லக்வி விடுதலையாக இந்தியா காரணமாம்: சொல்வது பாகிஸ்தான்

laqvi இஸ்லாமாபாத்: மும்பை தாக்குதல் வழக்கு முக்கியக் குற்றவாளி லக்வி, பாகிஸ்தானில் ராவல்பிண்டி அடியாலா சிறையில் இருந்து விடுவிக்கப் பட்டதற்கு இந்தியாவே காரணம் என்று குற்றம் சாட்டியுள்ளது பாகிஸ்தான். மும்பை தாக்குதல் வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்ட லக்வி, பொது ஒழுங்கு பராமரிப்புச் சட்டப்பிரிவு 16-ன் கீழ் சிறையில் அடைக்கப் பட்டார். தம்மை சிறையில் அடைத்ததை ரத்து செய்ய அவர் கோரிய மனுவின் படி, அவரை லாகூர் நீதிமன்றம் 9-ந் தேதி விடுவித்து உத்தரவிட்டது. இதையடுத்து மறுநாளில், அவர் சிறையில் இருந்து வெளியே வந்தார். பாகிஸ்தான் அரசு, லக்விக்கு எதிரான ஆவணங்களை சரிவர தாக்கல் செய்யாததே அவரது விடுதலைக்குக் காரணம் என இந்தியா குற்றம் சாட்டியது. இது தொடர்பாக இஸ்லாமாபாத்தில் பாகிஸ்தான் வெளியுறவுத்துறை செயலாளர் அய்ஜாஸ் சௌத்ரியை இந்திய தூதர் டி.சி.ஏ. ராகவன் சந்தித்து, இந்தியாவின் எதிர்ப்பை பதிவு செய்தார். இதனிடையே லக்வி விடுதலைக்கு இந்தியாவின் மெத்தனம்தான் காரணம் என்று இந்தியா மீது பாகிஸ்தான் பழி சுமத்தியுள்ளது. இதுகுறித்து பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், மிகவும் சிக்கலான இந்த வழக்கில் ஒத்துழைப்பு வழங்குவதில் புது தில்லி காட்டி வந்த மிதமிஞ்சிய காலதாமதம்தான் லக்வி மீதான வழக்கை பலவீனப்படுத்தி விட்டது என்று கூறப்பட்டுள்ளது.