தம்பி மனைவி செய்த கிண்டல்! பழி தீர்த்துக் கொண்ட அண்ணன்!

இந்தியா கிரைம் நியூஸ்
murder - 2026

நவி மும்பை பகுதியைச் சேர்ந்தவர் யோகேஷ் சவான். ஜெயஸ்ரீ என்ற மனைவியும் அவினாஷ் என்ற இரண்டு வயது மகனும் இருந்தனர். திங்கள்கிழமை வேலைக்குச் சென்றுவிட்டு இரவு 10.30 மணியளவில் வீடுதிரும்பிய யோகேஷ் வீட்டின் கதவை தட்டியுள்ளார்.

ஆனால், நீண்ட நேரம் ஆகியும் கதவு திறக்கப்படவில்லை. பின்னர் காவல்துறைக்கு தகவல் தெரிவித்த யோகேஷ், போலீஸ் உதவியுடன் வீட்டை திறக்கும் போது கடும் அதிர்ச்சி காத்திருந்தது. வீட்டின் படுக்கையறையில் உள்ள கட்டிலில் ஜெயஸ்ரீ அரைகுறை ஆடையுடன் பேச்சு மூச்சு இல்லாமல் இருக்க, அவருடன் சிறுவன் அவினாஷும் அதே போல் இருந்துள்ளான்.

சோதித்துப் பார்த்தபோது இருவரும் உயிரிழந்திருந்தது தெரியவந்தது. அந்த அறையில் படுக்கையறையின் ஓர் ஓரத்தில் யோகேஷின் அண்ணன் சுரேஷ் உட்கார்ந்திருந்தார் அவரைக் கைது செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தினர். விசாரணையின் முடிவில், பல அதிர்ச்சியான தகவல்களை காவல்துறையிடம் தெரிவித்திருக்கிறார் சுரேஷ்.

31 வயதாகும் சுரேஷ் பல மாதங்களாக வேலை இல்லாமல் இருந்துள்ளார். வேலை இல்லாமல் இருந்தபோதும் பெற்றோர்களையும் சகோதரர் குடும்பத்தையும் அடிக்கடி தொந்தரவு செய்துவந்ததாகக் கூறப்படுகிறது. குடிப்பழக்கத்துக்கும் அடிமையாக இருந்திருக்கிறார்.

சமீபத்தில் குடித்துவிட்டு நள்ளிரவு நேரம் வீட்டுக்கு வர பெற்றோர்கள், சகோதரர் யோகேஷ் மற்றும் அவரின் மனைவி ஜெயஸ்ரீ ஆகியோர் சுரேஷை கடுமையாக திட்டியுள்ளனர். மேலும், அவருக்கு வேலை இல்லாததைச் சுட்டிக் காட்டி, `இந்த வீட்டில் உனக்கு அனுமதி இல்லை’ எனக் கூறி வெளியே அனுப்பியுள்ளனர்.

இந்தச் சம்பவத்தால் கடும் சோகமடைந்த சுரேஷ், சில நாள்களாக வீட்டுக்கு வராமல் இருந்துள்ளார். இதற்கிடையேதான் ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனத்தில் சுரேஷுக்கு வேலை கிடைத்துள்ளது. வேலை கிடைத்த உற்சாகத்தில் திங்கள்கிழமை வீட்டுக்கு வந்திருக்கிறார்.

அப்போது அவரின் பெற்றோர் கணபதி பூஜைக்காக சொந்த ஊருக்குச் செல்ல, தம்பி யோகேஷும் வேலைக்குச் சென்றுவிடவே வீட்டில் ஜெயஸ்ரீயும் சிறுவன் அவினாஷ் ஆகியோர் மட்டுமே இருந்துள்ளனர். இந்தச் சூழ்நிலையை பயன்படுத்திக்கொண்டு வேலை இல்லாமல் இருந்தபோது ஜெயஸ்ரீ கிண்டல் செய்ததை சுட்டிக்காட்டி அவருடன் விவாதம் செய்துள்ளார்.

ஒருகட்டத்தில் விவாதம் முற்றவே அவரையும் சிறுவனையும் தலையணை வைத்து அமுக்கிக் கொன்றுள்ளார். இந்தக் குற்றத்தை காவல்துறையிடம் ஒப்புக்கொண்டுள்ள சுரேஷ், `வேலை இல்லாமல் இருந்ததால் என்னைக் கடுமையாக கிண்டல் செய்தனர். மேலும், என்னை வீட்டுக்குள்ளும் அனுமதிக்கவில்லை. இதற்கு பழிவாங்கவே அவர்களைக் கொன்றேன்” என வாக்குமூலம் அளித்துள்ளார்.

சுரேஷ் குற்றத்தை ஒப்புக்கொண்டாலும், ஜெயஸ்ரீ அரைகுறை ஆடையுடன் இறந்துகிடந்தது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. கொலை செய்வதற்கு முன்பு அவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டாரா என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.