பஸ்ஸில் பெண் பயணிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த இந்தியருக்கு சிங்கப்பூரில் சிறை

சிங்கப்பூர்: சிங்கப்பூரில் பஸ்சில் பயணம் செய்த பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக, இந்தியர் ஒருவருக்கு மூன்று வார சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. சிங்கபூரில் டிப்பார்ட்மெண்ட் ஸ்டோரில் வேலை பார்த்து வந்த சீதாராமன் ரமேஷ் (32) என்பவர், சென்ற வருடம் ஜூலை 25ல், போர்ட் சர்வீஸ் 13ல் கெய்லாங் சாலையில் சென்ற பேருந்தில் பயணம் செய்து கொண்டிருந்தார். அப்போது, 39 வயது பெண் ஒருவர் பேருந்தின் கடைசி இருக்கைக்கு முந்தைய இருக்கையில் அமர்ந்திருந்தார். அந்தப் பெண் தனியாக இருந்ததை கவனித்த சீதாராமன் ஒவ்வொரு இருக்கையாக மாறி கடைசியில் அந்தப் பெண் இருந்த இருக்கைக்குப் பின் இருக்கையில் அமர்ந்தாராம். அதன் பின் அந்தப் பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். ஒரு கட்டத்தில் எல்லை மீறவே அந்தப் பெண் சீதாராமனை கண்டித்ததுடன் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது சீதாராமன் தனது குற்றத்தை ஒப்புக் கொண்டார். இதனால் அவருக்கு மூன்று வார சிறைத் தண்டனை அளித்து நீதிபதி உத்தரவிட்டார். இவர் மீது இதுபோல் மேலும் இரு குற்றச்சாட்டுக்கள் நிலுவையில் உள்ளதாம். இதில் குற்றவாளி என்று அவர் நிரூபிக்கப்பட்டால் இரண்டு ஆண்டுகளுக்கு மேல் தண்டனையும் அபராதம் மற்றும் சவுக்கடியும் கிடைக்குமாம்.