
உலகக் கோப்பை ஒருநாள் கிரிக்கட் போட்டிகள்
பகுதி 11 – 2011 போட்டி
முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்
2011 ஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பை பத்தாவது கிரிக்கெட் உலகக் கோப்பை ஆகும். இது இந்தியா, இலங்கை மற்றும் வங்கதேசத்தில் முதல் முறையாக விளையாடப்பட்டது. மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடந்த இறுதிப் போட்டியில் இலங்கையை 6 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்த இந்தியா, போட்டியை வென்றது. இதன் மூலம் சொந்த மண்ணில் கிரிக்கெட் உலகக் கோப்பையை வென்ற முதல் நாடு என்ற பெருமையைப் பெற்றது. போட்டியின் நாயகனாக இந்தியாவின் ‘யுவராஜ் சிங்’ அறிவிக்கப்பட்டார்.
உலகக் கோப்பை வரலாற்றில் இரண்டு ஆசிய அணிகள் இறுதிப்போட்டிக்கு வருவது இதுவே முதல் முறை. 1992 உலகக் கோப்பைக்குப் பிறகு இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியா இடம்பெறாததும் இதுவே முதல் முறையாகும்.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ICC) 10 முழு உறுப்பினர்கள் மற்றும் நான்கு துணை உறுப்பினர்கள் உட்பட பதினான்கு அணிகள் இந்தப் போட்டியில் பங்கேற்றன. தொடக்க விழா 17 பிப்ரவரி 2011 அன்று டாக்காவில் உள்ள “பங்கபந்து நேஷனல் ஸ்டேடியத்தில்” நடைபெற்றது. மற்றும் போட்டி 19 பிப்ரவரி முதல் ஏப்ரல் 2 வரை நடைபெற்றது. டாக்காவின் மிர்பூரில் உள்ள “ஷேர்-இ-பங்களா” தேசிய மைதானத்தில் இந்தியா மற்றும் வங்காளதேசம் இடையேயான முதல் போட்டி நடைபெற்றது.
தொடக்கத்தில் இந்த உலகக் கோப்பை போட்டியை பாகிஸ்தானும் இணைந்து நடத்த திட்டமிடப்பட்டது. ஆனால் 2009இல் லாகூரில் இலங்கை அணி மீதான பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு, சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) அதை ரத்து செய்தது. மேலும் ஏற்பாட்டுக் குழுவின் தலைமையகம், முதலில் லாகூரில் இருந்தது; பின்னர் அது மும்பைக்கு மாற்றப்பட்டது. ஒரு அரையிறுதி உட்பட 14 போட்டிகளை பாகிஸ்தான் நடத்துவதாக இருந்தது. இந்த 14 ஆட்டங்களில் எட்டு ஆட்டங்கள் (அரையிறுதி உட்பட) இந்தியாவுக்கும், நான்கு இலங்கைக்கும், இரண்டு பங்களாதேஷுக்கும் வழங்கப்பட்டது.
14 அணிகளும் இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டன. குரூப் A பிரிவில் பாகிஸ்தான், இலங்கை, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, ஜிம்பாபே, கனடா, கென்யா ஆகிய அணிகள் இடம்பெற்றன. இவற்றிலிருந்து பாகிஸ்தான், இலங்கை, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நான்கு அனிகளும் காலிறுதிக்குத் தேர்வாயின. குரூப் B பிரிவில் தென் ஆப்பிரிக்கா, இந்தியா, இங்கிலாந்து, மேற்கு இந்தியத்தீவுகள், வங்கதேசம், அயர்லாந்து, நெதர்லாந்து ஆகிய அணிகள் இடம்பெற்றிருந்தன. இவற்றுள் தென் ஆப்பிரிக்கா, இந்தியா, இங்கிலாந்து, மேற்கு இந்தியத்தீவுகள் ஆகிய அணிகள் காலிறுதிக்குத் தேர்வாயின.
காலிறுதியில் பாகிஸ்தான் மேற்கு இந்தியத் தீவுகள் அணியை வென்றாது; இந்தியா ஆஸ்திரேலிய அணியை வென்றது; நியூசிலாந்து தென் ஆப்பிரிக்க அணியை வென்றது; இலங்கை இங்கிலாந்து அணியை வென்றது. அரையிறுதியில் இந்தியா பாகிஸ்தான் அணியை மீண்டும் ஒருமுறை வென்றது. இலங்கை நியூசிலாந்து அணியை வென்றது. இறுதிப் போட்டி ஏப்ரல் 2ஆம் நாள் மும்பை வான்கடே மைதானத்தில் நடந்தது.
இந்த உலகக் கோப்பைக்காக ஒரு இந்தியிலும் சிங்கள மொழியிலும் ஒரு பாடல் வெளியிடப்பட்டது. “தே குமாகெ” (பேட்டை சுழற்றி ஆடு) என்ற இந்திப் பாடல்; “சிங்கா உடானே” என்ற சிங்களப் பாடல். மேலும் ஒரு விளையாட்டுச் சின்னமும் வெளியிடப்பட்டது. அது ‘ஸ்டம்பி’ எனப்படும் ஒரு யானைக் கன்று.
இந்த உலகக் கோப்பை போட்டியிலும் சர்ச்சைகளுக்குப் பஞ்சமில்லை. இலங்கையில் ஒரு ஆட்டம் முடிந்து மேற்கு இந்தியத் தீவுகள் அணி பேருந்தில் ஹோட்டலுக்குத் திரும்பி வரும்போது அந்தப் பேருந்து மீது கல் எறியப்பட்டது.
ஒருவேளை பாகிஸ்தான் அரையிறுதியில் வெற்றி பெற்று மும்பையில் இறுதிப் போட்டியில் விளையாட வந்தால் நாங்கள் ஆட்டத்தை நடக்க விட மாட்டோம் என சிவசேனா கட்சி அறிக்கை வெளியிட்டது.
இறுதி ஆட்டத்தின்போது டாஸ் இரண்டு முறை போடப்பட்டது. முதல் முறை போடப்பட்டபோது மைதானத்தில் நிலவிய சத்தத்தால் நடுவர் ஜெஃப் க்ரோவே அவர்களுக்கு இலங்கை அணியின் அணித்தலைவர் என்ன கேட்டார் எனக் காதில் விழவில்லை. எனவே இரண்டாம் முறை டாஸ் போட்டார்.