

ஆடி அமாவாசையையொட்டி பாபநாசம் தாமிரவருணியில் வேதாரண்யம்,கோடியக்கரை பூம்புகார் கடலில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்பணம் செய்து வழிபட்டனர்.
தை அமாவாசை மற்றும் ஆடி அமாவாசை நாள்களில் புனித நதிகளில் நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பனம் செய்வது வழக்கம். கடந்த இரண்டு ஆண்டுகளாக கரோனாக் கட்டுப்பாட்டால் புனித நதிகளில் குளிக்கத் தடை விதிக்கப்பட்டது. இதையடுத்து இந்த ஆண்டு ஆடி அமாவாசைக்கு பாபநாசம் தாமிரவருணி நதியில் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்த பக்தர்கள் புனித நீராடி முன்னோர்களுக்குத் தர்ப்பணம் செய்து வழிபட்டனர். திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர், மதுரை உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து ஆயிரக் கணக்கானவர்கள் குடும்பத்துடன் வந்திருந்து தாமிரவருணியில் நீராடினர்.
ஆடி அமாவாசையை முன்னிட்டு பாபநாசம் சிவன் கோயில் அதிகாலையிலேயே திறக்கப்பட்டு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் ஆராதனை நடைபெற்றது. நதியில் நீராடிய பக்தர்கள் சிவன் கோயிலுக்குச் சென்று வழிபட்டனர்.மேலும் ஆம்பூர் கடனாநதி, கடையம் ராமநதி, அம்பாசமுத்திரம், கல்லிடைக்குறிச்சி தாமிரவருணி கரைகளிலும் ஏராளமானவர்கள் முன்னோர்களுக்குத் தர்ப்பணம் செய்தனர்.

நாகை மாவட்டம்,வேதாரண்யம்,கோடியக்கரை கடல் பரப்பில் ஆடி அமாவாசையையொட்டி ஏராளமான மக்கள் இன்று புனித நீராடல் செய்து,தங்களது முன்னோர்களுக்கு திதி கொடுத்து வருகின்றனர்.
வேதாரண்யம் மற்றும் ஆதி சேது எனப்படும் கோடியக்கரை கடல் பகுதியில் தை, ஆடி அமாவாசை,அர்த்ததோயம்,மகோதயம்,மாசி மகம் ஆகிய நாள்களில் புனித நீராடல் செய்யும் மக்கள் தங்கள் முன்னோர்களுக்கு திதி கொடுப்பது வழக்கம்.அந்த வகையில்,நிகழாண்டு ஆடி அமாவாசை நாளான வியாழக்கிழமை,பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த ஏராளமான மக்கள் அதிகாலை தொடங்கி புனித நீராடல் செய்தனர்.கோடியக்கரை முழுக்குத்துறையில் நீராடியவர்கள்,தங்களது முன்னோர்கள் நினைவாக தர்ப்பணம் செய்தனர்.பின்னர் அங்குள்ள சித்தர் கோவில்,ராமர் பாதம் உள்ளிட்ட இடங்களில் வழிபட்டனர்.அதேபோல்,வேதாரண்யம் சன்னதி கடல் பரப்பில் நீராடி,முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்த மக்கள்,வேதாரண்யம் வேதாரண்யேசுவரர் கோவிலில் இறைவனை வழிபட்டனர்.

நமது முன்னோர்கள் நினைவாக பித்ரு தர்ப்பணங்களை காவேரி ஆறு கடலோடு சங்கமிக்கும் பூம்புகாரில் செய்தால் பல மடங்கு பலன்களை கிடைக்கும் என்பது காவிரி புராணத்தில் கூறப்பட்டுள்ளது. வியாழக்கிழமை ஆடி அமாவாசையை ஒட்டி காவிரி ஆறு கடலோடு கலக்கும் பூம்புகார் சங்கமத்தில் அதிகாலை முதலே சுமார் லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் புனித நீராடினார்கள். முதலில் சங்கல்பம் செய்துவிட்டு காவேரி ஆற்றிலும், பின்னர் கடலிலும் அதனைத் தொடர்ந்து மீண்டும் காவிரி ஆற்றிலும் நீராடி தங்கள் மூதாதையர் நினைவாக தர்ப்பணம் செய்தனர். நிகழ் ஆண்டு காவிரியில் அதிக அளவில் நீர் வந்ததால் பக்தர்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் நீராடினார்கள். பெண்கள் கருகமணி, எலுமிச்சை வெற்றிலை பாக்கு உள்ளிட்ட பொருள்களை காவேரி அம்மனுக்கு படையல் செய்து வழிபட்டனர். இதில் தமிழகம் முழுவதும் இருந்து சுமார் லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.
புகழ் பெற்ற பரிகார ஸ்தலமான பவானி கூடுதுறையில் பவானி, காவேரி மற்றும் அமிர்தநதி ஆகிய 3 ஆறுகள் சங்கமிக்கும் இடத்தில் அமைந்துள்ள சங்கமேஸ்வரர் கோவில் புராணங்களில் பாடப்பெற்ற சிவ ஸ்தலமாகும். இந்த ஸ்தலத்தில் வந்து முன்னோர்களுக்கு திதி தர்ப்பணம் செய்து வழிபட்டு கூடுதுறையில் புனித நீராடி சங்கமேஸ்வரரை வழிபட்டால் பக்தர்கள் நினைத்த காரியம் கைகூடும் என்பது ஐதீகம். இதுபோல் பரிகாரங்கள் தோச நிவர்த்திக்கான வழிபாடுகள் செய்வதற்கும் சிறந்த இடமாக உள்ளது. இந்நிலையில் இன்று ஆடி அமாவாசையையொட்டி பவானி கூடுதுறைக்கு அதிகாலை 4 மணி முதல் பக்தர்கள் பொதுமக்கள் வரத் தொடங்கினர். கொரோனா காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக ஆடி அமாவாசையையொட்டி பக்தர்களுக்கு புனித நீராட அனுமதி மறுக்கப்பட்டு இருந்தது. இதே போல் பரிகாரம் பூஜை செய்வதற்கும் தடை விதிக்கப்பட்டிருந்தது. ஆனால் இந்த ஆண்டு பக்தர்கள் புனித நீராட அனுமதி அளிக்கப்பட்டு இருந்தது. பரிகார பூஜை செய்வதற்கும் இடம் ஒதுக்கப்பட்டிருந்தது. ஈரோடு, சேலம், கோவை, திருப்பூர், நாமக்கல் மற்றும் சுற்று வட்டார பகுதியில் இருந்து ஆயிரக்கணக்கான பொதுமக்கள் அதிகாலை முதலே பவானி கூடுதுறையில் குவிய தொடங்கினர். பொதுமக்கள் ஆயிரக்கணக்கானோர் திரண்டு வந்து தங்களது முன்னோர்களுக்கு திதி தர்ப்பணம் கொடுத்தனர். பின்னர் கூடுதுறையில் புனித நீராடி சங்கமேஸ்வரரை வழிபட்டனர்.
இதேபோல் ஆடி அமாவாசையையொட்டி கொடுமுடி காவிரி ஆற்றங்கரையிலும் இன்று காலை முதலே ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டனர். முன்னோர்களுக்கு திதி தர்ப்பணம் கொடுத்தனர். இதற்காக கோவில் நிர்வாகம் சார்பில் பல்வேறு வசதிகள் செய்யப்பட்டிருந்தன. முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து காவேரி ஆற்றில் புனித நீராடி மகுடேஸ்வரரை வழிபட்டனர்.
