வாஜ்பாய் 91-வது பிறந்த தினம்: பாஜக.,வினர் இனிப்பு கொடுத்து கொண்டாட்டம்

சென்னை:

வேற்றுக் கட்சியினராலும் மதிக்கப்படும் இந்தியாவின் மூத்த தலைவர், முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் .

அரசியல் வரலாற்றில் முதல் முறையாக காங்கிரஸ் அல்லாத அரசை 5 ஆண்டுகள் முழுமையாக வழிநடத்திய பெருமைக்குரியவர். இவர்,

1924-ம் ஆண்டு டிசம்பர் 25-ம் தேதி மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியரில் நடுத்தர குடும்பத்தில் பிறந்தார்.

வாஜ்பாயின் வாழ்க்கைச் சுவடுகள் ஒவ்வொன்றும் இந்தியாவின் சரித்திரம்.

மற்ற பாஜக தலைவர்களைப் போல் வாஜ்பாயும் ஆர்எஸ்எஸ் மூலமே அரசியலில் அடியெடுத்து வைத்தார்.

அரசியலில் ஈடுபடுவதில்லை; அமைப்பு ரீதியாகவே இயங்குவோம் என்பது ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் கொள்கை. இந்நிலையில், அப்போதைய ஆர்.எஸ்.எஸ். தலைவராக இருந்த ‘குருஜி’ என்று அழைக்கப்பட்ட மாதவ சதாசிவ கோல்வல்கரின் அறிவுரைப்படி, 1951-ல் நேருவின் அமைச்சரவையில் அமைச்சராக இருந்த ஷியாம பிரசாத் முகர்ஜியும், ஆர்எஸ்எஸ் முழு நேர ஊழியரான தீனதயாள் உபாத்தியாயவும் ‘பாரதிய ஜன சங்கம்’ என்ற புதிய அரசியல் கட்சியைத் தொடங்கினர்.

அவர்களுக்கு துணையாக வாஜ்பாய், அத்வானி ஆகியோரை அக்கட்சிக்கு அனுப்பி வைத்தார் எம்.எஸ்.கோல்வல்கர்.

அப்போது வாஜ்பாய் ஆர்எஸ்எஸ்ஸின் இந்தி வார இதழான ‘பாஞ்சஜன்ய’வின் ஆசிரியாக இருந்தார்.

தனது பேச்சாற்றல், அமைப்புத் திறன், போராட்ட குணம், நகைச்சுவை உணர்வு ஆகியவற்றால் சில ஆண்டுகளிலேயே அக்கட்சியில் முக்கியத் தலைவராக உயர்ந்தார்.

1957 முதல் 10 முறை மக்களவை, 2 முறை மாநிலங்களவை உறுப்பினராக இருந்த அவர், ஆளும் காங்கிரஸ் கட்சிக்கு சிம்ம சொப்பனமாகத் திகழ்ந்தார். இந்திரா காந்தி ஆட்சியில் நாட்டில் நெருக்கடி நிலை அமல்படுத்தப்பட்டபோது அதை எதிர்த்ததால் சிறையில் அடைக்கப்பட்டார்.

 1977-ல் மொரார்ஜி தேசாய் தலைமையில் முதல் முறையாக காங்கிரஸ் அல்லாத அரசு அமைந்த போது வாஜ்பாய் வெளியுறவுத் துறை அமைச்சர் ஆனார். ஐ.நா. சபையிலும். பல்வேறு வெளிநாடுகளில் அவர் ஆற்றிய பணிகள் இந்தியாவுக்கு பெருமையைத் தேடித் தந்தன.

 1977-ல் ஜனதா கட்சியில் இணைந்த பாரதிய ஜன சங்கம், பின்னர் 1980-ல் பாரதிய ஜனதா கட்சியாக (பாஜக.,) உருவெடுத்தது. அதன் முதல் தலைவராகப் பொறுப்பேற்ற வாஜ்பாய் கட்சிக்காக அர்ப்பணிப்புடன் பணியாற்றினார். அதன் விளைவாக காங்கிரஸுக்கு மாற்றாக பாஜக விரைவாக வளரத் தொடங்கியது.

 1996-ல் முதல் முறையாக பிரதமரான வாஜ்பாய் 13 நாட்களில் பதவியை இழந்தார். ஆர்.எஸ்.எஸ்., பாஜக.,வை கடுமையாக விமர்சிப்பவர்கள் கூட வாஜ்பாயை ஏற்றுக் கொண்டார்கள். கொண்டாடவும் செய்தார்கள். ‘சேற்றில் மலர்ந்த செந்தாமரை’, ‘தவறான கட்சியில் இருக்கும் சரியான மனிதர்’ என்றெல்லாம் எதிர்க்கட்சித் தலைவர்கள் அவரை பாராட்டினர்.

இதனால் 1998, 1999 தேர்தல்களில் பாஜக.,வை ஏற்காதவர்கள்கூட அக்கட்சியுடன் கூட்டணி அமைத்தனர்.

1998-ல் அதிமுகவும், 1999-ல் திமுகவும் பாஜகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டன.

1999-ல் அதிமுக ஆதரவை வாபஸ் பெற்றுக் கொண்டதால் 13 மாதங்களில் வாஜ்பாய் அரசு கவிழ்ந்தது.

1999-ம் ஆண்டு தேர்தலில் திமுக உள்ளிட்ட 23 கட்சிகள் துணையுடன் வெற்றி பெற்று மத்தியில் காங்கிரஸ் அல்லாத அரசை 5 ஆண்டுகள் வழிநடத்தினார் வாஜ்பாய்.

 1998 மே 11, 13 தேதிகளில் பொக்ரானில் அணுகுண்டு சோதனை நடத்த பச்சைக் கொடி காட்டினார். இது, இந்தியாவை உலக நாடுகள் அதிர்ச்சி கலந்த ஆச்சரியத்துடன் பார்க்க வைத்தது. இந்த அணுகுமுறை வாஜ்பாயை புகழின் உச்சிக்குக் கொண்டு சென்றது.

1999 மே முதல் ஜூலை வரை கார்கில் எல்லையில் பாகிஸ்தானுடன் நடைபெற்ற போரில் இந்தியா வெற்றி பெற்றாலும், ஊடுருவலைத் தடுக்க முடியவில்லை என்ற விமர்சனமும் எழுந்தது. இந்நிலையில், அமைதி நடவடிக்கைகளை எடுத்தார் வாஜ்பாய்.

பாகிஸ்தானுக்கு பேருந்து போக்குவரத்து, அமைதிப் பேச்சுவார்த்தை என தனது ஆட்சிக் காலத்தில் நல்லுறவுக்கு பல்வேறு நடவடிக்கைகளை வாஜ்பாய் எடுத்தார்.

ஆனாலும், காந்தகார் விமானக் கடத்தல், தீவிரவாதிகள் விடுதலை, நாடாளுமன்ற வளாகத்தில் தீவிரவாதிகள் தாக்குதல், குஜராத் இனக் கலவரம் உள்ளிட்டவை வாஜ்பாய் அரசுக்கு கரும்புள்ளியாக அமைந்தன.

 வயது முதிர்ச்சியால் ஏற்பட்ட உடல் நலக்குறைவால் கடந்த 10 ஆண்டுகளாக அரசியலில் இருந்து முழுமையாக ஒதுங்கியிருக்கும் வாஜ்பாய், டிச.25 இன்று தனது 91-ஆவது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார்.

இதை ஒட்டி, நாடு முழுதும் பாஜகவினர் இனிப்புகள் கொடுத்து தங்கள் மகிழ்ச்சியைத் தெரிவித்தனர். 

Donate to Dhinasari News! Independent journalism that speaks truth to power and is free of corporate and political control is possible only when people start contributing towards the same. Please consider donating towards this endeavour to fight fake news and misinformation.