
— ஆர்.வி.ஆர்., / ஆர்.வீரராகவன்
தமிழக அரசு மதுவை மாநிலத்தில் எங்கும் கிடைக்கச் செய்வது, மது குடிக்கும் சாதாரணத் தமிழர்களுக்கு அப்பட்டமான கேடு விளைவிக்கிறது. அதாவது, அரசின் செயல் பெருவாரியான மக்களுக்குத் தீமை செய்கிறது. ஆனால் இந்த நேரடி விளைவை மறுத்து, தமிழகத்தின் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் நிருபர்கள் மத்தியில் அனாயாசமாக அபத்தமாகப் பேசி இருக்கிறார்.
அவர் நினைத்தது இது. அதாவது, தமிழக அரசு டாஸ்மாக் கடைகள் நடத்தி, மது விற்று, பெரிய வருமானம் ஈட்டுவதை நியாயப் படுத்த வேண்டும். அதே சமயம், மாநிலத்தில் சாதாரண மக்கள் பலர் மேலும் மேலும் குடித்துச் சீரழிவதற்கு, அவர்கள் குடும்ப நலன் கெடுவதற்கு, மதுவை மக்களுக்கு விற்கும் அரசு சிறிதும் பழி ஏற்கக் கூடாது.
அபத்தமாகப் பேசினால்தான் இந்த இரண்டு நிலைகளையும் எடுப்பது சாத்தியம். அதை திராவிட மாடல் ஸ்டைலில் செய்து காட்டி இருக்கிறார் அமைச்சர்.
மா. சுப்பிரமணியனின் ஒரு சமீபத்திய பேட்டியின் வீடியோ சமூக வலைத்தளத்தில் இருக்கிறது. நிருபர்களின் கேள்விகளுக்கு பதில் சொல்லும்போது அவர் இப்படிப் பேசுகிறார்:
“மதுபானக் கடை இருக்குதுங்கறதால எல்லாரும் போய் குடிக்கறதில்லயே? அதைக் குடிக்கறவங்கதான். அதைக் குடிக்கிறவங்களைப் போய் ‘நீ முழு நேரமும் குடிக்காத’ன்னு நாம அட்வைசும் பண்ணலை. பண்ணினாலும் நல்லதுதான் ……”
என்னது? இதைப் படித்த உடன் கை விரல்களால் நெற்றியின் இரண்டு பக்கத்தையும் கெட்டியாகப் பிடித்தீர்களா? தலை சுற்றத்தான் செய்யும். இப்போது ஸ்டெடியாக ஒரு நாற்காலியில் உட்கார்ந்த பின் அமைச்சர் அடுத்து பேசியதையும் கேளுங்கள்.
“மதுக் கடை திறந்து இருந்தா மக்கள் போவாங்களே?”என்று ஒரு நிருபர் யாருக்கும் தோன்றுவதைக் கேட்டுவிட, அமைச்சர் விர்ரென்று திராவிட மாடலின் சிகரத்துக்கே போய் விட்டார். அங்கிருந்து அந்த நிருபருக்கு இப்படிப் பதில் சொன்னார்:
“நீங்க போறீங்களா டெய்லி? எனக்கு அறுபத்து மூணு வயசு ஆகுது. இது வரை வெத்தலை பாக்கு போட்டதில்லை, பீடி சிகரெட் தொட்டதில்லை. எந்த மது பானக் கடைக்கும் போய் பாட்டிலை எட்டிப் பாத்ததில்லை. அது மாதிரி நீங்களும் இருங்களேன். யார் வேணாங்கறது?”
மா.சுப்பிரமணியன் பேசிய அபத்தத்தை விஸ்தாரமாக விளக்க வேண்டும் என்றால் இப்படிக் கேட்கலாம்.
அதிக மாணவர்களை எப்படி ஆரம்பக் கல்வியோ உயர்கல்வியோ கற்க வைக்க முடியும்? எல்லா ஊர்களிலும், எல்லாப் பகுதிகளிலும், அதிக பள்ளிக் கூடங்கள் ஆரம்பித்து நடத்தினால் தானே அது சாத்தியம்? ஆனால் இந்த அடிப்படை உண்மைக்கு மாறாக ஒருவர் பேச ஆரம்பித்து, “பள்ளிக் கூடம் இருக்குதுங்கறதால எல்லாரும் போய் படிக்கறதில்லயே? படிப்பை படிக்கறவங்கதான்…….” என்று பிதற்றினால் அதை என்ன சொல்வது? திராவிட மாடல் உளறல் என்று சுருக்கமாகச் சொல்லலாம்.
இன்னொன்று. பொதுவாக, தீயதை மனது தானாக நாடும். ஆனால் நல்லதை நம் மனதுக்கு மெனக்கெட்டு பயிற்றுவிக்க வேண்டும், தக்கவைக்க வேண்டும் – அப்போதுதான் சமூகம் ஒரு கட்டுப்பாட்டில் இருந்து அனைவரும் பாதுகாப்பாக ஒரு ஒழுங்குடன் முன்னேற முடியும். என்ன இருந்தாலும், சாதாரண மக்களுக்கு – அதுவும் படிப்பறிவு பெருகாத ஏழ்மையான மக்களுக்கு – குடிப்பழக்கம் தீயதுதான். “அரசு எல்லா இடத்திலும் மதுக் கடை வைத்தால் நீ குடிக்காமல் இருக்க வேண்டியதுதானே?” என்று மக்களைப் பார்த்து ஒருவர் கேட்டால், அதுவும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் கேட்டால், அது வெறும் அபத்தம் அல்ல. மனிதாபிமானம் அற்ற அரக்கத்தனம்.
மா.சுப்பிரமணியன் பேசியது கலப்பில்லாத அபத்தம் என்பது அவருக்குத் தெரிந்துதான் இருக்கும். இதில் சந்தேகமே வேண்டாம். ஒரு பொய்யைச் சொல்கிறார். ஒரு அரசின் சார்பாக பொறுப்பில்லாமல் பேசுகிறார். ஒரு அரசின் நிர்வாக இயலாமையை மறைக்க, பல பெருந்தலைகளின் மது ஆலைகளைக் காப்பாற்ற, தன் தலைவரைத் திருப்தி செய்து தனது அமைச்சர் பதவியைத் தக்க வைக்க, பித்தலாட்டம் செய்கிறார். சுருக்கமாக, திராவிட மாடலுக்கு இவரும் மாடலிங் செய்கிறார்.
இன்றைய தேதியில், தனது அறுபத்து மூன்று வயது வரை அவர் மதுக் கடைக்குச் சென்றதே இல்லை என்பதை மா. சுப்பிரமணியன் மார் தட்டிச் சொல்ல முடிகிறது. ஏனென்றால், பல சாதாரண மக்களைப் போல் மது அருந்த ஆரம்பித்துப் பின்னர் மதுவுக்கு அவர் அடிமையாகவில்லை, அதனால் அவரது உடல் நலத்தைக் கெடுத்துக் கொள்ளவில்லை, மது அருந்தி வாகனம் ஓட்டி அவர் விபத்துக்கு உள்ளாகவில்லை, அவர் தனது வருமானத்தை மதுவில் இழக்கவில்லை, அதனால் அவரது குடும்பத்தை அலட்சியம் செய்து குடும்பத்தினருக்கும் கேடு விளைவிக்கவில்லை என்பதில் அவர் நியாயமாகப் பெருமை காண்கிறார். ஆனால் பெரும்பாலான சாதாரண மக்கள், எழை மக்களின் நிலை மாறானது – இது தெரிந்தேதான் அவர் அபத்தம் பேசினார்.
1971-ல் இருந்த கருணாநிதி தலைமையிலான திமுக ஆட்சியிலிருந்து தமிழகத்தில் மதுக் கடைகளை அரசு திறந்து விட்டிருக்கிறது. நடுவில் அதிமுக ஆட்சிக் காலத்திலும் மதுக் கடைகள் உண்டு. இத்தனை காலமாக, சாதாரண மனிதர்கள் எல்லாரும் மா.சுப்பிரமணியன் போல் ‘மதுவின் பக்கமே போகமாட்டேன்’ என்றா இருக்கிறார்கள்? அவர்களின் அவலத்தால், அறியாமையால், வறுமையிலும் அவர்கள் மதுவை வாங்கிக் குடிப்பார்கள் என்று தெரிந்துதான் இரண்டு திராவிடக் கட்சி முக்கியஸ்தர்கள், அவர்களுக்கு நெருங்கியவர்கள் ஆகியோர் முதலீடு செய்து மதுபான ஆலைகள் நடத்துகிறார்கள், அரசும் மதுவை அனைவருக்கும் அனுமதிக்கிறது. அந்த ஆலைகள் செழிக்கின்றன, தமிழக அரசின் மது வருமானம் வளர்கிறது. ஆனால் மதுவினால் தொடர்ந்து அதிகரிக்கும் சாதாரண மக்கள் வாழ்வின் அவதியைக் குறிக்க எண்கள் இல்லை.
மதுவினால் சாதாரண மக்கள், ஏழைகள், எக்கேடு கெட்டாலும், அவர்கள் வீட்டுப் பிள்ளைகள் கவனிப்பற்றுப் போனாலும், அவர்கள் குடும்பம் சீரழிந்தாலும், தமிழக அரசுக்கும், அதைச் சார்ந்து அரசியல் நடத்தும் மா.சுப்பிரமணியன் போன்றவர்களுக்கும் கவலை இல்லை. அவர்கள் பதவி, அவர்கள் சுகம், அவர்களின் என்ன என்னவோ, ஆகியவை மட்டுமே அவர்களின் குறிக்கோள். அதற்காக அபத்தமாகப் பேச நேர்ந்தால் பேசித்தான் ஆகவேண்டும். அதைப் பார்த்தால் அரசியல் செய்ய முடியுமா என்ன?
ஆனால் ஒன்று. நமது அன்றாட வாழ்விலும், நாட்டின் பொது வாழ்விலும், மா.சுப்பிரமணியன் ஒரு உதாரணம், அவ்வளவுதான். தனக்கு, தன் காரியத்துக்கு, தன் ஈகோவிற்கு, தன் குடும்பத்திற்கு, பொருளாதார ரீதியிலும் பிற வகையிலும் நல்லது எது, சுகம் தருவது எது, லாபம் எது என்று தெரிந்து அதன்படி மட்டும் செயல்படும் புத்திசாலிகள் பலர் எங்கும் உண்டு. அதைக் கணக்கிட்டுத்தான் அவர்கள் எது சரி, எது தப்பு என்று நீள நீளமாகப் பேசுவார்கள். மா.சுப்பிரமணியன் மாதிரி சத்தமாக வெட்கமில்லாமல் கூடப் பேசுவார்கள். அல்லது, அதில் மட்டும் கூச்சப்படும் சிலர் தாங்கள் ஆதரிக்கும் அநீதியான விளைவுகளைப் பற்றிக் கூடியவரை பெரிதாகப் பேசாமல் இருப்பார்கள். இவர்கள் ஆபீசில் வேலை பார்ப்பவர்களாக, வக்கீல்களாக, கவிஞர்களாக, எழுத்தாளர்களாக, மேடைப் பேச்சாளர்களாக, அரசியல்வாதிகளாக, என்னவாகவும் இருக்கலாம் – அதெல்லாம் வேறு விஷயம்.
புத்திசாலிகளாக இருப்பவர்கள் ஒவ்வொரு விஷயத்திலும் நியாயமானவர்கள், நேரானவர்கள், என்பது நிச்சயமல்ல. அதீத புத்திசாலிகள் விஷயத்திலும் அது நிச்சயமல்ல. நியாய உணர்வு மற்றும் நேர் சிந்தை இல்லாத புத்திசாலிகள் அதிகாரத்தின் கீழ் வாழ்க்கை நடத்தும் சாதாரண மக்களுக்கு, பணவசதி குறைந்தவர்களுக்கு, நல்ல தலைவர்களும் நல்ல ஆட்சியும் கிடைக்க அதிர்ஷ்டம் வேண்டும். தமிழக மக்களுக்கு அவை என்று கிடைக்குமோ?
(கட்டுரையாளர், வழக்குரைஞர்)