
முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்
இந்திய வங்கதேச அணிகளின் இரண்டாவது டெஸ்ட் – நான்காம் நாள் – 25.12.2-22
அஸ்வின் அதிரடி : டெஸ்ட் தொடரை கைப்பற்றியது இந்திய அணி
இந்தியா – வங்கதேச அணிகள் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றன. சிட்டோக்ரமில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது. இன்று மிர்பூரில் நடந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் நான்காம் நாள் ஆட்டத்தில் இந்திய அணி 145 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதனால் வங்கதேசத்துக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை முழுமையாக 2-0 என இந்தியா வென்றுள்ளது.
ஸ்கோர் விவரம் – வங்கதேச அணி முதல் இன்னிங்கிஸில் 227 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. அடுத்து விளையாடி இந்திய அணி 314 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. மூன்றாவது நாளான நேற்று வங்கதேச அணி 70.2 ஓவர்களில் 231 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக ஜாகீர் ஹாஸன் 50 ரன்களும் லிட்டன் தாஸ் 73 ரன்களும் எடுத்திருந்தனர்.
இந்தியா சார்பில் அக்ஸர் படேல் 3 விக்கெட்டுகளும் அஸ்வின் மற்றும் சிராஜ் தலா 2 விக்கெட்டுகளும் எடுத்தனர். நேற்று இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி வங்கதேச அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறினர். இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களானகில் 7 ரன்னும் கே.எல். ராகுல் 2 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர்.
பின்னர் புஜாரா 6 ரன்களும், விராட் கோலி 1 ரன்னும் என சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தனர். நேற்றைய ஆட்டநேர முடிவில் 45 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து இந்திய அணி தடுமாறியது. இந்த நிலையில் வெற்றிபெற 100 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற நிலையில் இன்று நான்காவது நாள் ஆட்டத்தை இந்திய அணி தொடங்கியது.
இன்று உனக்டக்ட் முதலில் 13 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன் பின்னர் ரிஷப் பந்த் 9 ரன்னிலும் அக்சர் படேல் 34 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அப்போது இந்திய அணி ஏழு விக்கட் இழப்பிற்கு 74 ரன் எடுத்திருந்தது. மேலும் 71 ரன்களை இந்திய அணி எடுத்து வெற்றி பெறுமா? அல்லது வங்கதேஸ அணி வெல்லுமா என்ற பரபரப்பு தொற்றிக்கொண்டது.
இருப்பினும் ரவிச்சந்திரன் அஸ்வினும் ஷ்ரேயாச் ஐயரும் பொறுப்பாக ஆடி இந்திய அணியை சரிவிலிருந்து மீட்டு வெற்றிப்பாதைக்கு அழைத்து சென்றனர். இதனால் இந்திய அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வங்கதேச அணியை வீழ்த்தியது.
இறுதியில் 145 ரன்கள் எடுத்து 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வங்கதேச அணியை வீழ்த்தியது. அஸ்வின் 42, அக்சர் படேல் 34, ஷ்ரேயாச் ஐயர் 29 ரன்கள் எடுத்து வெற்றிக்கு பக்கபலமாக இருந்தனர். 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2 தொடரையும் வென்றது.
வங்கதேச அணியுடனான டெஸ்ட் தொடரில் இந்திய அணி வெற்றி பெற்றதன் மூலம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரிலும் இறுதிப்போட்டிக்கு முன்னேறியிருக்கிறது. இந்த தொடருக்கான புள்ளிப்பட்டியலில் ஆஸ்திரேலிய அணி 76.92 வெற்றி சதவீதத்துடன் முதலிடத்தில் இருந்து வருகிறது.
பாகிஸ்தான் அணி சுலபமாக இறுதிப்போட்டிக்கு செல்வதற்கான வாய்ப்பு இருந்தது. ஆனால் சொந்த மண்ணில் இங்கிலாந்துடன் ஒயிட் வாஷ் ஆனதால் பாகிஸ்தானின் வெற்றி சதவீதம் 38.89% என குறைந்து இறுதிப்போடிக்கான வாய்ப்பு மிகவும் கடினமானது.
புள்ளிப்பட்டியலில் மாற்றம் இது ஒருபுறம் இருக்க, இந்திய அணி வங்கதேசத்தை வீழ்த்தியிருப்பதால் 58.93 வெற்றி சதவீதத்துடன் 2வது இடத்திற்கு முன்னேறியிருக்கிறது. அடுத்தாண்டு ஆஸ்திரேலியாவுடன் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் சொந்த மண்ணில் நடக்கிறது. இதில் இந்தியா 3 வெற்றி பெற்றால் கூட சுலபமாக இறுதிச்சுற்றுக்கு முன்னேறிவிடும்.
இந்தியா இப்படி பலமாக இருப்பதால் பாகிஸ்தானுக்கு சிக்கல் உண்டாகியுள்ளது. ஏனென்றால் அந்த அணி இனி இறுதி சுற்றுக்கு செல்ல வேண்டும் என்றால், ஆஸ்திரேலிய தொடரில் இந்தியா தோல்வியடைய வேண்டும். தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக ஆஸ்திரேலியா வெல்ல வேண்டும். இதனையெல்லாம் விட முக்கியம் நியூசிலாந்துடனான டெஸ்ட் தொடரை பாகிஸ்தான் வெல்ல வேண்டும். இதனையெல்லாம் தாண்டி தான் செல்ல முடியும்.
இதெல்லாம் ஒருபுறம் இருக்க, தென்னாப்பிரிக்க அணி இந்தியாவுக்கு அடுத்தபடியாக 3வது இடத்தில் இருக்கிறது. ஒருவேளை ஆஸ்திரேலியாவுடனான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா தோற்றுவிட்டால், தென்னாப்பிரிக்க அணி 2வது இடத்திற்கு செல்லவும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.