
இந்தியா தென் ஆப்பிரிக்கா டி-20 தொடர் 2025 – தொடரை இந்திய அணி வென்றது
முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்
தென் ஆப்பிரிக்க அணி இந்தியாவில் பயணம் செய்து வருகிறது. மூன்று டெஸ்ட்கள் கொண்ட தொடர், மூன்று ஒருநாள் ஆட்டங்கள் கொண்ட தொடர், ஐந்து டி-20 ஆட்டங்கள் கொண்ட தொடர் ஆகியவற்றில் ஆடியது. டெஸ்ட் தொடரை தென் ஆப்பிரிக்க அணி வென்றது. ஒருநாள் போட்டித் தொடரில் இந்திய அணி வென்றது. அடுத்து நடந்த டி-20 தொடரிலும் இந்திய அணி வெற்றி பெர்றிருக்கிறது.
முதல் டி-20 ஆட்டம் கட்டாக்கில் நடைபெற்றது. இந்திய அணி முதலில் ஆடி 6 விக்கட் இழப்பிற்கு 175 ரன் (ஹார்திக் பாண்ட்யா 59 ரன்) எடுத்தது. இரண்டாவதாக ஆடிய தென் ஆப்பிரிக்க அணி 12.3 ஓவர்களில் 74 ரன்களுக்கு ஆட்டமிழந்து, தோல்வியுற்றது. இரண்டாவது டி-20 ஆட்டம் சண்டிகர் முல்லன்பூரில் நடந்தது. இங்கு ஐ.பி.எல் ஆட்டங்கள் இதற்கு முன்னர் நடந்துள்ளது. ஆனாலும் இதுவே இங்கு நடக்கும் முதல் பன்னாட்டு போட்டியாகும். இதில் முதலில் ஆடிய தென் ஆப்பிரிக்க அணி 4 விக்கட் இழப்பிற்கு 213 ரன்கள் (க்விண்டன் டி காக் 90, வருண் 2 விக்கட்) எடுத்தது. பதிலுக்கு இந்திய அணி 19.1 ஓவர்களில் 162 ரன் (திலக் வர்மா 62, பார்ட்மேன் 4 விக்கட்டுகள்) எடுத்து அனைத்துவிக்கட்டுகளையும் இழந்தது. இதனால் தோல்வியுற்றது.
மூன்றாவது ஆட்டம் தர்மசலாவில் நடந்தது. இங்கே முதலில் ஆடிய தென் ஆப்பிரிக்க அணி 117 ரன்னுக்கு (மர்கரம் 61 ரன்) அனைத்து விக்கட்டுகளையும் இழந்தது. பின்னால் ஆடிய இந்திய அணி 15.5 ஓவர்களில் 3 விக்கட் இழப்பிற்கு 120 ரன்கள் (அபிஷேக் ஷர்மா 35, கில் 28, திலக் 26*) எடுத்து வெற்றி பெற்றது. நான்காவது டி 20 ஆட்டம் லக்னோவில் நடைபெற்றது. ஆனால் பனி, புகைப்பனி காரணமாக ஒரு பந்து கூட வீசப்படாமல் ஆட்டம் கைவிடப்பட்டது. இதனால் நான்காவது டி-20 ஆட்ட முடிவில் தொடர் 2-1 என்ற கணக்கில் இந்தியா முன்னிலை வகித்தது. ஐந்தாவது ஆட்டத்தில் இந்திய அணி வெற்றிபெற்றால் தொடரை வெல்லும்; தென் ஆப்பிரிக்க அணி வெற்றி பெற்றால் தொடர் சமனி முடியும் என்ற நிலை இருந்தது.
ஐந்தாவது டி-20 ஆட்டம் அகமதாபாத்தில் நடந்தது. பூவா தலையா வென்ற தென் ஆப்பிரிக்க அணி முதல் பந்துவீசத் தீர்மானித்தது. இதனால் முதலில் மட்டையாடிய இந்திய அணியில் சுப்மன் கில் தொடக்கவீரராக ஆடவில்லை. அவருக்குப் பதிலாக சஞ்சு சாம்சன் (22 பந்துகளில் 37 ரன், 4 ஃபோர், 2 சிக்சர்) ஆடினார். அவரும் அபிஷேக் சர்மாவும் (21 பந்துகளில் 34 ரன்கள், 6 ஃபோர், 1 சிசர்) சிறப்பான தொடக்கம் தந்தனர். அபிஷேக் சர்மா 5.4 ஓவரில் ஆட்டமிழக்க, திலக் வர்மா (42 பந்துகளில் 73 ரன், 10 ஃபோர், 1 சிக்சர்) ஆடவந்தார். சூர்யகுமார் யாதவ் (7 பந்துகளில் 5 ரன்) இன்றும் சரியாக ஆடவில்லை. அவருக்குப் பதிலாக ஆடவந்த ஹார்திக் பாண்ட்யா (25 பந்துகளில் 63 ரன், 5 ஃபோர், 5 சிக்சர்) அதிரடியாக ஆடினார். அதிலும் அந்த 14ஆவது ஓவர் மறக்க முடியாத ஓவர். முதல் பந்தில் திலக் வர்மா ஒரு சிக்சர் அடித்தார். இரண்டாவது பந்தில் ஒரு ரன் அடித்து பாண்ட்யா மட்டையாட வந்தார். மூன்றாவது பந்தில் ஒரு ஃபோர், நாலாவது பந்தில் ஒரு சிக்சர், ஐந்தாவது பந்தில் ஒரு சிக்சர், ஆறாவது பந்தில் ஒரு ஃபோர் என பாண்ட்யா 20 ரன்கள் எடுத்தார். அந்த ஓவரில் மொத்தம் 27 ரன்கள் எடுக்கப்பட்டது. பாண்ட்யா 19.3ஆவது ஓவரில் ஆட்டமிழந்தார். அப்போது ஆடவந்த ஷிவம் துபே (3 பந்துகளில் 10 ரன்) சிறப்பாக ஆடினார். இதன் மூலம் இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கட்டுகள் இழப்பிற்கு 231 ரன் எடுத்தது.
இரண்டாவதாக ஆடவந்த தென் ஆப்பிரிக்க அணிக்கு தொடக்க வீரர்கள் க்விண்டன் டி காக் (35 பந்துகளில் 65 ரன், 9 ஃபோர், 1 சிக்சர்) ரீசா ஹெண்ட்ரிக்ஸ் (12 பந்துகளில் 13 ரன்) இருவரும் நல்ல் தொடக்கம் தந்தனர். மூன்றாவதாகக் களமிறங்கிய டிவால்ட் பிரிவிஸ் (17 பந்துகளில் 31 ரன், 3 ஃபோர், 2 சிக்சர்) டேவிட் மில்லருடன் (14 பந்துகளில் 18 ரன், 2 ஃபோர்) இணைந்து தென் ஆப்பிரிக்க அணியின் ஸ்கோரை உயர்த்தினார். ஏழாவது ஓவரில் முதல் விக்கட்டை வருண் வீழ்த்தினார். இரண்டாவது விக்கட்டை (டி காக்) பும்ரா 11ஆவது ஓவரில் வீழ்த்தினார். 12ஆவது ஓவரில் மூன்றாவது விக்கட் (டிவால்ட் ப்ருவிஸ்) ஹார்திக் பாண்ட்யாவால் எடுக்கப்பட்டது. 13ஆவது ஓவரில் வருண் இரண்டு விக்கட்டுகள் எடுத்தார். 15ஆவது ஓவரில் அர்ஷதீப் டேவிட் மில்லரின் விக்கட்டை வீழ்த்தினார். அடுத்த ஓவரில் வருண் மற்றொரு விக்கட்டை வீழ்த்தினார். 17ஆவது ஓவரில் பும்ரா மார்கோ யான்சன் விக்கட்டை வீழ்த்தினார். 20 ஓவர் முடிவில் தெ ஆப்பிரிக்க அணி 8 விக்கட் இழப்பிற்கு 201 ரன் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது. இதனால் இந்திய அணி 3-1 என்ற கணக்கில் தொடரை வென்றது.
இந்தத் தொடரில் பும்ரா 100 விக்கட்டுகள் எடுத்த சாதனையைப் புரிந்தார். அதுபோல ஹார்திக் பாண்ட்யா 100 விக்காட்டுகள் எடுத்தார்; டி-20இல் 2000 ரன்கள் எடுத்தார். இந்த டி-20 ஆட்டத்தில் ஹார்திக் 17 பந்துகளில் 50 ரன் சாதனை புரிந்தார். ஆட்ட நாயகனாக் ஹார்திக் பாண்ட்யாவும் தொடர் நாயகனாக வருண் சக்ரவர்த்தியும் அறிவிக்கப்பட்டனர்.




