images 35 2 - 2026

கன்னியாகுமரியில் முகாமிட்ட தமிழக கேரள சுற்றுலா பயணிகள் ..

சுற்றுலா

கோடை விடுமுறை இன்றுடன் நிறைவடைவதையொட்டியும் இன்று வைகாசி விசாகம் என்பதாலும் கன்னியாகுமரியில் தமிழக கேரள சுற்றுலா பயணிகள் பல்லாயிரக்கணக்கில் குவிந்தனர்.

கன்னியாகுமரி இந்தியாவின் தென்கோடி முனையில் அமைந்துள்ள கன்னியாகுமரி இது உலகப் புகழ் பெற்ற சுற்றுலாத் தலமாகும். இங்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். இங்கு வருடம் முழுவதும் சுற்றுலாப் பயணிகள் வந்து சென்றாலும் நவம்பர், டிசம்பர், ஜனவரி ஆகிய 3 மாதங்களும் வழக்கத்தைவிட அதிகமான சுற்றுலாப் பயணிகள் வருவார்கள். இந்த 3மாத காலமும் இங்கு சீசன் காலமாக கருதப்படுகிறது. இதேபோல ஏப்ரல்,மே கோடை விடுமுறை சீசன் காலங்களிலும் ஏராளமான சுற்றுலா பயணிகள் கன்னியாகுமரிக்கு வருவார்கள்.

இந்த ஆண்டு கோடை விடுமுறை சீசன் கடந்த 2 மாதங்களாக களைகட்டியது. இந்த கோடை விடுமுறை சீசன் இன்றுடன் நிறைவு பெறுகிறது. இதையொட்டி சுற்றுலா தலங்களுக்கு மக்கள் படை எடுத்துச் சென்ற வண்ணமாக உள்ளனர். அந்த அடிப்படையில் கன்னியாகுமரியில் வாரத்தின் கடைசி விடுமுறை நாளான இன்று ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.

கன்னியாகுமரியில் முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம், சங்கிலித்துறை கடற்கரை பகுதியில் இன்று அதிகாலையில் சூரியன் உதயமாகும் காட்சியை காண ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்து இருந்தனர். கன்னியாகுமரி கடலில் இன்று அதிகாலையில் சூரியன் உதயமான காட்சியை சுற்றுலா பயணிகள் பார்த்து ரசித்தனர். அதன்பிறகு கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் காலையில் இருந்தே ஏராளமான சுற்றுலா பயணிகள் ஆனந்த குளியல் போட்டனர். கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் மற்றும் திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலில் தரிசனத்துக்காக பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலையை பார்வையிட இன்று காலை 8 மணியில் இருந்தே சுற்றுலா பயணிகள் படகுத்துறையில் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். அவர்கள் படகில் ஆர்வத்துடன் பயணம் செய்து விவேகானந்தர் மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலையை பார்வையிட்டு வந்தனர். மேலும் கன்னியாகுமரியில் உள்ள சுற்றுலாத் தலங்களான காந்தி நினைவு மண்டபம், காமராஜர் மணிமண்டபம், சுனாமி நினைவுப் பூங்கா, கடற்கரை சாலையில் உள்ள பேரூராட்சி பொழுதுபோக்கு பூங்கா,சன்செட் பாயிண்ட் கடற்கரை பகுதி, மியூசியம், அரசு அருங்காட்சியகம், மீன் காட்சி சாலை, சுற்றுச்சூழல் பூங்கா, வட்டக்கோட்டை பீச் உள்பட அனைத்து சுற்றுலாத் தலங்களிலும் இன்று காலையில் இருந்தே சுற்றுலா பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது. இதனால் விடுமுறை நாளான இன்று சுற்றுலா தலங்கள் களை கட்டியது. இந்த சுற்றுலாதலங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது. கடற்கரைப்பகுதியில் சுற்றுலா போலீசாரும் கடலோர பாதுகாப்பு குழும போலீசாரும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.

images 35 2 - 2026
730137 05 kumari 12 06 - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.