லண்டனில் பயங்கரவாத தாக்குதல்: 6 பேர் பலி; பாலம் மூடல்!

உலகம் சற்றுமுன்

london bridge borough market - 2026

லண்டன்:

லண்டனில் உள்ள பாலத்தில் வெள்ளை வேன் ஒன்றை தாறுமாறாக ஓட்டி பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியல், 6 பேர் பலியாகியுள்ளனர். 30க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.

புகழ்பெற்ற லண்டன் பாலத்தில் சென்று கொண்டிருந்த வெள்ளை வேன் ஒன்று, நேற்று இரவு சுமார் 10 மணி அளவில் பாலத்தில் தாறுமாறாக ஓடி அதில் நடந்து சென்று கொண்டிருந்தவர்கள் மீது மோதியது. இதனால் பாலத்தில் நடந்து சென்று கொண்டிருந்த வர்களில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். 30க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இந்தச் சம்பவத்தையடுத்து போலீசார் தாற்காலிகமாக லண்டன் பாலத்தை மூடியுள்ளனர்.

வெள்ளை வேனில் 3 பேர் இருந்தனர். உணவுவிடுதிகள், மதுபான பார்கள் அதிகம் கொண்ட பரோஹ் மார்க்கெட் பகுதியில் மக்களை மிரட்டி கத்தியல குத்தினர் என்றும் அவர்கள் ஆயுதங்களுடன் இருக்கலாம் எனவும் லண்டன் போலீசார் கூறினர். இந்தச் சம்பவத்தில் 6 பேர் பலியாகியுள்ளனர். பயங்கரவாதிகள் மூவரும் அடுத்த 8 நிமிடங்களில் ஆயுத போலீஸாரால் சுடப்பட்டனர்.

இந்தச் சம்பவம் குறித்துக் கூறிய காவல் துணை ஆணையர் மார்க் ரௌவ்லி, “சந்தேகப்படும்படி வந்த அந்த நபர்கள், தங்களிடம் தற்கொலைப் படையினர் போன்ற ஆயுதங்களை உடையில் கட்டியிருந்தனர். அதனால் சற்று பின்வாங்க நேர்ந்தது. அவர்கள் சுடப்பட்ட பின்னர்தான் அவை போலியானவை என்று தெரியவந்தது” என்றார்.

இந்தத் தாக்குதலில் காயம் பட்ட 30க்கும் மேற்பட்டோரை ஆம்புலன்ஸில் மருத்துவமனைக்கு ஏற்றிச் சென்றதாக, ஆம்புலன்ஸ் சர்வீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

பயங்கரவாதிகள் மிரட்டியபோது, எதிர்ப்பு தெரிவித்த போக்குவரத்து நடத்துனர் ஒருவருக்கு கத்திக் குத்து விழுந்தது. ஆனால் அவர் அபாய கட்டத்தை தாண்டிவிட்டார் என்று போக்குவரத்து போலீஸார் ஒருவர் கூறினார்.

இது பயங்கரவாதிகளின் தாக்குதல் என போலீசார் தரப்பில் கூறப்படுகிறது. இது குறித்து கருத்து தெரிவித்த பிரிட்டன் பிரதமர் தெரசா மே, இது ஒரு கோழைத்தனமான தாக்குதல் என்று கூறி, மேற்கொண்டு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்த அவசர கூட்டத்தைக் கூட்டினார்.

இதனிடையே லண்டன் சம்பவம் பெரும் வருத்தமளிக்கிறது. அவர்களுக்கு வேண்டிய உதவியை அமெரிக்கா செய்யும். இது போன்ற சம்பவங்கள் தொடராமல் இருக்க வெளிநாட்டு பயணிகளுக்கான தீவிர கட்டுப்பாடு தேவை என அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.