உறைந்த மாசடைந்த உணவில் வாழும் கொரோனா வைரஸ்: சீனா கிளப்பிய அதிர்ச்சி!

அடடே... அப்படியா? உலகம் சற்றுமுன் லைஃப் ஸ்டைல்
frozen-foods
frozen-foods

உறையச் செய்யப்பட்ட மாசடைந்த உணவில் வாழும் கொரோனா வைரஸ் சீனாவில் கண்டுபிடிக்கப்பட்டிருப்பது, பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது

உறைந்த மாசுபடுத்தப்பட்ட உணவு தொகுப்பில் கொரோனா வைரஸ் வாழும் என்றும் தோற்று நோய் ஏற்படுத்தக்கூடும் என்றும் சீனாவின்   சி.டி.சி கூறுகிறது… மாசடைந்த உறைந்த உணவு பேக்கேஜ் மூலம் கொரோனா வைரஸ் உயிர் வாழும் என சீனாவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

கடந்த செப்டம்பர் மாதம் 19 நாடுகளைச் சேர்ந்த 56 நிறுவனங்களில் இருந்த ஊழியர்கள் பலர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனர். இதனையடுத்து அந்நிறுவனங்களிலிருந்து உறைந்த உணவு இறக்குமதிக்கு சீனா தற்காலிகமாக தடை விதித்தது. 

அண்மையில், கிழக்கு சாண்டோங் மாகாணத்தின் முக்கிய நகரான கிங்டாவோவில் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் 8 நோயாளிகள் உட்பட 9 பேருக்கு, கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து கிங்டாவோ நகரில் வசிக்கும் சுமார் ஒன்பது லட்சம் பேருக்கும், கொரோனா பரிசோதனை நடத்த சுகாதாரத்துறை உத்தரவிட்டது.

இதனிடையே புதிய தொற்றுக்கான காரணம் குறித்து சீன நோய்க் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் ஆய்வு செய்து வந்தது. இந்த நிலையில், உறைந்திருக்கும் உணவின் மேற்புறத்தில் புதிய கொரோனா வைரஸ் உயிர் வாழ்வது கண்டறியப்பட்டது. இது உறைந்த உணவு வழியாக உயிர்ப்புடன் இருக்கும்  கொரோனா வைரஸ் நீண்ட தொலைவுக்கு எடுத்துச் செல்லப்பட்டு, பரவ வாய்ப்பு உண்டு  என்று அதிகாரபூர்வமாக ஒப்புக்கொள்ளப் பட்டுள்ளது. இவ்வாறு ஒப்புக்கொள்ளப்படுவது இதுவே முதல் முறை என்று ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது  

உறைந்த உணவுத் தொகுப்பில் இருந்து எடுக்கப்பட்ட சில மாதிரிகளில் கொரோனா மரபணு தடயங்களை சீனாவின் நோய்க் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் கண்டறிந்தது.  எனினும் இந்த மாதிரிகளில் காணப்படும் வைரஸின் அளவு மிகக் குறைவாக இருந்தது. 

செப்டம்பர் மாதம் கிங்டாவோவில் இரண்டு கப்பல் பணியாளர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்தப் பணியாளர்கள் உறைந்த உணவு பேக்கேஜை கையாண்டுள்ளனர்! எனினும் இவர்கள் உறைந்த உணவுத் தொகுப்பால், நேரடியாக பாதிக்கப்பட்டார்களா, அல்லது வழக்கமான கொரோனா தொற்றுக்கு உள்ளானார்களா என்பது குறித்து எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை. எனினும் உறைந்த உணவு பேக்கேஜிங் கையாளும் தொழிலாளர்கள் கடுமையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைபிடிக்குமாறு சீன நோய்த் தடுப்பு மையம் அதன் இணையதளத்தில் வெளியிட்டுள்ள கட்டுரையில் தெரிவித்துள்ளது. 

அதன்படி உறைந்த தயாரிப்புகளை கையாளும், செயலாக்கும் மற்றும் விற்பனை செய்யும் தொழிலாளர்கள் மாசுபடுத்தக்கூடிய தயாரிப்புகளுடன் நேரடி தோல் தொடர்பைத் தவிர்க்க வேண்டும் என்று அது அறிவுறுத்தியது.

கைகளை கழுவாமல் மாசுபடுத்தக்கூடிய வேலைநேர ஆடைகளைக் கழற்றுவதற்கு முன்பு ஊழியர்கள் வாய் அல்லது மூக்கைத் தொடக்கூடாது, தொடர்ந்து சோதனைகளை மேற்கொள்ள வேண்டும் என்று அது தெரிவித்துள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.