இந்து முன்னணி நிறுவனர் ‘வீரத்துறவி’ ராம.கோபாலன் முக்தி அடைந்தார்!

சற்றுமுன் சென்னை தமிழகம் லைஃப் ஸ்டைல்
gopalji
gopalji

இந்து முன்னணி அமைப்பின் நிறுவனர் தலைவர் ‘வீரத்துறவி’ ராம. கோபாலன் தமது 94 வது வயதில் முக்தி அடைந்தார்.

கடந்த 27ஆம் தேதி மூச்சுத் திணறல் ஏற்பட்ட நிலையில், சென்னை, போரூரில் உள்ள தனியார் மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டார். அங்கு நடந்த பரிசோதனையில் கொரோனா தொற்று இருப்பதாக கூறப்பட்டது. அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப் பட்டு வந்த நிலையில், அவர் செப்.30 மதியம் முக்தி அடைந்தார். அவரது இறுதிச் சடங்குகள் திருச்சி குழுமணியில் உள்ள பாரத பண்பாட்டு பயிற்சிக் கல்லூரி வளாகத்தில் நடைபெறுகிறது.

ramagopalan2
ramagopalan2

சீர்காழியை அடுத்த சட்டநாதபுரத்தை பூர்வீகமாகக் கொண்டவர் ராம.கோபாலன். பாரம்பரியமான வைதீகக் குடும்பத்தில் பிறந்தவர். சிறு வயதில் இருந்தே பாரதப் பண்பாட்டின் மீதும், ஹிந்து தர்ம பழக்கங்களின் மீது ஆழ்ந்த பற்றும் நம்பிக்கையும் கொண்ட இவர், 1940ல் இருந்து ஆர்.எஸ்.எஸ்., இயக்கத்தில் இணைந்து, தீவிரமாக செயல்பட்டு வந்தார்!

நாட்டின் இரண்டாவது சுதந்திரப் போராட்டம் என்று வர்ணிக்கப் பட்ட நெருக்கடி நிலைக் காலத்தின்போது தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து போராட்டங்களில் பங்கேற்றவர்.

பின்னாளில் 1980ல் இந்து முன்னணி அமைப்பை தொடங்கினார். தமிழகத்தில் ஹிந்துக்களின் பாதுகாவலனாகவும், மத மாற்றங்களுக்கு எதிராகவும் குரல் கொடுத்தார்.

ramagopalan
ramagopalan

இந்து முன்னணி அமைப்பு வலுவான நிலையிலேயே தமிழகத்தில் விநாயக சதுர்த்தி ஊர்வலங்கள் தமிழகத்தின் அனைத்து ஊர்களிலும் மிகவும் தைரியமாகவும் வெளிப்படையாகவும் நடைபெறத் தொடங்கியது. தமிழகத்தில் இந்து என்ற உணர்வு மக்களுக்கு ஏற்பட்டு விடாமல் நாத்திக ஆட்சியாளர்கள் நசுக்கி வந்த நிலையில், ராம.கோபாலனின் தைரியமான நடவடிக்கைகள் இந்துக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தியது.

விநாயகர் சதுர்த்தியின்போது இந்து முன்னணி சார்பில் அனைத்து பகுதிகளிலும் நடத்தப்பட்ட ஊர்வலங்கள் ஹிந்துக்களிடம் ஒற்றுமையை ஏற்படுத்தியது. திருமணம் செய்து கொள்ளாமல் துறவு வாழ்க்கை வாழ்ந்த ராம.கோபாலனை ‘வீரத்துறவி’ என்று அழைத்தனர். வீரத்துறவி விவேகானந்தர் கண்ட கனவை நனவாக்கும் முயற்சியில் ஈடுபட்டவர் ராம.கோபாலன்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.