அவசர நிலைப் பிரகடனம் விலக்கிக் கொள்ளப் படுவதாக அதிபர் சிறீசேன அறிவிப்பு

உலகம் சற்றுமுன்

sirisena - 2026

கொழும்பு: இலங்கையில் நடைமுறைப் படுத்தப் பட்டிருந்த அவசரநிலைப் பிரகடனம் விலக்கிக் கொள்ளப் படுவதாக இலங்கை அதிபர் மைத்ரீபால சிறீசேன அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

இலங்கையில் கடந்த ஓர் ஆண்டாக பெரும்பான்மையினரான புத்த மதத்தினருக்கும், சிறுபான்மையினரான இஸ்லாமியருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இஸ்லாமியர்கள் மதமாற்ற நடவடிக்கையில் ஈடுபட்டு வருவது அங்கே பெரும் கலவரத்தை ஏற்படுத்தியது. மேலும், புத்த மதம் தொடர்பான பழங்கால அடையாளங்கள், தொல்பொருள் இடங்களை இஸ்லாமியர்கள் சேதப்படுத்தி வருவதாக புத்த மதத்தினர் குற்றம் சாட்டி வருகின்றனர்.

அண்மையில் மியான்மரில் புத்த மதத்தினருக்கும் ரோஹிங்யா முஸ்லிம்களுக்கும் பிரச்னை ஏற்பட்டது. அப்போது மியான்மரில் இருந்து வெளியேறிய ரோஹிங்யா முஸ்லிம்கள் இலங்கையில் தஞ்சம் அடைய புத்த மதத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில், இலங்கையின் கண்டி மாவட்டத்தில் திடீரெனப் பரவிய ஒரு தகவல் அங்கே பெரும் பிரச்னையை ஏற்படுத்தியது. பௌத்த மதத்தினருக்கு ஆண்மைக் குறைவை ஏற்படுத்தும் உணவுப் பொருளை வழங்குவதாக இஸ்லாமிய வர்த்தகர் ஒருவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இதை அடுத்து இரு மதத்தினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் இருவர் உயிரிழந்தனர். கண்டியில் இஸ்லாமிய மதத்தை சேர்ந்த ஒருவரின் கடை தீ வைத்து எரிக்கப்பட்டது. இந்தச் சம்பவங்களை தொடர்ந்து அங்கே கலவரம் மூண்டது.

கலவர நெருக்கடி காரணமாக, தெல்தெனியா பகுதியில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப் பட்டது. மேலும் பல இடங்களிலும் இரு தரப்பினருக்கும் இடையே மோதல்கள் நடந்து வந்தது, அதிபர் சிறீசேனா அரசுக்கு தலைவலியாக அமைந்தது. இதை அடுத்து, நாடு முழுவதும் நெருக்கடி நிலையை அமல்படுத்துவது என அதிபர் சிறீசேனா தலைமையில் நடைபெற்ற உயர்மட்டக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு, அவ்வாறே அறிவிக்கப்பட்டது. இதனால் குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு 20 வருடம் முதல் ஆயுள் தண்டனை வரை விதிக்கப்படும் என்ற சூழ்நிலை உருவானது.

இந்நிலையில் இலங்கையில் நிலைமை கட்டுக்குள் வந்துள்ளதாகவும், இதை அடுத்து அவசர நிலைப் பிரகடனத்தை ரத்து செய்வதாகவும், அதிபர் மைத்ரிபால சிறீசேன அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.