கேரளத்தில் தொடங்கியது தென்மேற்குப் பருவமழை!

இந்தியா சற்றுமுன் பொது தகவல்கள் லைஃப் ஸ்டைல்
rain
rain

கேரளத்தில் தென்மேற்குப் பருவமழை இன்று தொடங்கி யுள்ளது. இந்த நிலையில் அங்கு 9 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஜூன் முதல் வாரத்தில் தொடங்கும் என்றும் ஜூன் 8ம் தேதி தொடங்கும் என்றும் முன்னர் கூறப் பட்ட தென்மேற்குப் பருவ மழை, வழக்கமான நாளில் ஜுன் முதல் தேதியே தொடங்கியுள்ளது.

கேரளத்தை அடுத்து, தென்மேற்குப் பருவமழை, கர்நாடகம், கோவா, மகாராஷ்டிரம், குஜராத் மாநிலத்தின் கடற்கரைப் பகுதிகளிலும் தீவிரமடையும் என வானிலை ஆய்வுத்துறை அறிவித்துள்ளது.

கேரளத்தில் தென்மேற்குப் பருவமழை இன்று தொடங்கியதன் அறிகுறியாக, கேரளத் தலைநகர் திருவனந்தபுரத்திலும் சுற்று வட்டாரப் பகுதிகளிலும் அதிகாலையில் இருந்தே விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது. இதனால் வெப்பநிலை தணிந்து குளிர்ந்த காற்று வீசுகிறது.

திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம்திட்ட, ஆலப்புழை, கோட்டயம், எர்ணாகுளம், இடுக்கி, மலப்புரம், கண்ணூர் ஆகிய 9 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வுமையம் கூறியுள்ளது. இதன் அடிப்படையில் இந்த மாவட்டங்களில் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப் பட்டுள்ளது.

செவ்வாயன்று எர்ணாகுளம், திருச்சூர், மலப்புரம், கோழிக்கோடு, காசர்கோடு ஆகிய மாவட்டங்களுக்கும், புதனன்று கண்ணூர், காசர்கோடு மாவட்டங்களுக்கும் கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, கேரளத்தை ஒட்டியுள்ள தமிழக பகுதியில் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளதாக, வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்களுக்கு அதிக மழைப் பொழிவைத் தருவது தென்மேற்குப் பருவமழைதான். கேரளத்தில் பருவமழை தொடங்கும் போது, திருக்குற்றாலத்தில் சீஸன் களை கட்டுவது வழக்கம்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.