அளவற்ற குருபக்தி அருளுவது..! ஆச்சார்யாள் அருளமுதம்!

ஆன்மிகச் செய்திகள் ஆன்மிகம் ஸ்ரீசிருங்கேரி மகிமை
IMG_20200725_120526_262

தௌமிய மகரிஷியின் ஆசிரமத்தில் உபமன்யு என்பவன் சிஷ்யனாக தங்கி குருவிற்கு சேவை புரிந்து வந்தான்.

குருவின் கட்டளைக்கு இணங்க அவன் அவருடைய பசுக்களை மேய்ச்சலுக்காக ஓட்டிச் செல்வான் பிரம்மச்சரிய ஆசிரம விதிகளை நன்கு கடைபிடித்து வந்தான் அதன்படி தான் பிக்க்ஷை எடுத்த உணவை தன் குருவிடம் சமர்ப்பித்தான்.

உபமன்யுவை பரிசோதிக்க எண்ணிய குரு அவன் கொண்டுவந்த உணவு முழுவதையும் தாமே வைத்துக் கொண்டு அவனுக்கு ஒன்றும் கொடுக்காமல் இருந்தார்.

இப்படியே சில நாட்கள் சென்ற போதிலும் சிஷ்யன் வலிமையோடும் திடகாத்திரத்தோடும் இருப்பதை கண்டார் ஆரோக்கியத்தை எப்படி பாதுகாத்துக் கொள்கிறான் என்று உபமன்யுவிடமே ஒருநாள் கேட்டார்.

மற்றொருமுறை பிக்க்ஷைக்கு செல்வதாகவும் அதில் கிடைக்கும் உணவை உண்பதாக கூறினான் உபமன்யு.

இது தகாத செயல் என்று அப்பழக்கத்தை கை விடுமாறு கூறினார் குரு. பிறகும் அவன் வலிமையோடு காணப்பட்டான் அதற்கு காரணம் கேட்டபோது பசுக்களை மேய்க்கச் செல்லும் பொழுது பாலை எடுத்துக் கொள்கிறேன் என்று பதிலளித்தான். அதற்கு குரு நீ அந்தப் பாலை எடுக்கக்கூடாது அது என்னுடைய சொத்து என்று கூறினார்.

பிறகும் அவன் சோர்வின்றி சுறுசுறுப்புடன் இருந்ததால் கன்று தாயிடம் பால் குடித்த பிறகு அவற்றின் வாயில் தேங்கியிருந்த நுரையை உண்டு வந்ததாக என்று சிஷ்யன் கூறினான்.

குரு அதையும் தடுத்து நிறுத்தினார் பசியின் வேதனையை பொறுக்கமுடியாமல் எருக்கன் இலைகளை சாப்பிட ஆரம்பித்தான். சிறிது நேரத்திற்கெல்லாம் அவன் உடம்பில் நஞ்சு கலக்க ஆரம்பித்தது அவன் கண் பார்வை பறிபோனது. தள்ளாடிக்கொண்டே பாழடைந்த கிணற்றில் விழுந்தான்.

பொழுது சாய்ந்ததும் மாடுகள் எல்லாம் உபமன்யு இல்லாமல் தாமாகவே ஆசிரமத்தை சென்றடைந்தன உபமன்யு வராததைக் கண்டு குரு கவலையுற்றார். அவனுடைய பக்தியை சோதிக்க விரும்பினேன் ஏதோ கஷ்டத்தில் இருக்கிறான் ஏன் திரும்பவில்லை என வருத்தப்பட்டார். அவர் அவனது பெயரை சத்தமாக அழைத்துக் கொண்டே நாலாபக்கமும் தேடத் தொடங்கினார்.

பாழடைந்த கிணற்றின் அருகில் வந்தவர் மெல்லிய குரலை கேட்டார் எப்படி நீ கிணற்றில் விழுந்தாய் என அவனிடம் கேட்க பசி பொறுக்காமல் எருக்கன் இலைகளை சாப்பிட்டதன் விளைவாக குருடாகி விட்டேன் தட்டுத்தடுமாறி ஆசிரமம் வர முயற்சித்த பொழுது பாழும் கிணற்றில் விழுந்து விட்டேன் என்று பதிலளித்தான்.

கருணையுடன் சிஷ்யனை பார்த்த மகரிஷி அஸ்வினி குமாரர்கள் துதிக்கும் பாகத்தை நீ வேதத்திலிருந்து எடுத்துக் கூறு என்று சொன்னார் ரிக் வேதத்தில் வரும் துதியை குரு கூறியவாரே உபமன்யு ஓதினான் தேவர்களுடைய மருத்துவர்களாக விளங்கும் அஸ்வினி குமாரர்கள் அவன் பக்தியைக் கண்டு திருப்தி அடைந்தவர்களாக அவன்முன் தோன்றினார்கள்.

மாவினால் செய்த அடையை அவனிடம் சாப்பிடக் கொடுத்தார்கள் அவன் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்த போதிலும் குருவிடம் சமர்ப்பிக்காமல் அதைச் சாப்பிட முடியாது என்று பிடிவாதமாக மறுத்து விட்டான் அதை குருவிற்கு காட்டாமலே சாப்பிடச் சொல்லி அஸ்வினி குமாரர்கள் பலவாறு நிர்ப்பந்தித்தார்கள் ஆனால் அவன் தன் கொள்கையிலிருந்து வழுவாமல் உறுதியுடன் இருந்தான். அவனது எல்லையற்ற குரு பக்தியை கண்டு மகிழ்ந்த அஸ்வினி குமாரர்கள் அவனுக்கு மீண்டும் கண்பார்வை கொடுத்தார்கள்.

கிணற்றிலிருந்து வெளியே வந்த உபமன்யு குருவின் பாதங்களில் விழுந்து வணங்கினான் அதன்பின் தனக்கும் அஸ்வினி குமாரர்களுக்கும் நடந்த உரையாடலை அவன் சொன்னான். அவனின் குருபக்தியை கண்டு மகிழ்ந்த குரு பாடங்கள் ஏதும் இன்றியே எல்லா விதமான பதினான்கு வித்தைகள் உன்னிடத்தில் விளங்கட்டும் என்று அவனை ஆசீர்வதித்தார். குருவின் வார்த்தைகள் பலித்தன உபமன்யு யாவரும் போற்றத்தக்க பெரிய மகானாக திகழ்ந்தான்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.