விபத்து மயிரிழையில் : கேரள காவல்துறை வெளியிட்ட பகீர் வீடியோ!

இந்தியா சற்றுமுன் லைஃப் ஸ்டைல்
accident kerala - 2026

கேரள காவல்துறை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோ பலரையும் பகீர் என நெஞ்சு உறையச் செய்துள்ளது.

என்னதான் சாலை ஓரங்களில் விபத்து தடுப்பு வாசகங்கள் எழுதி வைத்தாலும், அதனை பார்த்து அதன் படி நடப்போர் மிகக் குறைவே. வளைவுகளில் முந்தாதீர் என்று ஒவ்வொரு இடத்திலும் வாசகங்கள் இருந்தாலும், வளைவு குறித்த அபாய எச்சரிக்கை போர்டு வைத்திருந்தாலும், அசால்ட்டாக ஸ்டியரிங் பிடிப்போரே அதிகம்.

குறிப்பாக, நம் பார்வையை மறைக்கும் வண்ணம், வளைவில் ஏதேனும் வாகனம் இருந்தாலும், அதனை பொருட்படுத்தாமல் அந்த வாகனத்தை வளைவில் முந்துவதற்கு பலரும் முயற்சி செய்வதும் கண்கூடு.

அப்படித்தான் ஒரு கார் ஓட்டி, முன்னால் இருந்த பஸ்ஸை முந்திக் கொண்டு வளைவில் திருப்ப… ஒரு மாபெரும் விபத்து நடக்க இருந்தது… நல்லவேளை கார் பிரேக்கும் எதிரே வந்த வாகனத்தில் பிரேக்கும் காப்பாற்றி விட்டது.

இரு வாகனங்களின் ஓட்டுநர்களின் விழிப்பு உணர்வால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்ட சம்பவத்தை வீடியோ பதிவாகப் போட்டிருக்கிறது கேரள காவல்துறை.

கேரளாவில் சாலை ஒன்றில் அரசு பேருந்து ஒன்று பயணிகளை இறக்கி விட்டுக் கொண்டிருக்க… அதற்குப் பின் புறத்தில் இருந்து கார் ஒன்று, வளைவு என்றும் பாராமல் பேருந்தை வேகமாக ஓவர் டேக் செய்து கொண்டு முன்னேறியது. அதே நேரம்… காரின் எதிர்த் திசையிலிருந்து தீ அணைக்கும் வாகனம் ஒன்று வேகமாக வந்து கொண்டிருந்தது.

எதிர்த் திசையில் கார் வருவதை நொடிப் பொழுதில் கவனித்த தீ அணைக்கும் வாகனத்தின் ஓட்டுநர் உடனடியாக பிரேக் போட்டார். அதே நேரம் காரின் டிரைவரும் பிரேக் அடிக்க…. பஸ்ஸுக்கும் தீ அணைக்கும் வாகனத்துக்கும் நடுவே… கார் நின்று கொண்டது. பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இந்த வீடியோவை கேரள காவல்துறை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.