images 92 - 2026

திருவண்ணாமலை வைகாசி பௌர்ணமி கிரிவலம் இன்று இரவு 8.20 மணி முதல் நாளை மாலை 5.55 மணிவரை..

தமிழகம்

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் இந்த மாதத்திற்கான பௌர்ணமி கிரிவலம் இன்று தொடங்குகிறது.இன்று இரவு 8.20 மணி முதல் நாளை செவ்வாய்க்கிழமை மாலை 5.55 மணிவரை பௌர்ணமி கிரிவலம் பக்தர்கள் செல்லலாம்.

நினைத்தாலே முக்தி தரும் ஸ்தலமாகவும், பஞ்ச பூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் விளங்குகிறது. இக்கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்வார்கள். மேலும் திருவண்ணாமலையில் கோவிலின் பின்புறம் உள்ள மலையை சிவனாக வழிபடுவதால் பௌர்ணமி உள்ளிட்ட விஷேச நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள். அதுமட்டுமின்றி ஞாயிற்றுக்கிழமை மற்றும் விடுமுறை நாட்களில் இக்கோவிலுக்கு உள்ளூர் மட்டுமின்றி வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்வார்கள். இந்த நிலையில் நேற்று விடுமுறை மட்டுமின்றி வைகாசி விசாகம் என்பதால் அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

திருவண்ணாமலையில் நேற்று பகலில் வெயில் வெளுத்து வாங்கியது. பக்தர்கள் வெயிலையும் பொருட்படுத்தாமல் கோவிலுக்கு வந்து நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். சில பக்தர்கள் அருணாசலேஸ்வரர் கோவில் பின்புறம் உள்ள மலையை சுற்றி கிரிவலம் சென்றனர். தொடர்ந்து நேற்று மாலையில் பிரதோஷத்தை முன்னிட்டு கோவில் பிரகாரத்தில் உள்ள பெரிய நந்தி உள்ளிட்ட நந்தி பகவானுக்கும், சாமிக்கும் பால், தேன், சந்தனம், மஞ்சள் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இந்த மாதத்திற்கான பௌர்ணமி கிரிவலம் இன்று இரவு 8.20 மணியளவில் தொடங்குகிறது. தொடர்ந்து நாளை செவ்வாய்க்கிழமை மாலை 5.55 மணியளவில் கிரிவலம் நிறைவடைகிறது.பக்தர்கள் கிரிவலம் செல்ல தேவையான வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

images 92 - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.