பாகிஸ்தானில் நடந்து முடிந்த பொதுத் தேர்தலில் இம்ரான் கானின் கட்சி வெற்றி பெற்றதில் முறைகேடுகள் அதிகம் நடைபெற்றுள்ளது, எனவே மீண்டும் தேர்தல் நடத்த வேண்டும் என பாகிஸ்தானைச் சேர்ந்த அரசியல் கட்சிகள் பலவும் போர்க்கொடி தூக்கியுள்ளன.
பாகிஸ்தானில் மீண்டும் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தி நாடு தழுவிய போராட்டத்தை நடத்த உள்ளதாக அரசியல் கட்சிகள் பலவும் தெரிவித்துள்ளன. பாகிஸ்தானின் அனைத்து கட்சிகளும் இணைந்து கூட்டாக நடத்தும் இந்தப் போராட்டத்திற்கு ஆதரவு அளிப்பதாக முந்தைய ஆளும் கட்சியான நவாஸ் ஷெரீப்பின் பாகிஸ்தான் முஸ்லீம் லீக் (நவாஸ்) கட்சியும் தெரிவித்துள்ளது. இந்த விவகாரத்தில் தனது கட்சி நிர்வாகிகளுடன் கலந்து பேசவுள்ளதாக அக்கட்சித் தலைவர் ஷாபாஸ் ஷெரீப் கூறியுள்ளார்.

ராணுவத்தின் உதவியுடன் இம்ரான் கான் வெற்றி பெற்றுள்ளதாக பாகிஸ்தானில் பரவலாக குற்றச்சாட்டு முன் வைக்கப் பட்டுள்ளது. பாகிஸ்தான் பொதுத் தேர்தலில் அதிக இடங்களில் இம்ரான் கானின் டெஹ்ரீக் இ இன்ஷாப் கட்சி வெற்றி பெற்றுள்ளது. இருந்தபோதும், அந்தக் கட்சிக்கு தனிப் பெரும்பான்மை கிடைக்கவில்லை. தேர்தல் பிரசாரத்தின் போது, தாம் ஹிந்துஸ்தானின் நரேந்திர மோடி ஆட்சியை, பாகிஸ்தானில் கொடுப்பதாக வாக்குறுதி அளித்தார் இம்ரான் கான். இருந்த போதும் தனிப் பெரும்பான்மை கிடைக்காமல், அதிக இடங்களைப் பெற்ற தனிப் பெரும் கட்சியாக டெஹ்ரீக் இ இன்ஸாப் இருப்பதால், மற்ற சிறிய கட்சிகளுடன் இணைந்து கூட்டணி ஆட்சி அமைக்க இம்ரான் கான் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். மேலும், தனிப் பெரும் கட்சியாகத் திகழ்வதால், தேர்தலில் தனது கட்சி வெற்றி பெற்றதாக அறிவிக்கும்படி அவர் வலியுறுத்தி வருகிறார்.




