கொரோனாவில் சிக்கிக் கொண்ட 180 போலீஸார்..! இந்த நேரத்திலும் பணியிட மாற்றமா?

அடடே... அப்படியா? சற்றுமுன் சென்னை தமிழகம்
police 4
police 4

கொரோனா நோய்த் தொற்றுக்கு தமிழக காவல்துறையில் இதுவரை ஐஜி உள்பட 180-்க்கும் மேற்பட்ட போலீஸார் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கொரோனா தொற்றினால் நூற்றுக்கணக்கான காவல்துறையினர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், செவ்வாய்க்கிழமை 10-்க்கும் மேற்பட்ட டிஎஸ்பிக்களும், காவலர்களும் அதிரடியாகப் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

கொரோனா நோய்த் தொற்று காரணமாக ஊரடங்கு அறிவிக்கப்பட்ட 50 நாள்களில் போலீஸார் விடுப்பு மற்றும் ஓய்வு இல்லாமல் பம்பரமாகச் சுற்றி வேலை செய்து வருகின்றனர். எனினும் ஆங்காங்கே காவல்துறையினர் சிலர் ஒழுங்கீனமாகவும், அராஜகப் போக்குடன் நடந்து கொள்வதாக புகார்கள் எழுந்தன. மேலும் பல இடங்களில் பொதுமக்களுடன் வாக்குவாதம், மோதலில் ஈடுபட்ட சம்பவங்களும் அரங்கேறின.

அதேநேரத்தில் தங்கள் கடைமையை சரிவர செய்யும் போலீஸாரின் பணியை யாரும் மறுப்பதற்கில்லை.  இந்த நிலையில், நிர்வாக வசதியைக் காரணம் காட்டி தமிழகத்தில் 110 டிஎஸ்பிக்களை பணியிட மாற்றம் செய்து தமிழக காவல்துறை தலைவர் ஜே.கே. திரிபாதி உத்தரவிட்டுள்ளார்.

சென்னை வடக்கு மண்டல எஸ்பிசிஐடி டிஎஸ்பி சிவராஜன் சென்னை குற்றப்புலனாய்வு பிரிவின் தலைமை இடத்துக்கும், அங்கிருந்த டிஎஸ்பி எச்.கரியப்பா சென்னை எஸ்பிசிஐடிக்கும், சென்னை கியூ பிரிவு டிஎஸ்பி அருள் சந்தோஸ் மாதவரம் உதவி ஆணையராகவும், திருநெல்வேலி மாவட்ட நில அபகரிப்பு தடுப்புப் பிரிவு டிஎஸ்பி சி. முகேஸ் ஜெயக்குமார் கரூர் நகரத்துக்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். ஒழுங்கீனமாக நடந்து புகாருக்கு உள்ளான காவலர்கள் மாவட்டத்துக்குள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

காவல்துறையினர் 24-ம் நேரமும் சுழற்சி முறையில் பணியில் இருப்பதால் கொரோனா நோய்த் தொற்று பரவிவிடக் கூடாது என்பதற்காக அடிக்கடி கிருமிநாசினி மூலம் கைகளை சுத்தப்படுத்துதல், கண்டிப்பாக முகக்கவசம் அணிதல் ஆகியன கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது. எனினும் காவல்துறையில் ஆங்காங்கே நோய்த் தொற்று ஏற்பட்டு வருகிறது.

police 1

சென்னையில் கோயம்பேடு சந்தையை அடிக்கடி பார்வையிடச் சென்ற காவல்துறையின் உயர் அதிகாரி ஐஜி ஒருவருக்கு பாதிப்பு ஏற்பட்டு அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

வேப்பேரில் உள்ள சென்னை பெருநகர காவல் ஆணையர் அலுவலகத்தின் 8-வது தளத்தில் பணிபுரியும் கூடுதல் காவல் ஆணையர் ஒருவருக்கும் பாதிப்பு ஏற்பட்டு அவர் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் பணிபுரியும் உயர் அதிகாரிகள் அனைவரும் மாடிகளுக்கு செல்ல லிப்ட் வசதியை பயன்படுத்தி வருவதால் அங்கிருந்தும் கொரோனா நோய்த் தொற்று ஏற்பட்டிருக்கலாம் என காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

 மேலும் பூந்தமல்லி காவல் நிலைய தலைமைக் காவலர், சென்னை நுண்ணறிவுப் பிரிவு கேமராமேனாக பணியாற்றி சிறப்பு காவல் உதவி ஆய்வாளர், சூளைமேடு காவல் நிலைய தலைமைக் காவலர், கோயம்பேடு காவல்நிலைய தலைமைக் காவலர்,சென்னை காவல்துறை நவீன கட்டுப்பாட்டு அறையில் பணியாற்றும் பெண் காவலர், பெரியமேடு போக்குவரத்து காவல்நிலையத் தலைமைக் காவலர், ஆவடி தமிழ்நாடு சிறப்புக் காவல்படையைச் சேர்ந்த ஆய்வாளர், கோயம்பேடு சந்தையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட 4 காவலர்கள், மணலி புதுநகர் தலைமைக் காவலர் உள்பட ஏராளமான சென்னை பெருநகர போலீஸார் நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகி்ச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மருத்துவர்கள், செவிலியர்கள், ஊடகத் துறையினரை தொடர்ந்து காவல்துறையினரும் கொரோனா நோய்த் தொற்றினால் பாதிக்கப்படுவது அத்துறையினரிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

  • சதானந்தன், சென்னை

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.