நெகிழ்ச்சி..! ஓடும் ஆட்டோவில் திடீர் நெஞ்சுவலி! சாகும் நிலையிலும் மாணவிகளைக் காத்த டிரைவர்!

உள்ளூர் செய்திகள் சற்றுமுன் நெல்லை லைஃப் ஸ்டைல்
auto 2 - 2026

தூத்துக்குடியில் ஓடும் ஆட்டோவில் திடீர் நெஞ்சு வலி வந்து தவித்தார் அந்த ஆட்டோ டிரைவர்! ஆட்டோ ஓட்டிய நிலையில் அவரது உயிர் பிரிந்தது. ஆனாலும், தனது உயிர் போகும் நிலையிலும் சமயோசிதமாக செயல்பட்டு ஆட்டோவை ஓரமாக நிறுத்தி மாணவிகள் பலரின் உயிரைக் காத்தது அப்பகுதி வாசிகளிடம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி ஸ்டேட் பாங்க் காலனியைச் சேர்ந்த 54 வயது ராமலிங்கம் ஆட்டோ ஓட்டி வந்தார். அப்பகுதியில் உள்ள பள்ளிகளுக்கு மாணவிகளை ஏற்றிச் சென்று தனது வாழ்க்கையை ஓட்டிவந்தார். இந்நிலையில், நேற்று மாலை ராமலிங்கம் தனது ஆட்டோவில் வழக்கம் போல் மாணவிகளை ஏற்றிச் செல்வதற்காக விஇ ரோட்டில் ஆட்டோவை நிறுத்தியுள்ளார்.

மாணவிகள் சிலர் ஆட்டோவில் ஏறிய நிலையில் திடீரென ராமலிங்கத்துக்கு மயக்கம் வந்துள்ளது. கண்கள் செருகிய நிலையில் அவர் மயங்கி விழுந்தது கண்டு, அக்கம்பக்கத்தினர் பதறிப் போய் அவருக்கு தண்ணீர் கொடுத்து அப்போதைக்கு முதலுதவி அளித்துள்ளனர்.

இந்நிலையில் தனது உடல் நிலையைக் கருதி, தனது ஆட்டோவில் ஏறிய மாணவிகளை வேறு ஆட்டோவில் ஏற்றி விட முயன்றுள்ளார் ராமலிங்கம். ஆனால் அந்த நேரம் வேறு ஆட்டோ எதுவும் அங்கே வரவில்லை.

இதனால் மாணவிகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, தானே மீண்டும் ஆட்டோவை இயக்கி, மாணவிகளை விட்டுவிடவேண்டும் என்று ஆட்டோவை இயக்கியுள்ளார். அவர், தூத்துக்குடி கீழ ரத வீதியில் சென்ற போது, மீண்டும் அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. அதனால் துடிதுடித்த அவர், அந்த வலியையும் தாங்கிக் கொண்டு, சாலை ஓரமாக ஆட்டோவை நிறுத்தி விட்டு… சில நொடிகளில் தனது டிரைவர் ஸீட்டிலேயே மயங்கி சரிந்துள்ளார்.

அவரது நிலை கண்டு கதறிய மாணவிகள், ராமலிங்கத்தை தட்டி எழுப்ப முயற்சி செய்துள்ளனர். இதை அடுத்து அங்கு ஓடி வந்த சிலர், அவரை ஆம்புலன்ஸ் மூலம் அங்குள்ள தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாகக் கூறியுள்ளனர்.

உயிர் போகும் நிலையிலும் மாணவிகளை பத்திரமாக வீட்டுக்குக் கொண்டு சென்று விட வேண்டும் என்ற கடமை உணர்ச்சியுடன் ஆட்டோவை இயக்கி, பின்னரும் தனக்கு ஏற்பட்ட நெஞ்சுவலியையும் தாங்கி ஆட்டோவை பத்திரமாக நிறுத்தி மாணவிகளின் உயிரை காத்த ஆட்டோ டிரைவர் ராமலிங்கத்தின் செயலை நினைத்து நினைத்து, மாணவிகளின் பெற்றோரும், அங்குள்ளவர்களும் நெகிழ்ச்சியுடன் பேசிக் கொண்டனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.