fifa world cup 2022 - 2026

உலகக் கோப்பை கால்பந்துப் போட்டி -2022; காலிறுதிக்கு முந்தைய சுற்று!

விளையாட்டு உலகம்
fifa world cup 2022 - 2026
  • முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்

முதல் போட்டி – 03 டிசம்பர் 2022 – நெதர்லாந்து vs அமெரிக்கா – நெதர்லாந்து 3-1 என்ற கோல் கணக்கில் வென்றது.

நெதர்லாந்தின் துல்லியமான ஆட்டத்தால் அந்த அணி அமெரிக்க அணியை 3-1 என்ற கோல்கணக்கில் வென்றது. நெதர்லாந்து அணியின் மெம்பிஸ் டீபே கோலுக்கு அருகில் உள்ள பெரிய சதுரப்பகுதியில் இருந்து அணியின் முதல் கோலை அடித்தார். ஆட்டத்தின் முதல் அரைப் பகுதி முடிவதற்கு சற்று முன்னர் டேலி ப்ளைண்ட் நெதர்லாந்தின் இரண்டாவது கோலை அடித்தார்.

இரண்டாம் பாதியில் அமெரிக்க வீரர் ஹாஜி ரைட் ஒரு கோல் அடித்தார். அதற்குச் சில விநாடிகளுக்குப் பின்னர் டென்சால் டம்ஃப்ரைஸ் இந்த போட்டியின் தனது முதல் கோலை அடித்து நெதர்லாந்தின் கோல் கணக்கை 3-1 என உயர்த்தினார். அதன் பின்னர் அமெரிக்க அணியால் கோல் அடிக்க முடியாததால், நெதர்லாந்து அணி வெற்றிபெற்றி காலிறுதிக்குள் நுழைந்தது.

இரண்டாவது போட்டி – 03 டிசம்பர் 2022 – அர்ஜண்டைனா vs ஆஸ்திரேலியா – அர்ஜண்டைனா 2-1 என்ற கோல் கணக்கில் வென்றது.

அர்ஜண்டைனாவின் அணித் தலைவர் மெஸ்ஸி தனது 1000ஆவது ஆட்டத்தில் இன்று ஆடினார். இந்த ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை வென்றதன் மூலம் அர்ஜண்டைனா க்ஆலிறுதியில் நெதர்லாந்து அணியை எதிர்த்து விளையாடும். 2-1 என்ற கோல் கணக்கில் வென்றாலும் கடைசித் தருணங்கள் ஒரு ‘திக் திக்” நொடிகளாகவே இருந்தது. ஆஸ்திரேலிய அணி நன்றாகவே ஆடினார்கள். அர்ஜண்டைனா அணியினரை கோல் போடவிடாமல் முதல் பாதியில் நன்றாகத் தடுத்தனர். 35ஆவது நிமிடத்தில் மெஸ்ஸி ஓடமெண்டியுடன் இணைந்து முதல் கோலை அடித்தார். ஆட்டத்தின் 57ஆவது நிமிடத்தில் அல்வரேஸ் அர்ஜண்டியனா அணியின் இரண்டாவது கோலை அடித்தார்.

77ஆவது நிமிடத்தில் ஆஸ்திரேலியாவின் க்ரைக் காட்வின் அர்ஜண்டைனாவிற்கு எதிராக ஒரு கோல் அடித்தார். அது அர்ஜெண்டைனா வீரர் என்சோ ஃபெர்னாண்டஸ் காலில் பட்டு கோலுக்குச் சென்றது. எனவே அது own goal என கருதப்பட்டது.

மூன்றாவது போட்டி – 04 டிசம்பர் 2022 – பிரான்சு vs போலந்து – பிரான்சு 3-1 என்ற கோல் கணக்கில் வென்றது.

ஒலிவியர் கிரௌட் மற்றும் கிலியன் பாப் அடித்த கோல்களினால் பிரான்சு அணி 3-1 என்ற கோல் கணக்கில் போலந்து அணியை வென்று காலிறுதிக்கு முன்னேறியது.
கிரௌட் 44 நிமிடத்தில் முதல் கோலை அடித்தார். கிலியன் 74ஆவது நிமிடத்திலும் 91 ஆவது நிமிடத்திலும் இரண்டு கோல்கள் அடித்தார். அதன் பின்னர் 100ஆவது நிமிடத்தில் போலந்து அணியின் ராபர்ட் ஒரு கோல் அடித்தார். இவ்வாறு தற்போதைய உலகக் கோப்பை சாம்பியன் பிரான்சு அடுத்த சுற்றிற்கு முன்னேறி இந்த முறையும் கோப்பையை வெல்லும் வாய்ப்பைத் தக்கவைத்துள்ளது.
நான்காவது போட்டி – 04 டிசம்பர் 2022 – இங்கிலாந்து vs செனகல் – இங்கிலாந்து 3-0 என்ற கோல் கணக்கில் வென்றது.

இங்கிலாந்து அணியின் அணித்தலைவர் ஹாரி கேன் இந்த உலகக் கோப்பையில் தன்னுடைய முதல் கோலை செனெகல் அணிக்கு எதிராக அடித்தார். இது கேன் அடித்துள்ள 52ஆவது கோல் ஆகும். இங்கிலாந்தின் தலைசிறந்த கால்பந்து வீரர்களில் ஒருவரான ரூனியின் சாதனையைச் சமன் செய்ய ஹாரி கேனுக்கு இன்னமும் ஒரு கோல் மட்டுமே தேவை.

ஆட்டத்தின் 38ஆவது நிமிடத்தில் ஜோர்டன் ஹெண்டர்சன் இங்கிலாந்தின் முதல் கோலை அடித்தார். முதல் பகுதி ஆட்டத்தின் முடிவில் “ஸ்டாப்பேஜ் டைமில்” ஹாரி கேன் தனது கோலை அடித்தார். 57ஆவது நிமிடத்தில் புகாயோ சகா ஒரு கோல் அடித்தார். செனெகல் அணி இன்று சிறப்பாக ஆடவில்லை. இனி இங்கிலாந்து அணி காலிறுதி ஆட்டத்தில் பிரான்சு அணியைச் சந்திக்கும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.