
டிச.04 ஞாயிற்றுக் கிழமை நேற்று, சென்னை சேத்துப்பட்டில் உள்ள சின்மயா ஹெரிட்டேஜ் சென்டரில், சம்ஸ்க்ருத பாரதி அமைப்பு மற்றும் சின்மயா மிஷன் இணைந்து கீதா ஜெயந்தி விழாவை விமர்சையாகக் கொண்டாடியது. இதில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி, மதுரை ஆதினம் உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
பகவத் கீதை கார்த்திகை மாத வளர்பிறை ஏகாதசியில் அருளப்பட்டது. ஆங்கில மாதத்தில் ஒவ்வோர் ஆண்டும் டிசம்பர் மாதத்தில் கீதை ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. அதாவது, இந்துக்களின் புனித நூலான பகவத் கீதை உபதேசிக்கப்பட்ட நாளை கீதா ஜெயந்தி என கொண்டாடுகிறோம். இந்த நாளை மோட்ச ஜெயந்தி என்றும் சொல்வார்கள்.
2022ம் ஆண்டில் கீதா ஜெயந்தி, டிசம்பர் 3 ஆம் தேதி கொண்டாடப்பட்டது. அன்று காலை 5.39 மணி முதல் டிசம்பர் 4ம் தேதி காலை 5.34 வரை ஏகாதசி திதி இருந்ததால், இந்த நேரத்தை கணக்கிட்டு கோவில்களில் கீதா ஜெயந்தி கொண்டாட்டங்கள், சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
இதன் ஒரு பகுதியாக, சென்னையில் சம்ஸ்க்ருத பாரதி சார்பில் நடைபெற்ற கீதா ஜெயந்தி நிகழ்ச்சியில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். சின்மயா மிஷனை சேர்ந்த சுவாமி மித்ரானந்தா, மதுரை ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர தேசிக ஞானசம்பந்த பரமாச்சார்ய சுவாமிகள், கீதாம்ருதம் வரவேற்பு குழுத் தலைவரான முன்னாள் டி.ஜி.பி ஆர். நடராஜ், சம்ஸ்க்ருத பாரதி அமைப்பின் அகில பாரத செயலாளர் சத்யநாராயண பட், சம்ஸ்க்ருத பாரதி பேராசிரியர் ராமசந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் சிறப்புரையாற்றிய ஆளுநர் ரவீந்திர நாராயண் ரவி…
ஜி20 அமைப்பில் இந்தியா தலைமை பொறுப்பேற்றுள்ளது ஒவ்வொரு இந்தியருக்கும் கிடைத்துள்ள பெருமை. உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடாக இந்தியா மாறும் காலம் வெகு தொலைவில் இல்லை. மக்களின் பங்களிப்பு அனைத்திலும் இருக்க வேண்டும். இதனை பிரதமர் நரேந்திர மோடி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.
அமைதியான உலகத்திற்கு இந்தியா தான் தலைமைப் பண்பை வழங்கும். இந்தியாவில் வேகமாக வளரும் பொருளாதாரம் வெல்லும். உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடாக இந்தியா மாறும் காலம் வெகுதொலைவில் இல்லை. அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியா வேகமாக முன்னேறும். இந்தியா தற்போது ஜி-20 அமைப்புக்கு தலைமையேற்றுள்ளது. இது ஒவ்வொரு இந்தியருக்கும் கிடைத்துள்ள பெருமை.
பகவத் கீதையை நாம் மனனம் செய்யும் வகையில் எளிமையாக அழகாக உள்ளது. பகவத் கீதையை படிக்கப் படிக்க நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள். பலர் பகவத் கீதையால் ஈர்க்கப்படுகிறார்கள். எனது ஆரம்பப் பள்ளி மற்றும் கல்லூரி காலங்களில், என்னை ஊக்குவித்து, நான் எதைப்பெற வேண்டும் என்று நானே அறிய எனக்கு உதவியது அதுதான்.
பகவத் கீதையை படித்தால் தனி மனித ஒழுக்கம் அதிகரிக்கும். கீதை படிக்கும் போது நல்லொழுக்கம் கட்டுப்பாட்டினை பெறலாம். இதன் மூலம் எந்த ஒரு செயலையும் நேர்கொண்ட பார்வையுடன் இலக்கை நோக்கி செய்து முடிக்கலாம்.
போர்க்களத்தில் அர்ஜூனனுக்கு ஏற்பட்ட குழப்பத்தைப் போக்கியவர் பகவான் கிருஷ்ணன். நமது இலக்கு போரிட்டு வெற்றி பெற்று தேசத்தை ஜெயிக்க வேண்டும். அதனால் ஒரே சிந்தனையுடன் போரிட்டு வெற்றி பெற வேண்டும் என்று கூறியவர் பகவான் கிருஷ்ணன். கீதையை படித்தால் இயற்பியலை எளிதில் கற்கலாம்… என்று பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய மதுரை ஆதீனம், ஆளுநரைப் பாராட்டிப் பேசினார். எத்தனையோ ஆளுநரைப் பார்த்து இருக்கிறேன். இது போன்ற ஆளுநரை பார்த்தது இல்லை; தமிழகத்திற்கு ஆன்மீகம் தெரிந்த ஆளுநர் கிடைத்துள்ளார். தமிழ்நாட்டில் பிறப்பது புண்ணியம். இது ஒரு ஆன்மீக பூமி. ஆனால் இங்கே சிலர் ஆளுநரை விமர்சிக்கின்றனர். எல்லோரும் சைவ உணவை சாப்பிட வேண்டும். ஒருவர் என்ன உணவு உண்கிறாரோ அப்படித்தான் அவர்களது செயல்பாடு இருக்கும். இப்போதும் பாண்டவர்களும், கௌரவர்களும் இருக்கிறார்கள். இன்றைய அரசியல்வாதிகள் கௌரவர்களைத்தான் நல்லவர்கள் என்பார்கள். காரணம் அங்கிருக்கும் ஓட்டு எண்ணிக்கை என்று நகைச்சுவை கலந்து பேசினார்.
சமஸ்கிருத பாரதி விழாவில், ஆளுநர் ரவி தமிழகத்தின் பாரம்பரிய உடையாக பட்டு வேட்டி சட்டை அணிந்து வந்திருந்தது அனைவரையும் கவர்ந்தது.