இங்கிலாந்து மகாராணி எலிசபெத்தின் உடல் 5 நாட்கள் பொதுமக்கள் அஞ்சலிக்காக லண்டன் வெஸ்ட் மினிஸ்டர் அரங்கில் வைக்கப்படவுள்ளது. உடல் நல்லடக்கம் 10 நாட்களுக்கு பின் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்து மகாராணி இரண்டாம் எலிசபெத். இங்கிலாந்து நாட்டில் உள்ள பக்கிங்காம் மாளிகையில் வசித்து வந்தார். 96 வயதான அவர் உடல்நலக்குறைவு காரணமாக ஸ்காட்லாந்தில் உள்ள பண்ணை வசித்து வந்தார்.
அவரை மருத்துவக்குழு கண்காணித்து வந்தது. இதனிடையே, ராணி இரண்டாம் எலிசபெத்திற்கு நேற்று திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து, மகாராணியின் அதிகாரப்பூர்வ மருத்துவக்குழுவினர் ராணிக்கு சிகிச்சை அளித்து வந்தனர். இந்நிலையில், உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த மகாராணி எலிசபெத் நேற்று உயிரிழந்தார். ராணி 2-ம் எலிசபெத் உயிரிழந்ததையடுத்து இங்கிலாந்தின் புதிய மன்னராக இளவரசர் 3-ம் சார்லஸ் அரியணை ஏறியுள்ளார்.
இங்கிலாந்து மகாராணி எலிசபெத் மறைவுக்கு உலக நாடுகளின் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், ராணி எலிசபெத்தின் உடல் நல்லடக்கம் 10 நாட்களுக்கு பின் நடைபெறும் எனவும், 5 நாட்கள் பொதுமக்கள் அஞ்சலிக்காக லண்டன் வெஸ்ட் மினிஸ்டர் அரங்கில் ராணி எலிசபெத்தின் உடல் வைக்கப்படவுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
இந்த நிலையில் மகாராணி எலிசபெத் மறைவுக்கு இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்மு இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:- இங்கிலாந்தின் மகாராணி இரண்டாம் எலிசபெத் மறைவால், உலகம் ஒரு சிறந்த ஆளுமையை இழந்துவிட்டது. 70 ஆண்டுகளுக்கு மேலாக அவர் தனது நாட்டையும் மக்களையும் வழிநடத்தியதிலிருந்து ஒரு சகாப்தம் கடந்துவிட்டது. இங்கிலாந்து மக்களின் துயரத்தைப் பகிர்ந்து கொள்வதோடு, மகாராணி எலிசபெத் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.