இலங்கை தமிழ்ப் பெண்கள் மீதான பாலியல் வன்முறை: விசாரணை நடத்த ஐ.நா. வலியுறுத்தல்

Ban Ki-moonகொழும்பு: இலங்கையில் தமிழ்ப் பெண்கள் மீதான பாலியல் வன்முறை தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என்று ஐ.நா. சபை வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக ஐ.நா. செயலர் பான் கீ மூன் ஐ.நா. பாதுகாப்பு சபைக்கு அளித்துள்ள அறிக்கையில்… இலங்கை அரசைப் பொறுத்தவரை கடந்த 5 ஆண்டுகளில் மறு குடியேற்றம் உள்பட முன்னேற்ற நடவடிக்கைகள் சிலவற்றை மேற்கொண்டுள்ளது. இலங்கை ராணுவத்தால் மேற்கொள்ளப்பட்ட பாலியல் வன்முறைக் குற்றங்கள் தொடர்பாக இலங்கை அரசு உரிய விசாரணைகளை முன்னெடுத்து நடத்தத் தவறிவிட்டது. இலங்கைத் தமிழ்ப் பெண்கள் மீது, போருக்கு பிறகான 5 ஆண்டு காலப் பகுதியில் கடத்தல்கள், தடுத்து வைத்தல், பாலியல் அத்துமீறல்கள், பாலியல் வன்முறைகள் ஆகியன அதிகரித்துள்ளன. ராணுவ மயமாக்கும் திட்டத்தின்கீழ் பெண்கள் மற்றும் சிறுமிகள் மீது பாலியல் வன்முறைகள் அத்துமீறி நிகழ்த்தப் பட்டன. இறுதிப் போர் காலப் பகுதியில் தமிழ்ச் சமூகப் பெண்கள் மீது இலங்கை ராணுவத்தினர் பாலியல் வன்முறைகளை மேற்கொண்டனர். ராணுவத்தால் தடுத்து வைக்கப்பட்டு, 2014ஆம் ஆண்டு விடுவிக்கப்பட்ட பெண்களின் சாட்சியங்கள் இவற்றை நிரூபிக்கின்றன. இனவாத அடிப்படையில் இடம்பெற்ற இந்த வன்முறைகள், விடுதலைப் புலிகளுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் தமிழ்ப் பெண்கள் மீது நிகழ்த்தப்பட்டன. இந்நிலையில் இலங்கையில் புதிதாகப் பதவியேற்றுள்ள அரசு, அப்போதைய ராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட பாலியல் வன்முறைகள் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும். மேலும் போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய மாற்று நடவடிக்கைகளையும் பொருளாதார உதவிகளையும், குறிப்பாக போரின் போது கணவரை இழந்த பெண்ணை ஆதாரமாகக் கொண்ட குடும்பங்களுக்கு உரிய உதவிகளைச் செய்ய வேண்டும். -என்று கூறியுள்ளார்.