் 3ஆவது பந்துகளில் இரண்டு சிக்சர் அடித்தார். அதன் பின்னர் இந்திய அணியின் நம்பிக்கை அதிகரித்து, 16.4 ஓவரில் வெற்றிக் கனியைப் பறித்தது. ராகுல் 51 ரன்னும் சூர்யா 50 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
திருவனந்தபுரம் ஆடுகளம் மிக அருமையாக இருந்தது. அர்ஷதீப் சிங் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். இந்தியா இந்தத் தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலியயில் உள்ளது.