
சென்னை மாநகர பேருந்துகளில் பேடிஎம்- செயலி மூலம் பணத்தை கட்டி பயணச்சீட்டு வாங்கிக்கொள்ளும் புதிய முறை அறிமுகமாகியுள்ளது. முதல்கட்ட சோதனை முயற்சியாக இரண்டு அரசு பேருந்துகளில் இந்த வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
நோய் பரவல் தடுப்பு நடவடிக்கையாக முதல்கட்டமாக 2 பேருந்துகளில் Paytm வசதி (டிஜிட்டல் பரிவர்த்தனை) அறிமுகம் செய்யப்படவுள்ளது என்று நேற்று அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் நேற்று தெரிவித்திருந்தார். இதனையடுத்து சென்னை தியாகராயநகர் மற்றும் சைதாப்பேட்டையில் இருந்து தினந்தோறும் தலைமை செயலக பணியாளர்களுக்கென இயக்கப்படும் 2 பேருந்துகளில், பேடிஎம் – வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இதன்படி பேருந்து நடத்துனர் இருக்கை அருகே ஒட்டப்பட்டிருக்கும் கியூ ஆர் கோடை( QR CODE ) செல்போனில் ஸ்கேன் செய்து பயணசீட்டிற்கான கட்டணத்தை செலுத்தி, டிக்கெட்டை வாங்கிக் கொள்ளலாம். Paytm இல்லாதவர்கள் பணம் கொடுத்து டிக்கெட் பெற்றுக் கொள்ளலாம்.
சென்னையில் சோதனை முயற்சியாக தொடங்கியுள்ள இந்த வசதியை படிப்படியாக அனைத்து வழித்தடங்களிலும் செயல்படுத்துவது குறித்து அரசு போக்குவரத்துத்துறை ஆலோசித்து வருகிறது.