December 6, 2024, 10:46 AM
27.2 C
Chennai

ஜப்பான் நாட்டின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே சுட்டு கொலை.. குற்றவாளி கைது..பிரதமர் மோடி இரங்கல்..

ஜப்பான் நாட்டின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே இன்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுக் கொண்டு இருந்த போது துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டார். துப்பாக்கிச் சூட்டில் படுகாயம் அடைந்து தீவிர சிகிச்சை பெற்று வந்த முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

67 வயதான ஜப்பான் நாட்டின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே, 2012 ஆம் ஆண்டு முதல் 2020 ஆம் ஆண்டு வரை அந்நாட்டின் பிரதமராக பணியாற்றினார். கடந்த 2020 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் உடல்நிலை காரணமாக தனது பதவியை ராஜினாமா செய்தார். இந்நிலையில், இன்று காலை நாரா என்ற பகுதியில் பொதுமக்கள் முன்னிலையில் ஷின்சோ அபே பேசிக்கொண்டு இருக்கும் போது, யமகாமி என்பவரால் சுடப்பட்டார். ஜப்பானிய கடல்சார் தற்காப்புப் படையின் முன்னாள் உறுப்பினரான 41 வயதான அந்த நபர், வீட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியால் அபே மீது துப்பாக்கிச் சூடு நடத்தினார்.

ஷின்சோ அபே மீதான தாக்குதலை கொண்டாட என்ன காரணம்..? பொதுவாக ஜப்பானிய அரசியல்வாதிகள் ஆயுதம் ஏந்திய பாதுகாப்பு முகவர்களுடன் தான் வெளியே வருகிறார்கள். ஆனால் அவர்கள் பெரும்பாலும் பொதுமக்களுடன் நெருக்கமாக இருப்பார்கள், குறிப்பாக அரசியல் பிரச்சாரங்களின் போது. அதே போல தான், ஷின்சோ அபேவும் பொதுவெளியில் சகஜமாக பேசிக் கொண்டிருந்தார்.

ALSO READ:  IND Vs AUS Test: விராட் கோலி சதம்

அவருடைய பாதுகாவலர்கள் சற்று தள்ளியே நிற்க வைக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில், கூட்டத்தில் சாம்பல் நிற உடை அணிந்து கொண்டு நின்ற யமகாகி என்ற அந்த நபர், ஷின்சோ அபேவை இரண்டு முறை துப்பாக்கியால் சுட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ தற்போது வெளியாகி உள்ளது. இந்த துப்பாக்கி சூடு சம்பவம் நடந்ததும் அவரின் பாதுகாவலர்கள் ஓடி வந்து ஷின்சோ அபேவை தூக்கினார்கள். வேறு சில பாதுகாவலர்கள் ஷின்சோ அபேவை சுட்டவரை ஓடி சென்று பிடித்துள்ளனர். இந்த காட்சிகளும் வீடியோவாக பதிவாகி உள்ளது. அபேவைத் தாக்கிய நபரிடம் நடத்திய முதற்கட்ட விசாரணையில், ஷின்சோ அபேவின் செயல்களால் அவன் அதிருப்தி அடைந்ததால், அவரை கொல்ல முடிவெடுத்து சுட்டுகொன்றதாக பரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளான்.

ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது,

எனது அன்பான நண்பர்களில் ஒருவரான ஷின்சோ அபேயின் சோகமான மறைவு குறித்து வார்த்தைகளால் சொல்ல முடியாத அதிர்ச்சியும் வருத்தமும் அடைந்துள்ளேன். அவர் ஒரு சிறந்த உலகளாவிய அரசியல்வாதி, ஒரு சிறந்த தலைவர் மற்றும் ஒரு குறிப்பிடத்தக்க நிர்வாகி. ஜப்பானையும் உலகையும் சிறந்த நாடாக மாற்ற அவர் தனது வாழ்க்கையை அர்ப்பணித்தார். ஷின்சோ அபே உடனான எனது தொடர்பு பல ஆண்டுகளுக்கு முந்தையது. நான் குஜராத் முதல்வராக இருந்தபோது அவரைப் பற்றி தெரிந்துகொண்டேன். நான் பிரதமரான பிறகும் எங்கள் நட்பு தொடர்ந்தது. பொருளாதாரம் மற்றும் உலகளாவிய விவகாரங்கள் பற்றிய அவரது கூர்மையான நுண்ணறிவு எப்போதும் எனக்கு ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

ALSO READ:  பாராலிம்பிக்: பெரும் முன்னேற்றம் கண்ட  இந்திய அணி! 

அண்மையில் நான் ஜப்பான் சென்றிருந்தபோது, ​​மீண்டும் அபேவைச் சந்தித்துப் பல விஷயங்கள் குறித்துப் பேசும் வாய்ப்புக் கிடைத்தது. அவர் எப்போதும் போல் புத்திசாலித்தனமாகவும் நுண்ணறிவுடனும் இருந்தார். இது எங்கள் கடைசி சந்திப்பாக இருக்கும் என்று நான் அறிந்திருக்கவில்லை. அவரது குடும்பத்தினருக்கும் ஜப்பானிய மக்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தியா-ஜப்பான் உறவுகளை ஒரு சிறப்பு மூலோபாய மற்றும் உலகளாவிய கூட்டாண்மை நிலைக்கு உயர்த்துவதில் மகத்தான பங்களிப்பைச் செய்தார். இன்று, முழு இந்தியாவும் ஜப்பானுடன் வருந்துகிறது. இந்த கடினமான தருணத்தில் எங்கள் ஜப்பானிய சகோதர சகோதரிகளுடன் நாங்கள் ஒற்றுமையாக நிற்கிறோம். முன்னாள் பிரதம மந்திரி ஷின்சோ அபேவுக்கு அளிக்கும் ஆழ்ந்த மரியாதையின் அடையாளமாக, 9 ஜூலை 2022 அன்று ஒரு நாள் தேசிய துக்கம் அனுசரிக்கப்படும். டோக்கியோவில் எனது அன்பான நண்பரான ஷின்சோ அபேவுடன் நான் சமீபத்தில் சந்தித்ததிலிருந்து ஒரு படத்தைப் பகிர்கிறேன். இந்தியா-ஜப்பான் உறவுகளை வலுப்படுத்துவதில் எப்போதும் ஆர்வமுள்ள அவர், ஜப்பான்-இந்தியா சங்கத்தின் தலைவராகப் பொறுப்பேற்றார். இவ்வாறு அவர் குறிப்பிட்டிருந்தார்.

ALSO READ:  IND Vs AUS Test: முதல் நாளிலேயே படபடவென சரிந்த விக்கெட்டுகள்!
author avatar
Sakthi Paramasivan.k
Media News Reporter, Rajapalayam

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week