
-முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் –
ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியா 100 பதக்கங்களைக் கடந்து சாதனை படைத்து வருகிறது. இந்தியா இதுவரை 25 தங்கம், 35 வெள்ளி, 40 வெண்கலம் என மொத்தம் 100 பதக்கங்களுடன் 4வது இடத்தில் உள்ளது. 100 பதக்கங்களை வாங்கிக் குவித்து, நாட்டுக்குப் பெருமை தேடித் தந்து, வரலாற்று சாதனை படைத்த வீரர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
19வது ஆசிய விளையாட்டுப் போட்டி சீனாவின் ஹாங்சோவ் நகரில் தற்போது நடந்து வருகிறது. இதில் 45 நாடுகளைச் சேர்ந்த 12,400 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இதில், ஒவ்வொரு நாளும் இந்திய வீரர்கள் பதக்கங்களைக் குவித்து வருகின்றனர்.
வில்வித்தைப் போட்டியில் மகளிர் ஒற்றையர் பிரிவில் இந்தியா தங்கம் வென்றது. தென்கொரிய வீராங்கனையை 149- 145 என்ற புள்ளிகளில் வீழ்த்தி ஜோதி தங்கப் பதக்கம் வென்றார். ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய வீராங்கனை ஜோதி சுரேகா இதுவரை 3 தங்கப் பதக்கம் வென்றுள்ளார். வில்வித்தை போட்டியில் மகளிர் ஒற்றையர் பிரிவில் இந்திய வீராங்கனை அதிதி சுவாமி வெண்கலம் வென்றார்.
ஆடவர் ஒற்றையர் பிரிவில், இந்திய வில்வித்தை வீரர்கள் ஓஜாஸ் பிரவீன் தங்கமும், அபிஷேக் வர்மா வெள்ளிப் பதக்கமும் வென்றனர்.
மகளிர் கபடிப் போட்டியில் சீன தைபே அணியை 26-24 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தி இந்திய மகளிள் கபடி அணி தங்கம் வென்றது.
இதை அடுத்து இந்தியா இதுவரை 25 தங்கம், 35 வெள்ளி, 40 வெண்கலம் என மொத்தம் 100பதக்கங்களுடன் 4வது இடத்தில் உள்ளது.
பிரதமர் மோடி வாழ்த்து
இது குறித்து பிரதமர் மோடி எக்ஸ் சமூகவலைதளத்தில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது: ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியாவுக்கு மிகப்பெரிய சாதனை. 100 பதக்கங்கள் என்ற குறிப்பிடத்தக்க மைல்கல்லை எட்டியதில் இந்திய மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இந்தியாவிற்கான இந்த வரலாற்று மைல்கல்லுக்கு வழிவகுத்த நமது அற்புதமான விளையாட்டு வீரர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். பிரமிக்க வைக்கும் ஒவ்வொரு நிகழ்ச்சியும் சரித்திரம் படைத்து, நம் இதயங்களை பெருமையால் நிரப்பியது. வரும் 10ம் தேதி நமது விளையாட்டு வீரர்களுடன் உரையாடுவதற்கும் ஆவலுடன் காத்திருக்கிறேன். இவ்வாறு அந்த பதிவில் பிரதமர் மோடி கூறியுள்ளார்.
ஆசிய விளையாட்டுப் போட்டி – 13ஆம் நாள் முடிவுகள்
- ஹாக்கி: ஆடவர் ஹாக்கியில் இந்தியா 5-1 என்ற கோல் கணக்கில் ஜப்பானை வீழ்த்தி தங்கப் பதக்கம் வென்றது
- ஆடவர் ரிகர்வ் வில்வித்தை அணி இறுதிப் போட்டியில் கொரியாவிடம் இந்தியா தோல்வியடைந்து வெள்ளி வென்றது
- பிரிட்ஜ்: ஹாங்காங் அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் இந்திய ஆண்கள் அணி 12-17 என்ற கணக்கில் தோல்வியடைந்து வெள்ளி வென்றது.
- வில்வித்தை: மகளிருக்கான ரிகர்வ் டீம் பிரிவில் இந்தியா வியட்நாமை வீழ்த்தி வெண்கலம் வென்றது
- பேட்மிண்டன்: ஆண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் தோல்வியடைந்த ஹெச்எஸ் பிரணாய் வெண்கலம் வென்றார்.
- மல்யுத்தம்: பெண்களுக்கான 76 கிலோ ஃப்ரீஸ்டைல் மல்யுத்தத்தில் தாய்லாந்தின் அரிஞ்சர்கல் கன்பத்தை வீழ்த்தி கிரண் வெண்கலப் பதக்கம் வென்றார்.
- பெண்களுக்கான 62 கிலோ ஃப்ரீஸ்டைல் பிரிவில் சோனம் சீனாவின் ஜியா லாங்கை தோற்கடித்து வெண்கலப் பதக்கத்தை வென்றார்.
- ஆண்களுக்கான 57 கிலோ ஃப்ரீஸ்டைல் பிரிவில் சீனாவின் மிங்கு லியுவை 11-0 என்ற கணக்கில் வீழ்த்தி அமான் வெண்கலப் பதக்கம் வென்றார்.
- செபக்டக்ரா: பெண்கள் ரெகு அரையிறுதியில் இந்தியா, தாய்லாந்திடம் தோல்வியடைந்து வெண்கலம் வென்றது.
- கேனோ ஸ்லாலோம்: விஷால் கேவாட் 134.15 நேரத்துடன் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றார்.
- கபடி: பெண்களுக்கான அரையிறுதியில் நேபாளத்தை வீழ்த்தி இந்தியா இறுதிப் போட்டிக்கு முன்னேறியது
- ஆடவர் அரையிறுதியில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா இறுதிப் போட்டிக்கு முன்னேறியது
- ஆடவருக்கான 65 கிலோ எடைப்பிரிவு அரையிறுதியில் பஜ்ரங் புனியா 1-8 என்ற கணக்கில் ஈரானின் ரஹ்மான் அமுசாத்கலிலியிடம் தோற்றார்.
- சாப்ட் டென்னிஸ்: பெண்கள் ஒற்றையர் பிரிவு எஃப் 1 வது ஆட்டத்தில் இந்தியாவின் ராகா ஸ்ரீ குழந்தைவேலு கம்போடியாவின் கி மெங்சௌங்கை தோற்கடித்தார்.
- கிரிக்கெட்: ஆடவர் அரையிறுதியில் வங்கதேசத்தை வீழ்த்திய இந்தியா, இறுதிப் போட்டியில் ஆப்கானிஸ்தானை சந்திக்கிறது.