
அபுதாபியில் அண்மையில் பிரதமர் மோடியால் திறக்கப்பட்ட ஹிந்து கோயிலில், முதல் ஞாயிற்றுக் கிழமையான நேற்று ஒரே நாளில் 65 ஆயிரம் பக்தர்கள் மற்றும் பார்வையாளர்கள் தரிசனம் செய்தனர்.
அபுதாபியில் 27 ஏக்கரில் ரூ.888 கோடி செலவில் பிரமாண்ட முதல் ஹிந்து கோயிலை அண்மையில் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். அதன்பிறகு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வழிபாடு நடைபெற்று வருகிறது.
1,200க்கும் மேற்பட்ட ஹிந்து கோயில்களை நிறுவி வரும் பாப்ஸ் (BAPS ) அமைப்பு அபுதாபி கோயிலை கட்டி உள்ளது. ஏராளமான பக்தர்கள் தினமும் இக்கோயிலுக்கு வருகை தந்து, தரிசனம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் மார்ச் 3 நேற்று ஞாயிற்றுக்கிழமை ஒரே நாளில் 65,000 பக்தர்கள் மற்றும் பார்வையாளர்கள் கோயிலுக்கு வந்து தரிசனம் செய்துள்ளனர். இதில் காலை நேரத்தில் 40,000க்கும் மேற்பட்ட பக்தர்களும் மாலையில் மேலும் 25,000 பக்தர்களும் தரிசித்துள்ளனர்.
பலரும் ஹரே ராம ஹரே ராம என்றும் ஜய்ஸ்ரீராம் என்ற கோஷத்தை முழங்கியும் வளாகத்தில் பஜனைகளைப் பாடி வந்து தரிசித்தனர்.
கூட்டம் அதிகமாக இருந்த போதும், பொறுமையாக வரிசையில் காத்திருந்து, அமைதியாக பக்தர்கள் தரிசனம் செய்தனர். இதில் இந்தியா மற்றும் மெக்சிகோ, லண்டன் என பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பக்தர்களும் தரிசித்தனர்.
இந்தக் கோயிலின் மூலம் நாட்டுக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கை அதிகரிக்கும் என்றும், அதன் மூலம் சுற்றுலா வருமானம் அதிகரிக்கும் என்றும் கூறப்படுகிறது.