5 மாநகராட்சிகளில் முழு ஊரடங்கு: அரசாணை வெளியீடு!

உள்ளூர் செய்திகள் கோவை சற்றுமுன் சென்னை மதுரை
Chief Secretariat - 2026

சென்னை, கோவை, மதுரை உள்ளிட்ட 5 மாநகராட்சிகளில் முழு ஊரடங்கு அமல்படுத்துவது தொடர்பான அரசாணை வெளியிடப் பட்டுள்ளது.

சென்னை, கோவை, மதுரை, சேலம், திருப்பூர் ஆகிய 5 மாநகராட்சிகளில் வரும் ஞாயிறு முதல் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளது. இதன்படி, பெட்ரோல், டீசல் விற்பனை நிலையங்கள் காலை 8 மணி முதல் மதியம் 12 மணி வரை செயல்படும்.

கோயம்பேடு உள்ளிட்ட காய்கறி சந்தைகள் கட்டுப்பாடுகளுடன் இயங்கும் மருத்துவமனைகள், ஆய்வு கூடங்கள், மருந்தகங்கள், பால் வினியோகத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக இன்று முற்பகல் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்த போது…

சென்னை, கோவை, மதுரையில் வரும் ஏப்ரல் 26 முதல் 29 வரை முழு ஊரடங்கு என்றும், சேலம், திருப்பூரில் ஏப்ரல் 26ஆம் தேதி 29 வரை முழுமையான ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்றும் கூறினார். கொரோனா பரவலை தடுக்க நகர்ப்புறங்களில் கட்டுப்பாடுகளை அதிகரிக்க முடிவு செய்யப் பட்டுள்ளதாகவும், கோயம்பேடு போன்ற மொத்த காய்கறி சந்தைகள் விதிமுறைகளின் படி செயல்படும் என்றும் கூறினார்.

முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட 5 மாநகராட்சிகள் தவிர மற்ற மாநகராட்சிகளில் வழக்கமான கட்டுப்பாடுகள் தொடரும் என்றும், முழு ஊரடங்கு காலத்தில் தலைமைச் செயலகம், சுகாதாரம், குடிநீர் வழங்கல் துறை, காவல்துறை ஆகியவை தேவையான பணியாளர்களுடன் செயல்படும் என்றும் கூறினார் முதல்வர் பழனிசாமி.

இதனிடையே, கொரோனா வைரஸ் தொற்றை அறிவிக்கத்தக்க நோயாக தமிழக அரசு அறிவித்தது. சுகாதாரத்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் தமிழ்நாடு பொது சுகாதார சட்டம், 1939ன் 62வது பிரிவின் படி அறிவிக்கத்தக்க நோயாகவும், பிரிவு 76ன் படி தமிழகம் தொற்று பரவ வாய்ப்புள்ள இடமாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் அரசு மற்றும் தனியார் கட்டடங்கள், மருத்துவமனைகள், அலுவலகங்கள், தொழிற்சாலைகள், வணிக வளாகங்கள், திருமண மண்டபங்கள், பள்ளி, கல்லூரிகள், மதம் சார்ந்த இடங்கள் என அனைத்திலும் சோப், தண்ணீர் வசதியுடன் கூடிய கைகழுவுமிடம் அமைக்கவும், அங்கு வந்து செல்வோர் கை கழுவுவதை உறுதி செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதே போல் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் கொரோனா அறிகுறிகளுடன் வரும் நோயாளிகள் குறித்து 24 மணி நேரத்துக்குள் சுகாதாரத்துறைக்கு தெரிவிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனை மீறுவோருக்கு தமிழ்நாடு பொது சுகாதார சட்டம் 1939 மற்றும் தொற்று நோய் சட்டம் 1987 ஆகியவற்றின் கீழ் 6 மாதம் வரை சிறை அல்லது அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.