இன்று ப்ளஸ் 1 பொதுத்தேர்வு துவங்கியது! 8.32 லட்சம் பேர் பங்கேற்பு!

கல்வி தமிழகம் பொது தகவல்கள்
plustwo - 2026

தமிழகம் முழுவதும், பிளஸ் 1 பொதுத்தேர்வு இன்று துவங்கியது. இந்த தேர்வில், 8.32 லட்சம் பேர் பங்கேற்றனர்.தமிழக பள்ளிக்கல்வி பாட திட்டத்தில், பிளஸ் 1 பொதுத்தேர்வு, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று துவங்கியது.

மொத்தம், 7,400 மேல்நிலைப் பள்ளிகளில் இருந்து, 8.26 லட்சம் மாணவ – மாணவியர் மற்றும் 6,355 தனி தேர்வர்களை சேர்த்து, மொத்தம், 8.32 லட்சம் பேர் தேர்வுக்கு அனுமதிக்கப்பட்டனர்.

இவர்களில், மாணவியர் மட்டும், 4.40 லட்சம் பேர்; ஒருவர் திருநங்கை. 3,175 மாணவ – மாணவியருக்கு, மாற்று திறனாளிகளுக்கான சலுகையில், கூடுதல் நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

பள்ளி மாணவ – மாணவியரில், அறிவியல் பாட பிரிவில், 4.68 லட்சம்; வணிகவியலில், 2.89 லட்சம்: கலை பாட பிரிவில், 16 ஆயிரம்; தொழிற்கல்வியில், 53 ஆயிரம் பேர் தேர்வு எழுதுகின்றனர்.

மேலும், 2019ல், பிளஸ் 1 தேர்வு எழுதி, சில பாடங்களில் தேர்ச்சி பெறாமல், தற்போது பிளஸ் 2 படிக்கும், 51 ஆயிரம் பேரும், தாங்கள் தேர்ச்சி பெறாத பாடங்களுக்கு தேர்வு எழுதினர். தேர்வர்களில், 4.39 லட்சம் பேர், தமிழ் வழியில் படித்தவர்கள். தமிழகம் மற்றும் புதுச்சேரியில், 3,016 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

முறைகேடுகளை தடுக்க, 44 ஆயிரத்து, 500 ஆசிரியர்கள் அறை கண்காணிப்பு பணியில் அமர்த்தப்பட்டு உள்ளனர்.சிறை கைதிகள் வேலுார், கடலுார், கோவை, மதுரை, திருச்சி, பாளையங்கோட்டை, சேலம், புதுக்கோட்டை மற்றும் புழல் சிறைகளில் உள்ள, 100 கைதிகள், பிளஸ் 1 பொதுத்தேர்வை, புழல் சிறையில் உள்ள தேர்வு மையத்தில் எழுதினர். பிளஸ் 1 பொதுத்தேர்வு, மார்ச், 26 வரை நடக்க உள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.