கடும் உழைப்புக்கு பாஜக., அங்கீகாரம் தரும்; பிரதமர் மோடியும், அமித் ஷாவும் நிரூபித்துள்ளனர்!

சற்றுமுன் சென்னை தமிழகம்
tamilisai soundarrajan 1 - 2026

கடும் உழைப்புக்கு பா.ஜ.க. அங்கீகாரம் தரும் என்பதை பிரதமர் மோடியும், அமித் ஷாவும் நிரூபித்துள்ளனர் என்று தமிழக பாஜக., தலைவர் டாக்டர் தமிழிசை சௌந்தர்ராஜன் கூறியுள்ளார்.

தாம் ஆளுநராக நியமிக்கப்பட்டது தொடர்பாக தமிழிசை செய்தியாளர்களிடம் பேசிய போது … ஆளுநர் நியமனம் மகிழ்ச்சி அளிக்கிறது. கடுமையான உழைப்பிற்கு பாஜக., அங்கீகாரம் தரும் என்பதை பிரதமர் மோடியும், பாஜக., தலைவர் அமித்ஷாவும் நிரூபித்துள்ளனர்.

எனக்கு ஆதரவு அளித்த தமிழக அரசியல் தலைவர்கள், குடும்பத்தினருக்கு ஆதரவு தெரிவித்துக் கொள்கிறேன். பாஜக., தலைவராக இருந்த எனக்கு அதை விட மிகப்பெரிய பதவியை கட்சித் தலைமை கொடுத்துள்ளது.

ஆளுநர் பதவி கிடைத்ததற்கு ஆண்டவனுக்கும் ஆண்டு கொண்டிருப் பவர்களுக்கும் நன்றி. பிரதமர் மோடி, பாஜக., தலைவர் அமித்ஷா, செயல் தலைவர் நட்டா ஆகியோருக்கும், என் மீது பாசத்தை பொழிந்த பாஜக., தொண்டர்கள், அவர்களது குடும்பத்தினர், தமிழக மக்கள், எனது பெற்றோர், தெய்வங்களை வணங்கி எனது நன்றியை தெரிவிக்கிறேன். இத்தனை வயதில் இந்த உயர்வு எதிர்பார்க்காத ஒன்று.

04 May15 tamilizai - 2026

ஆளுநராக அமர்த்தப்பட்டது மிகப்பெரிய பாக்கியம். தமிழக மக்களில் ஒரு சகோதரியாக இருந்து ஒரு மாநிலத்தின் ஆளுநராக செல்கிறேன்.

தெலங்கானா மாநிலத்துக்கு எந்ததெந்த வகையில் எனது பணியைச் செய்ய முடியுமோ, அதைச் செய்வேன். தமிழில் இருந்து சுந்தரத் தெலுங்குக்குச் செல்கிறேன்.

எவ்வளவு உயரத்துக்குச் சென்றாலும், எளிமையாகப் பழகக்கூடிய தன்மையை விட்டு விடக்கூடாது. அனைவரிடமும், அன்பு, மரியாதை, உதவி செய்யக்கூடிய வகையில் எனது பணி இருக்கும். தெலங்கானாவிற்கு தான் ஆளுநர். தமிழக மக்களுக்கு சகோதரி. அண்ணன்களுக்கு தங்கை, தம்பிகளுக்கு அக்காதான்.

காங்கிரஸ் தலைவரின் மகளாக வளர்ந்து பாஜக.,வில் இணைந்து அதில் தடம் புரளாமல் இருக்க வேண்டியது பெரிய சவால். தொண்டர்களுக்காக தந்தையை விட்டுக் கொடுக்க வேண்டியது ரணமாக இருந்தது. அரசியல் பாதைக்காக பாசத்தை விட்டுக் கொடுக்க வேண்டிய சூழல் இருந்தது.

ஆளுநர் நியமனம் தகவல் கிடைத்த உடனே, வர வேண்டும் என நினைத்தது தமிழக பாஜக., அலுவலகம் தான்.

ஆளுநராக நியமிக்கப்பட்ட உடன், நான் பாஜக., உறுப்பினர் இல்லை. 44 லட்சம் உறுப்பினரை இணைத்துவிட்டு, கட்சி பதவியில் இருந்து விலகியுள்ளேன். வெற்றி மகிழ்ச்சியில் பதவி விலகுகிறேன் என்று தமிழிசை கூறினார்.

தமிழக பாஜக., தலைவராக எனது பதவிக் காலம், டிசம்பர் மாதத்துடன் நிறைவு பெறுகிறது என்று கூறினார் தமிழிசை.

கடந்த 2014ஆம் ஆண்டு முதல் தமிழக பாஜக.,வின் தலைவராக இருப்பவர் தமிழிசை சௌந்தர்ராஜன். காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான குமரி அனந்தனின் மகளான தமிழிசை, பாஜக.,வின் பொதுச் செயலாளர், துணைத் தலைவர், தேசிய செயலாளர் உள்ளிட்ட பொறுப்புகளையும் வகித்தவர்.

2006 மற்றும் 2011ஆம் ஆண்டுகளில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தல், 2009 மற்றும் இந்த ஆண்டில் நடைபெற்ற மக்களவைத் தேர்தல்களில் போட்டியிட்டுத் தோல்வியை தழுவியவர்.

தமிழிசை சௌந்தர்ராஜன் ஆளுநராகப் பதவியேற்க உள்ளதால் அடுத்ததாக தமிழக பாஜக.,வுக்கு தலைமையேற்கப் போவது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. இது தொடர்பாக பல்வேறு ஊகங்களும் தொண்டர்களிடம் தொடர்ந்து சுழலத் தொடங்கியது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.