spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஉரத்த சிந்தனைதமிழை உயர்த்துகிறேன் என்று சறுக்கி விழுந்த வைரமுத்து

தமிழை உயர்த்துகிறேன் என்று சறுக்கி விழுந்த வைரமுத்து

- Advertisement -

தமிழை உயர்த்துகிறேன் என்று சறுக்கி விழுந்த வைரமுத்து

  • எஸ்.கோகுலாச்சாரி ஆலய தரிசனம்

தின மணியில் வைர முத்து எழுதிய கட்டுரை குறித்து பல விமர்சனங்கள் இரண்டு மூன்று நாட்களாக வருவதைப்பார்க்கிறோம்.
இதில் கருத்து தெரிவிப்பவர்கள் பலர் மேலோட்டமாகவே கருத்து தெரிவித்து வருகின்றனர்.
அரசியல் வாதிகளில் சிலருக்கு வைரமுத்து ஆண்டாளைப்பற்றிக் கூறிய ஒரு மேற்கோளைத் தவிர மீதிக் கட்டுரை முழுக்க ஆண்டாளை போற்றுவதாகவே கொள்கின்றனர்.
தமிழறிஞர்கள் பெரிய அளவில் கண்டு கொள்ளவில்லை.
சிறு பான்மையான வைணவர்கள் வயிறு பிடித்துத் துடிப்பதைத் தவிர வேறு வழியில்லை.
வைரமுத்து ஆண்டாளை ஆண்டாளின் தமிழை தமிழ் பாடிய நோக்கத்தை வரிக்கு வரி தாக்கியிருக்கிறார் என்பது தான் அடியேன் கருத்து.
அதனைத் தான் இக்கட்டுரையில் விளக்கியிருக்கிறேன்.இதில் மாற்றுக் கருத்து இருந்தால் நிதானமாக நாம் விவாதிக்கலாம்.வைரமுத்து ஆண்டாளை மட்டுமல்ல இதற்கு முன் எழுதிய கட்டுரையில் கூட இதே போள்ற தவறுகளைச் செய்திருக்கிறார்.
இதற்கு முன் திருமூலர் பற்றிய கட்டுரையில் கூட தன் விருப்பத்திற்கு பேசியிருக்கிறார்.இது குறித்து மறுப்பு எழுதினேன். மலையோடு ஏன் மோதுகிறீர்கள்.விட்டுப் போங்கள் என்று சொன்னார்கள்.
வைரமுத்து பாரதியைத் தொட்டு, உ.வே.சாவைத் தொட்டு, திருமூலரைத் தொட்டு, கம்பரைத் தொட்டு, கடைசியில் ஆண்டாளிடம் வந்து மிகப் பெரிய கேட்டினைச் செய்திருக்கிறார்.
ஆண்டாளைப் பற்றி அவதூறு பேச ராஜபாளையத்தில் ராஜாக்கள் கட்டி அளித்த திருமலை திருப்பதி தேவஸ்தான மண்டபம்தானா கிடைத்தது?
இதற்கு தினமணி ஆசிரியர் கி. வைத்தியநாதன், இதைக் கேட்க முன் வரிசையில் ராஜா இல்லையே என்று வேறு ஒப்பாரி வைக்கிறார். நல்லவேளை ராஜா இல்லை என்று அவர் நிம்மதி அடைய வேண்டும்.
அடியேனுக்கு ஆண்டாள் என்று சொல்லியவுடன் அடிவயிறு கலங்கியது. அந்தத் தெய்வத்தாயை ிதமிழைப் போற்றுகிறேன் பேர்வழிீ என்று இந்தத் திரைப்படக் கவிஞர் தாறுமாறாய் எழுதப் போகிறாரே என்று மனம் தடக் தடக் என்று அடித்துக் கொண்டது.
நினைத்தது நினைத்தபடியே நடந்து விட்டது.
ஆண்டாளின் தெய்வத்தமிழை கூறுகூறாக்கி தன் அறியாமைச் சட்டியில் வாட்டியெடுத்து வறுவலாக்கி தந்த அவலம் நிகழ்ந்தே விட்டது.
எழுதினவர் ஏட்டைக் கெடுத்தார்; பிரசுரித்தவர் பத்திரிகையைக் கெடுத்தார் என்று, பாரம்பரியமிக்க தினமணி, வைரமுத்துவின் வார்த்தைகளை வரிவிடாமல் அச்சடித்து – ஆண்டாளை அன்றாடம் வணங்கும் அத்தனை பக்தர்களின் உள்ளத்திலும் – திராவகத்தை வீசி தன் பெருமையைக் குலைத்துக் கொண்டது.
எந்த ஒரு நூலைப் பற்றியும் ஆராய மூன்று செய்திகள் முக்கியமாகக் கருதப்படும்.
1) நூல் பெருமை
2) நூல் பொருள் பெருமை
3) நூலாசிரியர் பெருமை
நூலை ஆராய முற்படுபவர்க்கும் இது பொருந்தும்.
ஆண்டாளின் தமிழை ஆராயும் தகுதி தனக்கு இருக்கிறதா என்பதைப் பற்றி சற்றும் கவலைப்படவில்லை வைரமுத்து.
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கருத்து இவ்வுலகத்தில் உண்டு. அவரவர் கருத்தை அவரவர் ஏற்பர். பின்பற்றுவர்.
ஆனால்,
தன் உள்ளத்துக்கு ஏற்காத கருத்தை தான் தோன்றித்தனமாக ஆராய வேண்டிய அவசியம் என்ன? இது தமிழை எவ்வாறு உயர்த்தும்?
1) ஆண்டாள் பெரியாழ்வார் பெண் என்பதை நம்பவில்லை.
2) ஆண்டாள் துளசி வனத்தில் கிடைத்த பூமாதேவியின் அம்சம் என்பதை நம்பவில்லை.
3) ஆண்டாள் எங்ஙனம் 8-ம் நூற்றாண்டில் இத்தகைய புரட்சிக்கருத்தைப் பாட முடிந்தது என்கிற ஐயப்பாடு இவருக்கு வருகிறது.
4) கல்லான கடவுள் பிம்பத்துடன், இரத்தமும் சதையும் கொண்ட பெண் கலக்கமுடியுமா என்கிற சந்தேகம் வருகிறது.
இப்படி ஆயிரம் ஐயங்களோடு ஆண்டாளை அணுகும் வைரமுத்து
எவனோ ஒருவன் ஆங்கிலத்தில் எப்போதோ எழுதிய கட்டுரையின் வரியை மட்டும் வைத்து ஸ்ரீரங்கத்து தாசி என்று கொஞ்சமும் நடுக்கமின்றி எழுதவும், உரத்தகுரலில் பேசவும் துணிகின்றார் என்றால், வைரமுத்துவின் உள்நோக்கம் ஆண்டாளை உயர்த்துவதா? தமிழை உயர்த்துவதா?
(இந்த விவாதத்தில் இன்னொரு ஆபத்தான கோணம் தாசி என்ற சொல் உயர்வா உயர்வில்லையா என்று மாறியிருக்கிறது.தாசி என்ற சொல் உயர்வுதான் என்று வாதிடும் வைரமுத்து இப்படி நான் சொல்வதை பக்தர்கள் ஏற்க மாட்டார்கள் என்றும் எழுதுவது முரண்.மற்றும் குழப்ப வாதமல்லவா.இந்த வாதத்தில் வைரமுத்துவின் உள் நோக்கம் நன்றாகவே வெளிப்படும்.)
பெரியாழ்வார் பெற்ற பெண் அல்ல ஆண்டாள்; எல்லோருக்கும் தெரியும். கண்டெடுத்த பெண். இதுவும் எல்லோருக்கும் தெரியும்.
அப்புறம் என்ன கேள்வி வைரமுத்துவுக்கு? ஆண்டாள் யார் பெற்ற பெண் என்று?
பூமாதேவியின் அம்சம் என்று வைணவர்கள் நம்புகிறார்கள். இதில் வைரமுத்துவுக்கு எங்கே குறை வந்தது? வைணவர்களின் நம்பிக்கையை கேள்வி கேட்கிறாரா?
இலக்கிய நூலில் ஆசிரியர் பற்றிய செய்திகளுக்கு அகச்சான்றுகள்தான் முதல் நிலை ஆவணங்கள்.
பெற்ற தந்தை ஒருமகள் தன்னை உடையேன் என்றும் திருமகள் போல் வளர்த்தேன் செங்கண்மால் தான் கொண்டு போனான் என்று பாடுவதால் ஆண்டாள் அவர் பெண் என்பதும் திருமாலுக்கு கட்டிக்கொடுத்ததும் தெரிகிறது.
வில்லிபுத்தூர் பட்டர் பிரான் கோதை என்று பாட்டுக்கு பாட்டு தன் தந்தையைப் பற்றி எழுதியதை அடுத்து வந்தவர்கள் பெரியாழ்வார் பெற்றெடுத்த பெண் பிள்ளை வாழியே என்று ஏற்றுக் கொள்கிறார்கள்.
(நம்பிக்கை இல்லாதவர்கள் இதிலும் துருவித்துருவிக் கேள்வி கேட்கலாம்..அவர்கள் ஆண்டாள் தமிழை ஆராய்ந்து நம்புபவர்களுக்கு சொல்வது வேண்டாத வேலை.)
பெண் தன் தந்தை யார் என்று சொன்ன அகச்சான்று இருக்கிறது.தந்தை தன் பெண் யார் எனச் சொன்ன அகச்சான்று இருக்கிறது.ஊரார் அந்த காலத்தில் ஏற்றுக் கொண்ட அகச்சான்று இருக்கிறது.ஆனால் வைரமுத்து ஒரு போலி ஆராய்ச்சியை-அதுவும் உள்ளூர் காரன் சொன்னால் தெரிந்து விடும் என்று ஆங்கிலக்கட்டுரையை மேற் கோள் காட்ட வேண்டிய அவசியம் என்ன?
அந்த மேற்கோளைத் திணிப்பது தவிர வைரமுத்துவுக்கு என்ன நோக்கம்?
அரிதாரத்தைக் கழற்றிவிட்டால் திரைப்பட நடிகையின் அசல் அழகு தெரிந்து விடும் என்பார்கள். ஆர்ப்பாட்டமான – வலிந்து அலங்கரிக்கப்பட்ட – பாசாங்கான – தமிழ்நடையைக் கழற்றி விட்டு வைரமுத்துவின் உள்ளீடான செய்தியை உற்றுப் பார்த்தால் (இதற்குமுன் எழுதிய கட்டுரைகளில் கூட) மேலோட்டமான அணுகுமுறையும், முரண்பாடான கருத்துக்களும் பளிச்செனத் தெரியும்.
எனக்கு உள்ள வருத்தமெல்லாம் வைரமுத்துவின் மீது மட்டுமல்ல. அவரை – அவர் எப்படி அணுகுவார் என்று தெரிந்தும் – வானளாவத் தூக்கி அவரைப் பேசவைத்த தினமணியின் மீதுதான்!
இது குறித்து தினத்தந்தி தொலைக்காட்சியில் ஓர் விவாதம் நடந்தது.
அதில் ஓவியா என்பவர் சொல்கிறார். ிஇந்து மதம் அழிய வேண்டிய மதம். உங்கள் மனது புண்படும் என்பதற்காக ஆராய்ச்சி செய்யாமல் இருக்க முடியாது என்கிறார்.உங்களுக்கு மாற்றுக்கருத்து இருந்தால் வெளியிட வேண்டியதுதானேீ என்கிறார்.
நான் கேட்கிறேன்.வைரமுத்து ஒரு பக்கம் முழுக்க ஆண்டாளை ஆராய்கிறேன் பேர்வழி என்று எழுதிவிடுவார். எங்கள் மாற்றுக் கருத்தை இதே தினமணி இதே முக்கியத்துவம் கொடுத்து போடுமா?நாங்களே எழுதி நாங்களே படித்துக் கொள்ள வேண்டியது தான்.
ஆண்டாளைப்பற்றி அறியாத உங்களைத்தானே எல்லாப் பஞ்சாயத்துக்கும் கூப்பிடுகிறார்கள்.
திரும்பவும் சொல்கிறேன்.இல கணேசன் உட்பட எல்லோரும் – ஆண்டாளை திருவரங்கத்தில் இருந்த தாசி – என்ற ஒரு வரியைத் தவிர மீதி எல்லாம் ஆண்டாளைப் போற்றுகின்ற அருமையான வரிகள்தான் என்கிறார்கள்.
மாலன்கூட விளக்கெண்ணையில் வெண்டைக்காயை நனைத்தது போல ஒரு கருத்தைச் சொல்லிவிட்டு, பிறகு அந்தக் கருத்தைக் தவிர்த்திருக்கலாம் என்கிறார்.
இங்கே கவனிக்க வேண்டிய முக்கியமான ஒரு செய்தி, தமிழ் இலக்கண இலக்கியப் புலமையைக் கொண்டு மட்டும் திருப்பாவையை – நாச்சியார் திருமொழியை ஆராய்வது – ஆண்டாளின் நோக்கத்தை முழுமையாக வெளிக்கொணர வகை செய்யாது என்பதை உணர்வதேயாகும்.
திருப்பாவை வைணவ நூல். திருமாலை தனிப்பெருங்கடவுளாகக் கொண்ட நூல். தமிழ் நூல்.இந்த மூன்றையும் புரிந்து கொள்ளாமல் ஆண்டாள் தமிழை ஆராய்வது குருடர்கள் யானையைத் தடவிப் புரிந்து கொண்டது போலத்தான் முடியும்.
காரணம் ஆண்டாள் தமிழில் வழங்கும் பல சொற்றொடர்கள் வைணவச் சமய ஒழுங்கினைப் புரிந்து கொண்டவர்க்கே விளங்கும். அங்கே தமிழ்ப்புலமை மட்டும் பயன்படாது.
சமயநெறி சார்ந்த தத்துவநூல் என்பதால் வேதாந்தம் படித்தவர்க்கும் கூட புரிந்து கொள்வது கடினமாகவே இருக்கும்.
அதனால்தான், வடமொழியின் கடினமான பிரம்ம சூத்திர வித்தைக்கு அழகாக விளக்கவுரை செய்த ஸ்ரீராமாநுஜர் திருப்பாவைக்கு உரை சொல்ல என்னால் முடியாது என்றார்.
வைரமுத்துவைவிட ஆயிரம் மடங்கு பன்மொழிப் புலமையும், தத்துவப் புலமையும் மிக்கவர்கள் உரையாசிரியர்கள்.
தனிநூல் செய்யும் ஆற்றல் மிக்க அவர்கள், ஆழ்வார்களின் ஈரத்தமிழை அணுஅணுவாக ரசித்து, பற்பல கோணங்களில் உரை செய்து வெளியிட்டிருக்கிறார்கள்.
இந்த உரைகளைத் தொடுவதற்குக் கூட ிதூயோமாய் வந்துீ என்கிற தகுதி வேண்டும்.
இப்படி உலகத்து உயிர்களின் உன்னத வாழ்வில் நாட்டம் கொண்ட நம் ஞானாசிரியர்கள் வரையறுத்து வைத்திருக்கிறார்கள்.
வைணவ உரைவளம் என்கிற நூலை செய்வதற்கு முன் வடமொழியையும், வேளுக்குடி வரதாச்சாரியரிடம் வைணவமரபு வழிக் கருத்துக்களையும் கேட்ட தமிழறிஞர் தெ.ஞானசுந்தரம் ஒரு முறை திருவரங்கத்தில் பேசும்போது, ஆசார்யர்கள் நின்று ஞானமொழி பேசிய இம்மண்ணில் நின்று பேசவே என் கால்கள் நடுங்குகின்றன என்று சிலிர்த்தார்.திருவாய்மொழியைப் பல நாட்கள் பேசிய புவனகிரியில் பேராசிரியர் அன்பழகன் மரபுக்குட்பட்டுத் தானே பேசினேன் என்று கேட்பார்.
வைணவ இலக்கியங்களில் தோய்ந்ததால் வந்த தெள்ளிய மனத்தின் வெளிப்பாடு அது.
அப்படி முறையான பயிற்சி பெற்று திருப்பாவையைத் தொட்டிருந்தால் வைரமுத்துவுக்கு இந்த அவலநிலை வாய்த்திருக்காது.
ஆழ்வார்களின் நோக்கம், இலக்கண இலக்கியப் புலமையை மட்டும் வெளிப்படுத்துவது அல்ல.
தான் வணங்கும் – நம்பும் – திருமாலைப் பாடுவதற்கும் பரப்புவதற்கும் தமிழ்தான் ஏற்ற மொழி என்பதால் தமிழில் பாடினார்கள்.
இதைப் புரிந்து கொண்டிருந்தால் தமிழை மட்டும் சமய இலக்கியங்களிலிருந்து பிரித்து எடுத்து நேசிப்பதாகத் தருக்கித்திரியும் வைரமுத்து ஆண்டாள் பக்கமே வந்திருக்க மாட்டார்.
ிகொடுமையில் கடுவிசை அரக்கன் திருவினைப் பிரித்துீ என்பது ஆழ்வார் பாசுரம்.
ஆண்டாள் நம்பியது திருமாலை.திருமாலின் புகழ்பாடுவது திருப்பாவை.எளிமையான செய்தி இது.
ஆண்டாள் நம்பியதிருமாலை நம்பாதவர் நாத்திக வைரமுத்து.
இவர் திருப்பாவையில் வேறு என்னத்தைத் தேடுகிறார்.
வைரமுத்துவின் கட்டுரைகளை உற்றுப்பார்ப்பவர்க்கு ஒன்று பளிச்செனப்படும்.
நூலாசிரியரின் கருத்தையோ – நூலுக்கு அதே அலைவரிசையில் எழுதிய உரையாசிரியர் கருத்தையோ புறம் தள்ளிவிட்டு, அதில் தன் கைச்சரக்கை கச்சிதமாக நுழைத்து விடுவார்.
கம்பன், திருமூலர் கட்டுரைகளைப் படிப்பவர்க்கும் இது தெரிந்திருக்கும். ஆனால், மௌன ஆசிரியர்களான தமிழறிஞர்கள் வாய்மூடிக் கிடந்தார்கள்.
வென்றவன் சொன்னதே வேதமாகியது.
திருப்பாவையில் மானுடக்காதலைத் தேடுகிறார் வைரமுத்து.
மானுடக் காதலையும், அதன் நுட்பத்தையும் வெளிப்படுத்த சங்க இலக்கியப்பாடல்கள் இருக்கின்றன.
இது அந்த வகை காதலல்ல என்பதால்தான் ஆணுக்கே நாயகிபாவம் ஏற்படுகிறது.
இதற்கு ஆசார்ய ஹ்ருதயம் என்கிற உயர்ந்த நூல் ஞானத்தில் தன் பேச்சு பிரேமத்தில் பெண் பேச்சு என்று ஆணித்தரமான விளக்கத்தைத் தரும்.
ஆசார்ய ஹ்ருதயத்தை ஒரு முறை தொட்டுப் பார்த்திருந்தால்கூட வைரமுத்துவுக்கு இந்த தரம் கெட்ட கட்டுரையை எழுத மனம் வந்திருக்காது.
வைரமுத்து தன் கட்டுரையில் ்அதிகாலை ஒழுக்கத்துக்குப் பாவை நோன்பு என்பது சடங்கு; கண்ணன் என்பதொரு காரணம்சு என்கிறார்.
அதிகாலை ஒழுக்கம் என்கிற தொடரே சரியா என்று தெரியவில்லை.
வைரமுத்து அவர்களே!
கண்ணன் என்பதொரு காரணம் அல்ல; கண்ணன் மட்டுமே காரணம் என்பதுதான் திருப்பாவையின் மையப்பொருள்.
கண்ணனே கணவனாய் அமைய நோற்பது கார்த்தியாயினி நோன்பு. நல்லதோர் கணவனை அடைய நோற்பது மட்டுமே திருப்பாவை நோன்பு என்று புது விளக்கம் தரும் வைரமுத்து இந்த விளக்கத்தை எங்கிருந்து பெற்றார் என்று சொல்லவில்லை.
உனக்கே நாம் ஆட்செய்வோம் என்கிற திருப்பாவைத் தொடர் வைரமுத்துவின் கண்ணில் விழவில்லையா?
ஆண்டாளின் நோக்கம் கண்ணனை அடைவது மட்டுமே;
உலகியல் ரீதியான கணவனை அடையும் நோக்கம் திருப்பாவையில் எந்த வரியில் வருகிறது வைரமுத்து அவர்களே!
இறைவன் முன் எல்லோரும் சமம் என்னும் குறுகிய பரவசம் என்று கூறுகிறார் வைரமுத்து.
இதில் என்ன செய்தியைக் கூற வருகிறார்?
ஆண்டாளின் தமிழுக்கும் இம்மாதிரியான இன்றைய அரசியல் கருத்துக்களுக்கும் என்ன தொடர்பு?
தன் கருத்தை வலிந்து ஏற்கும் முயற்சியில் வைரமுத்து தினமணி பத்திகளை வீணடித்திருக்கிறார்.
தெய்வம் – கடவுள் என்று இடையிடையே சாதாரண வாசகனுக்குப் புரிபடா வகையில் குழப்ப யுத்தங்கள் நிகழ்த்துவது எதற்காக?இதற்கெல்லாம் யார் பொருள் கேட்டார்கள்.
்ஆண்டாளின் தமிழைப் போற்றுகிறேன் என்று கிட்டத்தட்ட 2500 வார்த்தைகளுக்கு மேற்பட்ட கட்டுரையில் ஒரு 20 வார்த்தையாவது ஆண்டாள் தமிழின் சிறப்பைப் போற்றியிருப்பாரா?சு
்தன் உடலென்ற அழகும் உயிர் என்ற பொருளும்சு என்று எழுதுவது சரியான உவமைதானா?
்ஆழ்வார் பாசுரங்களோ அடிமையுறுவதில் ஆனந்தம் காண்பன. ஆண்டாள் பாசுரங்களோ விடுதலைக் குரலின் வீச்சுடையனசு என்கிறார்.இதுவும் அறியாதவன் புரியாமல் பேசுவது போலத்தான்.
காற்றில் கத்தி வீசுவதைப் போல இப்படி ஒரு கருத்தை தன் ஆராய்ச்சி பீறிட முழங்குகிறார்.
ஆழ்வார்களின் அடிமைக் குரலான பாசுரங்களை ஆண்டாள் பாசுரங்களிலும், ஆண்டாளின் விடுதலைக் குரலான பாசுரங்களை ஆழ்வார்கள் பாசுரங்களிலும் காணலாம். நாலாயிரம் பாடல்களிலும் நுட்பமான பயிற்சி இருந்தால் மட்டுமே இதை நுகர்ந்து உணர முடியும்.
ஜீவாத்மாவை அடிமையாகவும், பரமாத்மாவை தலைவனாகவும் கொள்ளும் மரபு வைணவ தத்துவ மரபு.
ஜீவாத்மாவை பெண்ணாகவும், பரமாத்மாவை ஆணாகவும் கொள்ளும் மரபு வைணவ தத்துவ மரபு.
இந்த இணைப்புதான் வைணவ தத்துவத்தின் இலக்கு.இந்த இணைப்புதான் ஆன்மிக காமம்.உலகியல் காதலில் உள்ள உயிர்ப்பும் துடிப்பும் ஆன்மிகக்காதலில் வெளிப்படுவதே சமயத்தில் உள்ள அகத்துறை பாடல்கள்.(சைவம் வைணவம் இரண்டிலும் இது பொருந்தும்.)தத்துவ ரீதியாக இந்தத் துடிப்பை புரிய வைக்க முடியாது என்பதற்காகவே உலகியல் காமம் போலவே பாசுரம் அமைத்தார்கள்.அதற்கு வைரமுத்துவைப்போல் உள்ளவர்கள் நேர் பொருள் எடுத்தால் என்ன செய்வது என்று உரை எழுதி வைத்தார்கள்.
வைணவ இலக்கியங்களிலே – அதன் தத்துவப் பின்புலத்தோடு – தோய்ந்து கரைகண்ட அறிஞர்களிடம் பாடம் கேட்டிருந்தால் மட்டுமே இது சாத்தியம்.
இல்லையெனில் குருட்டுக்கிழவன் கிணற்றில் விழுந்த கதைபோலத்தான் முடியும்!
்குத்து விளக்கெரியப் பாசுரம்சு ஆண்டாள் அகவெழுச்சியின் அத்து மீறல் என்று எழுதி, ்இதற்கு உரைகாரர்கள் வேறு பொருள் காட்டித் தம் தீராத் திமிர் காட்டுவார்கள்சு என்று எழுதும் வைரமுத்துவின் வாசகங்களில் அவரின் அறிவுணர்ச்சியையும், ஆய்வுணர்ச்சியையும் விட, பிரபல்யமாகி பெரும் மேடை கிடைத்துவிட்டால் எதையும் சொல்லலாம் என்ற திமிர் உணர்ச்சிதானே வெளிப்படுகிறது!
நுண்மாண் நுழைபுலம் மிக்க உரைகாரர்கள் பக்தியைத் தவிர, வேரறியாதவர்கள் –
குற்றமற்ற தூயவர்கள் –
யார் வம்புக்கும் போகாமல் தெய்வத்திருவடிகளையே நம்பிக் கிடந்தவர்கள்.
பரம கருணையுள்ளவர்கள் .
இத்தகைய உரைகாரர்களின் ஒரே ஒரு சொல் ஆழத்துக்குக் கூட நெருங்க முடியாதவர் வைரமுத்து! திருப்பாவைக்கு ஏராளமான அறிஞர்கள் எழுதிய அற்புத உரையை –
ஞான உரையை –
உள்ளுறைப் பொருளை உலகுக்கு காட்டும் உன்னத உரையை-
புலமைத்திமிர் என்று ஒதுக்கிவிட்டு இழித்துரைப்பதுதான் ஆண்டாள் தமிழுக்கு வைரமுத்து தரும் ஏற்றமா?
மனச்சாட்சியோடு தமிழுலகம் முன் அவரும் தினமணியும் பதில் சொல்ல வேண்டும்.
உலகியல் காமத்தின் உன்னத வரிகளே அந்த பாட்டின்(குத்து விளக்கு) நேர்பொருள் – உயர்பொருள் என்று தீர்ப்பளிக்க வைரமுத்து யார்?
இன்றைக்கும் திருப்பாவை, மார்கழி விடியலில் வைரமுத்து வீட்டின் பள்ளியறையிலா பாடப்படுகிறது?
தனித்த பாலியல் உணர்வுப் பாசுரமாக (மானுடக் காமமாக)இவர் சொல்லும் பாசுரங்களை ஊரறிய – கனத்த குரலோடு – தெருவில் நின்று பாடவேண்டிய மரபை யார் ஏற்படுத்தித் தந்தது?
இதுதான் அந்தப்பாடலில் அர்த்தம் என்றால் நாதமுனிகள் போன்றோர் அதை தினம்பாட வேண்டிய முறையில் சேர்க்க வேண்டிய அவசியம் என்ன?
காமச் சுவைக்காத்தான் மகாஞானியான இராமாநுஜர் திருப்பாவை ஜீயர் என்று போற்றப்பட்டாரா?காமச்சுவையைத்தான் வேதத்தின் வித்து என்று போற்றினார்கள்.
ஓ சங்கத் தமிழ் என்பதை நீங்கள் அப்படி அர்த்தப் படுத்திக் கொண்டீர்களோ..?
வைரமுத்து தன் உள்ளக் கருத்தை ஓங்கித் திணிக்க – உரைகாரர்களை சர்வ அலட்சியமாக தூக்கிப் போடுவதின் உள்நோக்கம் திருப்பாவையையும் – திருப்பாவையின் உன்னதத் தமிழையும் உயர்த்துவதல்ல?திருப்பாவையில் ஊடுருவி வைணவ நம்பிக்கைகளைப் பலி போடுவது.
்கண்ணனோடு உறவாடியதை உயர்திணைப் பெண்கள் சொல்லார்சு என்றால் வைரமுத்துவின் மனதில் இருக்கும் இழிபொருள் என்ன?
கண்ணன் உயர்குலப் பெண்களோடு மட்டும் கூடுபவனா? பின் ஏன் ஆயர் குலத்தில் பிறந்தான்! இது அபத்தத்தின் உச்சமல்லவா! தினமணி இதனை ஆராய்ச்சி என்று வெளியிடுகிறது.
குலசேகர ஆழ்வாரின் குரலில் ஒரு பக்தனின் முக்தி வேட்கை மட்டுமே முன்னுரிமை பெறுகிறது என்கிறார்.
ஐயா வைரமுத்து அவர்களே! குலசேகர ஆழ்வாரை முழுதும் படித்திருக்கிறீரா? அவருடைய ஏர்மலர் பூங்குழல் பாசுரத்தை ஒருமுறை படித்துப்பாரும்! தேவகியின் புலம்பலும், தசரதன் புலம்பலும் படித்துப் பார்த்தால் நீங்கள் எழுதின வார்த்தையை நீங்களே மறுக்கும் ஞானம் பிறக்கும்.
அன்பே தகளியா பாட்டில் தொண்டுள்ளத்தின் உருக்கமே தூக்கலாய்த் தெரிகிறது என்று எழுதுகிறார் வைரமுத்து.
தனிமனிதனின் தொண்டுள்ளம் அல்ல; உலக உயிர்களை உன்னதத் தன்மையோடு நேசிக்கும் மனித மாண்பின் வெளிப்பாடுதான் முதலாழ்வார்களின் குரல்.
நம்மாழ்வாரின் நாயகி பாவத்தில் உண்மையைத் தாண்டி உணர்ச்சி வினைப்படவில்லை என்று அருகிருந்து நம்மாழ்வாரை உணர்ந்தது போல் சொல்கிறீர்கள்!
திடீரென்று வைணவத்துக்கு மாறியவர் திருநீறு குழைத்து திருமண் இட்டுக் கொண்டது போல உணர்ச்சியின் பிரவாகம் யாப்புக்குள் தடுக்கி விழுகிறது! என்று எழுதுகிறீர்களே! இந்த விஷமத்தனமான உதாரணம் எதற்கு?
வைரமுத்துவைவிட 1000 மடங்கு பரம ரசிகர் பராசரபட்டர். இவர் நம்மாழ்வாரின் அகத்துறை பாடல்களுக்கு கொடுத்த விளக்கத்தை சற்று வாசித்துவிட்டு பிறகு வந்து வைரமுத்து விளக்கமளிக்கலாம் .
இப்படி வரிக்கு வரி அபத்தப்பின்னலை -அலங்காரத்தமிழில் செருகி- அச்சேற்றி,
புரிந்தவர்களை கலங்க வைக்கவும்,
புரியாதவர்களை மயங்க வைக்கவும்,
புதியபார்வை என்று சொல்லி, தன் கருத்தை வலிந்து திணிக்கவும் வைரமுத்துவால் மட்டுமே முடியும்.
இப்படி உள்ள அபத்தங்களின் உச்சம்தான் இண்டியானா பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சி என்று உள்நோக்கத்தோடு சேர்க்கப்பட்ட ஆங்கில வரி!
தமிழில் ஆராய்ந்தவர்களையெல்லாம் உதறித் தள்ளிவிட்டு, தமிழை உயர்த்த ஆங்கிலத்தைத் தேடிப்போய் தன் அறிவுக்கூர்மையை நிரூபிக்க முயற்சித்திருக்கிறார் வைரமுத்து.
கடைசியில் முடிக்கும்போது எட்டாதன எட்டுவதற்கும் கிட்டாதன கிட்டுவதற்கும், மனிதகுலத்தின் முதல் மூலதனம் நம்பிக்கை மீது கொள்ளும் நம்பிக்கை.
நம்பிக்கை வேறு; நம்பிக்கை மீது கொள்ளும் நம்பிக்கை வேறு போலிருக்கிறது!
வைரமுத்து அவர்களே! தமிழை காசுக்கு ஆராய்வது – நேரத்தைப் போக்க ஆராய்வதும் உங்கள் தொழில்.
அதற்கு உங்கள் இலக்கியத்தையே நீங்கள் ஆராய்ந்து உரை எழுதலாம்.
ஆனால்,
ஆண்டாள் தமிழ்க்கவிஞர் மட்டுமல்ல.
தெய்வக் கவிஞர்.
நூற்றுக்கணக்கான திருத்தலங்களிலே தனிக்கோயில் நாச்சியாராக பகவானுக்கு இடப்புறம் வீற்றிருந்து அருள் தருபவர்.
ஆண்டாளின் திருப்பாவையை தமிழுக்காக மட்டுமே நீங்கள் உங்கள் மொழி அறிவில் உரசிப்பார்க்கலாம்.
ஆனால், அதனை நீங்கள் தினசரி வாசிப்பதில்லை.வைணவ சமயம் உங்கள் வாழ்வோ நம்பிக்கையோ புரிதலோ அல்ல.
உடலும் உயிருமாகப் பின்னிப் பிணைந்த வைணவத் தமிழில் நீங்கள் தமிழைத் தனியே பிரித்தெடுத்தால் கிடைப்பது உயிரற்ற உடல்தான்.அல்லது உடலற்ற உயிர்தான்.
உடலற்ற உயிரை உங்ளால் பிடிக்க முடியாது.
உயிரற்ற உடலுக்கு சடலம் என்று பெயர்.அதை எரிக்கவோ புதைக்கவோ மட்டுமே முடியும்
உயிரற்ற தமிழைச் சவமாக்கி ஒப்பாரி வைப்பது தான் வைரமுத்துவின் நோக்கமா…
ஆனால்,வைரமுத்து அவர்களே
வைணவர்கள் அதனை தங்கள் வாழ்வியலோடு பிணைத்துக் கொண்டவர்கள்.
திருப்பாவையைச் சேவித்து – ஆண்டாளை வணங்காமல் அவர்கள் தினசரி காலை உணவை உட்கொள்வதில்லை.
அந்தத் தெய்வத்தமிழை உங்கள் எல்லைக்குட்பட்ட அறிவால் (டூடிட்டிணாஞுஞீ டுணணிதீடூஞுஞீஞ்ஞு) கொச்சைப்படுத்தாதீர்கள்.
ஆண்டாளோடு உங்கள் தமிழ் ஆராய்ச்சியை விட்டுவிடுங்கள்.
உங்கள் பணமும் புகழும் செல்வாக்கும் உங்களைக் காப்பாற்றட்டும்.
(கட்டுரையாளர்… கோகுலாச்சாரி.. ஆசிரியர்்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe