மலேசியப் பயணத்தின் போது இந்திய வான்வழியைத் தவிர்க்கும் இம்ரான் கான்

மலேசியப் பயணத்தின் போது இந்திய வான்வழிப் பயன்பாட்டை தவிர்க்க பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் முடிவெடுத்துள்ளார்.
சமீபகாலமாக ஜம்மு-காஷ்மீரின் புல்வாமா தாக்குதல், 370 சிறப்பு சட்டப்பிரிவு நீக்கம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இந்தியா, பாகிஸ்தான் இடையில் பதற்றமான சூழல் காணப்படுகிறது.
அதுமட்டுமின்றி பாகிஸ்தான் ராணுவம் அவ்வப்போது இந்திய எல்லைப் பகுதிகளில் ஊடுருவி துப்பாக்கிச்சூடு சம்பவங்களை நடத்தி வருகிறது. பயங்கரவாத அச்சுறுத்தல் சம்பவங்களும் இந்திய எல்லைப் பகுதியில் அதிகரித்து காணப்படுகிறது.
இந்த நிலையில், இருநாள் பயணமாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், மலேசியாவுக்கு திங்கள்கிழமை புறப்பட்டுச் செல்கிறார். அப்போது இந்திய வான்வழிப் பயன்பாட்டை தவிர்க்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
முன்னதாக, இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோரின் வெளிநாட்டுப் பயணங்களின் போது பாகிஸ்தான் வான்வழிப் பயன்பாட்டுக்கு பிரதமர் இம்ரான் கான் அனுமதி மறுத்தது குறிப்பிடத்தக்கது