தண்ணீர்ப் பாம்பின் கண்ணீர் கதை இது…

இலக்கியம் உரத்த சிந்தனை கவிதைகள்
stone pelting in delhi - 2026

விஷப் பாம்பைப் போலவே இருப்பதால்…
விரட்டி விரட்டி அடிக்கப்படுகிறது
வெறும்
தண்ணிப் பாம்பு!

உமிழ் நீரை
பிறருக்கு ஒவ்வாத நீராக
ஒரு சொட்டும் ஆக்கிக் கொள்ளாத நிலையிலும்
கண்ணில் பட்டாலே கல்லெறிந்து கொல்லப்படுகிறது!

அன்பாக தலையை வருடிக் கொடுக்க
எந்தக் கரமும் நீள்வதில்லை
ஆறுதலாகச் சாய்ந்து கொள்ள
ஒற்றைத் தோளும் உலகில் இல்லை
மறைவிடங்களில் உலவுவதே
விதி என்று ஆகிவிட்டது
பெரியதொரு மண்புழுபோல்
புவி எங்கும் ஊர்ந்த போதிலும்!

எத்தனை சட்டையை உரித்தும்
பாம்பின் தோல் போவதே இல்லை!
பாம்பு போலிருக்கும் அந்த
மிக நீண்ட ஊரும் உயிருக்கு!

அசிங்கமான கிணற்றுத் தவளைகள்
விதை நெல் தின்னும் பொந்து எலிகள் என…
விதிக்கப்பட்டதை மட்டுமே உண்ணும்
என்றாலும்…
எறியப்படும் கற்களோ
விஷ நாகங்களுக்கானவை!

பயந்து தப்பிக்கப் பார்ப்பதே
முதல் எதிர்வினை
என்றாலும்…
மூலையில் முடக்கப்படும்போது
சீறுவதாலோ என்னவோ
வெறுத்து பயந்து (?) வேட்டையாடப்படுகிறது!

மறைவிடம் தேடியே அலைய நேர்ந்த
இந்த நீண்ட நெடிய பரிணாம ஓட்டத்தில்
சிறகுகள் முளைத்து வானில் பறந்திருக்கலாம்
இடத்துக்கு ஏற்ப நிறம் மாறும் கலையைக் கற்றிருக்கலாம்
நீரின் ஆழத்திலேயே நித்தமும் இருந்திருக்கலாம்
அல்லது
கொஞ்சமேனும் தன் உமிழ் நீரை
விஷமாக்கவாவது கற்றுக் கொண்டிருக்கலாம்.

  • பி.ஆர்.மகாதேவன்
delhi police murder - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.