
— ஆர். வி. ஆர்
பாஜக-வுடன் இருந்த தோழமை உறவை முறித்துக் கொண்டு, தேசிய ஜனநாயக் கூட்டணியில் இருந்தும் விலகுவதாக, அதிமுக அறிவித்து விட்டது. “இரண்டு கோடி தொண்டர்களின் முடிவுப்படி கூட்டணியில் இருந்து விலகினோம்” என்று உலகமே நம்பாத ஒரு காரணத்தை மழுப்பலாகச் சொல்கிறார் எடப்பாடி பழனிசாமி. இதன் உண்மையான காரணம் என்ன?
திமுக-விலிருந்து வெளியேற்றப் பட்ட எம்.ஜி.ஆர், அந்தக் கட்சியை எதிர்ப்பதற்காகத் தொடங்கிய புதுக் கட்சி அதிமுக. அன்றிலிருந்து, திமுக-வை சட்டசபைத் தேர்தலில் தோற்கடித்து மாநிலத்தில் ஆட்சியைப் பிடிக்க முயற்சிப்பதுதான் அதிமுக-வின் பிரதான அரசியல். அதுபோல், அதிமுக ஆரம்பிக்கப் பட்டதிலிருந்து அந்தக் கட்சியை எதிர்த்து மாநிலத் தேர்தலில் ஜெயிக்க முனைவதுதான் திமுக-வின் தலையாய அரசியல்.
மாறி மாறி திமுக-வும் அதிமுக-வும் மாநில ஆட்சியைப் பிடித்து, தமிழகத்தின் மக்களை ஏழைகளாக, இயலாதவர்களாக வைத்திருந்து, தாங்கள் பலவிதத்தில் செழிப்பதும் அரசு கஜானாவை அம்போ என்று விடுவதும் சொல்லி மாளாது, நமக்கு முழுவதும் புலப்படாது.
திமுக-வும் அதிமுக-வும் எத்தகைய கட்சிகளைத் தோழமைக் கட்சிகளாக, கூட்டணிக் கட்சிகளாக வைத்துக் கொள்ளும்? மாநிலத்தில் ஆட்சித் தலைமை ஏற்க ஆசைப்படாமல், அந்த அளவிற்கு அவற்றுக்கென்று மக்கள் சக்தி இல்லாமல் செயல்படும் சிறிய கட்சிகள்தான் அத்தகைய உறவுக்கு லாயக்கு. அந்த மாதிரி சிறிய கட்சிகளைச் சேர்த்துக் கொண்டால், பெரிய கட்சியான திமுக-வுக்கோ அதிமுக-வுக்கோ மாநிலத்தில் நிறைய எம்.எல்.ஏ மற்றும் எம்.பி தொகுதிகளில் வெற்றி வாய்ப்பு அதிகரிக்கும், அந்தச் சிறிய கட்சிகளும் கூட்டணி பலத்தில் சில தொகுதிகளில் ஜெயித்து எம்.எல்.ஏ அல்லது எம்.பி ஆகலாம் என்ற பரஸ்பர நன்மைகள் உண்டு.
பாஜக-வோடு என்.டி.ஏ கூட்டணியில் அதிமுக இருந்தால், பாஜக-வின் ஓட்டுக்களும் சேர்ந்து அதிமுக அதிக எம்.எல்.ஏ மற்றும் எம்.பி. தொகுதிகளில் வெல்லலாம். குறிப்பாக, சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியை ஜெயித்து மாநிலத்தில் ஆட்சி அமைக்க அதிமுக-வுக்கு வாய்ப்பு அதிகரிக்கும். இதுதான் நிலவரம் என்றிருந்தால், பாஜக-வுடனான தோழமை உறவை அதிமுக முறித்துக் கொள்ளாது. ஆனால் இப்போதய நிலவரம் வேறு. அதுதான் அதிமுக-வுக்கு வெளியில் சொல்ல முடியாத பிரச்சனை.
இப்போதைய நிலவரம் என்ன, முன்பிலிருந்து அது எப்படி வேறானது?
அண்ணாமலை தலைமைப் பொறுப்பில் இருக்கும் தமிழக பாஜக, மாநிலத்தில் வெறும் சிறிய கட்சியாக இருக்க விரும்பவில்லை. ஒரு பெரிய கட்சியை அண்டி நின்று அந்தப் பெரிய கட்சியின் தயவில் சில எம்.எல்.ஏ மற்றும் எம்.பி தொகுதிகளில் ஜெயிக்கும் வாய்ப்பையும் தாண்டி அரசியல் செய்ய விரும்புகிறது, மக்கள் பணி ஆற்ற நினைக்கிறது தமிழக பாஜக. அந்த எண்ணத்தை நிறைவேற்றுவதற்கான துடிப்பும் உத்வேகமும் அசாதாரண தலைமைப் பண்பும் அண்ணாமலையிடம் பளிச் என்று தென்படுகின்றன.
அண்ணாமலை தற்போது மாநிலத்தில் நடத்தும் “என் மண், என் மக்கள்” நடைப் பயணத்தில் தாமாகக் கூடும் மக்கள் கூட்டத்தையும் அவருக்காக மக்கள் ஆர்ப்பரிப்பதையும் பாருங்கள். பாஜக-வைத் தமிழகத்தில் பெரிதாக்க நினைக்கும் அண்ணாமலையின் முனைப்பையும் அதன் ஆரம்ப வெற்றியையும் அவரது நடைப் பயணக் காட்சிகள் பறை சாற்றும். இதனால் அதிமுக-விற்கு நேர்வது ஒன்றுதான். கிலி.
பாஜக வட இந்தியக் கட்சி, அது தமிழ் நாட்டில் பெரிதாக வளர முடியாது, நம் நிழலில் பணிவான ஒரு சிறிய கட்சியாக மட்டும் பாஜக இருக்கும் என்று நினைத்த அதிமுக-விற்கு, பாஜக-வின் புதிய மாநிலத் தலைமையும் அதன் வீரியமும் அது ஈர்க்கும் மக்கள் சக்தியும் பேரிடி. காலப் போக்கில் திமுக-விற்கு மாற்றாக மக்கள் பாஜக-வைத் தான் முதலில் நினைக்கலாம், அப்போது என்ன ஆகும்? அதிமுக தமிழக பாஜக-வைப் பெரிய கட்சியாகப் பார்க்க வேண்டிவரும். அது நடந்தால், அதிமுக தலைவர் எடப்பாடி பழனிசாமியின் முதல்வர் கனவும் நாற்காலிப் பயன்களும் கலையும், அவரைச் சுற்றி இருக்கும் அடுத்த கட்டத் தலைவர்களும் பெரு நஷ்டத்தை ஏற்க வேண்டும். இதற்கெல்லாமா அதிமுக கட்சியை நடத்துகிறார்கள் எடப்பாடியும் அவரது சகாக்களும்?
வரும் லோக்சபா தேர்தலில் அதிமுக பாஜக-வோடு கூட்டணி வைத்தால், பாஜக-விற்கு சில தொகுதிகள் அதிகம் கொடுத்து அவற்றில் அநேக தொகுதிகளில் பாஜக-வும் ஜெயித்துவிட்டால், என்ன ஆகும் என்று அதிமுக இப்படி நினைக்கும். அந்த வெற்றியே பாஜக-வை அரசியல் களத்தில் இன்னும் பெரிதாக அடையாளம் காட்டும், தமிழகத்தில் பாஜக-வின் மக்கள் செல்வாக்கு இன்னும் சில படிகள் உயரும், பிறகு இன்னும் எளிதாக அது பெரிய கட்சியாக வளர முற்படும், பிறகு 2026-ல் வரப் போகும் தமிழக சட்டசபைத் தேர்தலின் போது வளர்ச்சி பெற்ற பாஜக, அதிமுக-விடம் சீட் கேட்குமா, அல்லது அதிமுக பாஜக-விடம் சீட் கேட்க வேண்டி இருக்குமா?
இதெல்லாம் நடக்காமல் தடுக்க, அதிமுக தலைமையால் இப்போது சிந்திக்க முடிவது இதுதான்: பாஜக-வுடனான கூட்டணி உறவை உதறி விட்டால், தனித்து விடப்பட்ட பாஜக-வால் தமிழகத்தின் லோக் சபா சீட்டுக்களை அதிக அளவில் ஜெயிக்க முடியாது. அந்த மட்டுமாவது பாஜக-வின் வளர்ச்சி தமிழகத்தில் தடைப் படட்டும்.
சரி, பாஜக-வுடன் கூட்டணி வைக்கா விட்டால், தமிழகத்தில் திமுக-வை எதிர்த்து அதிக லோக் சபா மற்றும் சட்டசபைத் தொகுதிகளில் அதிமுக ஜெயிக்க முடியுமா, மாநிலத்தில் ஒரு கூட்டணி ஆட்சியாவது அமைக்க முடியுமா? அது மிகக் கடினம் என்று எடப்பாடியே உணர்ந்திருக்கிறார். “இந்தக் கூட்டணி முறிந்ததால் திமுக-வுக்கு எதிரான ஓட்டுக்கள் சிதறுமா என்றால், அது வாக்காளர்களின் கையில்தான் உள்ளது” என்று அவரே சொல்லிவிட்டார். பாஜக-வின் அருகே இருந்து தங்கள் கட்சி தேய்வதை விட, நேராகத் திமுக-விடம் தோற்பதை அதிமுக ஏற்றுக் கொள்ளுமோ என்னவோ!
தமிழகத்தில் பாஜக வளர வளர, அதிமுக, பாஜக ஆகிய இரு கட்சிகளில் யார் மற்றவரிடம் இருந்து விலகுவதாக முதலில் அறிவிப்பது என்பது இரு கட்சிகளுக்கும் ஒரு பிரச்சனையாக இருந்தது. அதிமுக-வுடன் கூட்டணியில் தொடர்ந்தால் பாஜக-வின் வளர்ச்சி தடைப்படும். மக்கள் சக்தியைப் பெரிதாக ஈர்க்கும் அண்ணாமலை தலைவராக இருக்கும்போது, மத்தியில் மோடி ஆட்சி செய்யும் போது, பாஜக அதிமுக-வுடனான உறவை முறித்துக் கொள்வதாக இப்போது அறிவிக்காவிட்டால் பின்னர் இதற்கு ஒரு தோதான தருணம் வருமா என்பது சந்தேகம். பாஜக-வே இப்படி யோசிக்கையில், அதிமுக முந்திக் கொண்டு கூட்டணி உறவைத் தூண்டித்து விட்டது. பாஜக-விற்கு இதில் பெரிய நஷ்டம் வராது, தமிழக மக்களைத் தைரியமாக எதிர்கொள்ளலாம் என்பதுதான் அந்தக் கட்சியின் எண்ணமாகவும் இருக்கும்.
திமுக-வும் காங்கிரஸும் இப்போது ஒரே கூட்டணியில் இருக்கின்றன. ஏதோ ஒன்றிரண்டு தொகுதிகளைக் கூடுதலாக அழுது அடம் பிடித்து திமுக-விடமிருந்து வாங்கிவிடலாம் என்று காங்கிரஸ் நினைக்கிறது. “சரி, இந்தா. சாமர்த்தாக இரு” என்று திமுக-வும் ஒன்றிரண்டு தொகுதிகளை அதிகமாகக் காங்கிரஸுக்கு கிள்ளிக் கொடுக்கலாம். ஆனால், “ஒரு காலத்தில் தமிழ்நாட்டில் ஆட்சி செய்த நாங்கள் காங்கிரஸ் கட்சியை மீண்டும் பெரிதாக வளர்ப்போம். ஆட்சியையும் பிடிப்போம்” என்று மக்களிடம் பேசும் தெம்பான, திராணியான தலைவர் காங்கிரஸ் கட்சிக்கும் கிடைத்தால், அப்போது காங்கிரஸும் திமுக கூட்டணியில் இருந்து வெளியேற்றப் படும்.
சரி, பாஜக-விடம் உறவைத் தூண்டித்த அதிமுக, ஏதோ ஒரு கட்டத்தில் திமுக-விடமிருந்து சற்று கவுரமான எம். எல். ஏ, எம்.பி தொகுதிகளை வாங்கிக் கொண்டு திமுக கூட்டணியில் சேராதா? திமுக அதை நிச்சயம் வரவேற்காதா? இப்போதுதான் கருணாநிதி, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகிய மூவரும் இல்லையே?
வளர்ந்து வரும் பாஜக-வை எதிர்த்துத் தமிழகத்தில் ஆட்சியைக் கூட்டாகத் தக்கவைக்க, தங்களுக்குள்ளான புதிய கூட்டணியை ஒரு யுக்தியாக திமுக-வும் அதிமுக-வும் பார்க்கலாம் – அது நடப்பது, தமிழகத்தில் பாஜக அடையும் வளர்ச்சியின் அளவைப் பொறுத்தது.
திமுக-வும் அதிமுக-வும் போற்றும் பெரியாரும் அண்ணாவும், அந்தக் கட்சிகள் அவர்களுக்கு இடையே கூட்டணி அமைக்கும் யுக்திக்குக் கை கொடுப்பார்கள். “வாஜ்பாயி காலத்தை விட இந்தியாவில் இப்போது சிறுபான்மை மக்களுக்கு அச்சுறுத்தல் அதிகமாக இருக்கிறது. மதத்தால் நாட்டைப் பிளவு செய்கிறது பாஜக. இதை எதிர்ப்பதற்காகத் திமுக-வும் அதிமுக-வும் ஒரே அணியில் சேர்க்கிறோம்” என்று ஒரே போடாக இரண்டு கட்சிகளும் ஒரு கூட்டறிக்கை கொடுத்தால் போயிற்று. ஆட்சிக்காக, அதன் பலன்களுக்காக, திராவிடம் எதையும் பேசும், என்னவும் செய்யும்.
Author: R. Veera Raghavan, Advocate, Chennai