கொரோனா: மீண்ட மருத்துவருக்கு மீண்டும் தொற்று!

உலகம் சற்றுமுன்
corono medicine

நொய்டாவில் மருத்துவர் ஒருவர் கொரோனாவில் இருந்து மீண்டு 45 நாள்களுக்குப் பின் மீண்டும் அந்தத் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கௌதம் புத் நகர் மாவட்டத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் பணியாற்றி வரும் மருத்துவருக்கு பல முறை கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டு, அதில், அவருக்கு இரண்டாவது முறை கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

குழந்தைகள் நல மருத்துவமனையின் தனிமைப்படுத்தப்பட்ட வார்டில் பணியாற்றி வந்த மருத்துவருக்கு கடந்த மே மாதம் 15ம் தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு 15 நாள்கள் சிகிச்சை பெற்று மே 30-ம் தேதி கொரோனா இல்லை என்பது இரண்டு முறை உறுதி செய்யப்பட்ட பிறகு அவர் வீட்டுக்கு வந்து இரண்டு வாரங்கள் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டார். பிறகுதான் அவர் மீண்டும் பணிக்கு வந்தார்.

இந்த நிலையில், பணிக்குச் சேர்ந்த இரண்டு வாரங்கள் கழிந்த நிலையில், அவருக்கு திடீரென மயக்கம் ஏற்படுவதை உணர்ந்தார். ஆனால் காய்ச்சலோ இருமல் போன்ற அறிகுறிகளோ தென்படவில்லை.

முன்னெச்சரிக்கையாக, அவருடன் பணியாற்றிய மருத்துவர்கள் அவரது சளி மாதிரியை எடுத்து பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

அதில் அவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. பிறகு அதனை உறுதி செய்ய மீண்டும் பரிசோதனை நடத்தப்பட்டு, அப்போதும் அவருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து நிபுணர்கள் கூறுகையில், இரண்டாவது முறை கொரோனா பாதிப்பது என்பது வெகு அரிது, ஒரு வேளை அவர் முதல் முறை கொரோனா பாதிப்புக்கு உள்ளாகும் போது முழுமையாகக் குணமடையாமல் இருந்திருக்கலாம்.

ஒருவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்படும் போது அவர்களது உடலில் தோன்றும் நோய் எதிர்ப்பு சக்தி காரணமாக, இரண்டாவது முறை நோய்த் தொற்று ஏற்படாமல் தடுக்கப்படுகிறது. சிலருக்கு அந்த நோய் எதிர்ப்பு சக்தி விரைவாகவே குறைந்து விடும் போது இவ்வாறு நேரிடலாம் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.