எரிகல்லுக்கு மலாலா பெயர்

malala-pakistanபாகிஸ்தானில் தலீபான்களுக்கு எதிராகவும், பெண் கல்விக்கு ஆதரவாகவும் செயல்பட்ட மலாலா. அதற்காக 2012, அக்டோபர் 9-ஆம் தேதி, பள்ளி சென்று வரும்போது தலீபான் பயங்கரவாதிகளால் சுடப்பட்டார். பின்னர் அவர் லண்டன் நகரில் சிகிச்சை பெற்று குணமடைந்தார். தற்போது இங்கிலாந்தில் வசித்து வரும் அவருக்கு கடந்த ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு, இந்தியரான கைலாஷ் சத்யார்த்தியுடன் இணைந்து வழங்கப்பட்டது. இப்போது விண்ணில் கண்டுபிடிக்கப்பட்ட ‘316201’ என்ற எரிகல்லுக்கு மலாலாவின் பெயரை அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி அமைப்பான நாசாவின் ஜெட் உந்துவிசை ஆய்வுக்கூட வானியல் ஆராய்ச்சி விஞ்ஞானி ஆமி மைன்ஸர் சூட்டியுள்ளார். இந்தப் பெயர்க்காரணம் குறித்து அவர் கூறுகையில், “எரிகல்லுக்கு மலாலாவின் பெயரைச்சூட்டியது மரியாதைக்குரியது. ஏற்கெனவே எத்தனையோ எரிகற்களுக்கு பெயர் சூட்டி இருந்தாலும், பெண்களின் பெயர் சூட்டியதில்லை என்பதை என் சக விஞ்ஞானி டாக்டர் கேரி நியூஜென்ட் நினைவு படுத்தினார். அதைத் தொடர்ந்தே செவ்வாய், வியாழன் கிரகங்களுக்கு இடையே நான் கண்டுபிடித்துள்ள எரிகல்லுக்கு மலாலாவின் பெயரைச் சூட்டினேன்” என்றார்.