லக்வி விடுதலை உலகத்துக்கு நல்லதல்ல: பிரான்ஸ் கருத்து

laqvi பாரீஸ்: மும்பை தாக்குதல் குற்றவாளி லக்வியை லாகூர் நீதிமன்றம் விடுதலை செய்து உத்தரவிட்டதைத் தொடர்ந்து, அவர் பாகிஸ்தான் சிறையில் இருந்து வெளியே வந்தார். இது, உலகமெங்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது . பிரதமர் நரேந்திர மோடி, பிரான்ஸ் சென்றுள்ள நிலையில், அங்கும் லக்வி விடுதலைக்கு அதிருப்தி கிளம்பியுள்ளது. இது தொடர்பாக பாரீஸ் நகரில் மத்திய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் சையத் அக்பருதீன் செய்தியாளர்களிடம் பேசுகையில், பிரதமர் நரேந்திர மோடியை பிரான்ஸ் எம்.பி.க்கள் குழு சந்தித்தது. அந்தக் குழுவில் இடம் பெற்றிருந்த ஒரு எம்.பி., லக்வியின் விடுதலை துரதிர்ஷ்டவசமானது; இது இந்தியாவுக்கும் சரி, உலகத்துக்கும் சரி நல்லதல்ல என கருத்து கூறினார் என்று தெரிவித்தார். மேலும், இந்தப் பிரச்னையில் இந்தியாவுடன் பிரான்ஸும் இணைந்து நிற்பதாக தெரிவித்துள்ளது.