ஆவடி அடுத்த திருநின்றவூர் செல்வராஜ் நகர், கம்பர் தெருவை சேர்ந்தவர் மகேந்திரன் (42). இவர் அதேபகுதியில் சொந்தமாக டிராவல்ஸ் நடத்தி வருகிறார். இவரது மனைவி சங்கீதா, இவர்களுக்கு குழந்தை இல்லை.
இந்நிலையில், நேற்று மாலை மகேந்திரன் வீட்டிற்கு அருகே ஒரு ஆட்டோவில் தண்ணீர் கேன் ஏற்றிக் கொண்டிருந்தார். அப்போது, 4 மர்ம நபர்கள் அங்கு வந்தனர். அவர்கள் மகேந்திரனுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் திடீரென மறைத்து வைத்திருந்த ஆயுதத்தை எடுத்து மகேந்திரனை சரமாரியாக வெட்டினர். அந்த கும்பலிடமிருந்து தப்பி மகேந்திரன் ஓட்டம் பிடித்தார். ஆனாலும் அந்த கும்பல் அவரை விடாமல் துரத்தியது.
இதனையடுத்து, அவர் அதே பகுதியில் உள்ள ஒரு மளிகைக்கடைக்குள் உயிரைக் காப்பாற்ற புகுந்தார். அதைப் பார்த்த அந்த கும்பல், மளிகைக்கடைக்குள்ளும் புகுந்து சரமாரியாக வெட்டிவிட்டு தப்பிவிட்டனர்.
இதுகுறித்து அக்கம் பக்கத்தினர் திருநின்றவூர் காவல் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். மேலும் உறவினர், பொதுமக்கள் மகேந்திரனை மீட்டு திருவள்ளூர் அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி மகேந்திரன் பரிதாபமாக உயிரிழந்தார்.
புகாரின் பேரில் திருநின்றவூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் குணசேகரன் தலைமையிலான போலீசார் வழக்கு பதிவு செய்து நடத்திய விசாரணையில், மகேந்திரன், டிராவல்ஸ் நடத்திக் கொண்டே அந்தப் பகுதியில் சமூகப்பணிகளிலும் ஈடுபட்டு வந்துள்ளார்.
அந்தப் பகுதியில் இளைஞர்கள், பெண்களை கேலி செய்தாலோ அல்லது கஞ்சா, மது போதையில் கலாட்டா செய்தாலோ மகேந்திரன் தட்டிக் கேட்பது வழக்கம். கடந்த சில மாதங்களுக்கு முன்பு மகேந்திரன், அந்தப் பகுதியை சேர்ந்த இளைஞர் ஒரு பெண்ணிடம் தகராறு செய்ததை தட்டிக்கேட்டார்.
இதில் ஏற்பட்ட தகராறில் மகேந்திரனை ஒரு இளைஞர் தாக்கியதாகக் கூறப்படுகிறது. புகாரின் பேரில் திருநின்றவூர் போலீசார் அந்த இளைஞர் கைது செய்தனர். இதனால் மகேந்திரனுக்கும் அந்தப் பகுதி இளைஞருக்கும் இடையில் முன் விரோதம் இருந்துள்ளது.
எனவே முன் விரோதம் காரணமாக கொலை செய்திருக்கலாம் என தெரிய வந்துள்ளது. மேலும், போலீசார் தனிப்படை அமைத்து டிராவல்ஸ் அதிபரை கொலை செய்த 4 பேர் கொண்ட கும்பலை கண்காணிப்பு கேமரா உதவியுடன் தேடி வருகின்றனர்.